முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

101 கனவுகள் - “Why லெனின்?”

முன் குறிப்பு அப்பாவிடம் நண்பனை அறிமுகம் செய்து வைத்தேன்.  “அப்பா, இது லெனின்” அவர் அவனைப் பார்த்து முதலில் சொன்னது: “Why லெனின்?” லெனின் சிரித்துக்கொண்டே “அப்பா வச்ச பேர் uncle” என்று சொன்னான். இது நடந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்னும் அப்பாவை நலம் விசாரிக்கும் போது அவன் “why லெனின்”ஐ மறப்பதேயில்லை. ******* நானும் லெனினும் எனக்கு அறிமுகமில்லாத வேறொருவரும் ஓர் அறையில் உட்கார்ந்துகொண்டு Galapagos போன்ற மனிதர் அண்டியிராத தீவுகளின் உயிரினங்கள் பற்றியும், லெனின் வாழும் ஆஸ்த்ரேலியாவில்  உணவுப்பொருட்கள், பழங்கள், விதைகளின் இறக்குமதிக்கு இருக்கும் கெடுபிடிகளைப் பற்றி இணைத்துப் பேசிக்கொண்டிருந்தோம். பேசிக்கொண்டே லெனின் எழுந்து toilet paper ஒன்றை இயல்பாகப் பற்றியிழுத்துக் கிழித்து, துடைத்துக்கொண்டு வெளியிலே போய்விட்டான். எனக்கு அது எந்த மாதிரியான அறை என்பது அப்போதுதான் உறைத்தது! பொதுக் கழிப்பிடம் என்பதை “ஸாமூஹிக மூத்ரவிஸர்ஜனே”  என்று கன்னடத்தில் மொழிபெயர்த்து வைத்திருப்பதைக் கிண்டல் செய்திருக்கிறேன் - ‘இதென்ன எல்லோரும் க...

101 கனவுகள் - முகவுரை

தூக்கத்தின்போது நாம் காணும் கனவு ஓரற்புதப் படைப்புச் செயல் என்று தோன்றுகிறது.  கனவை எழுதுவதோ அதைப்பற்றிச் சொல்லுவதோ ஒருவிதமான பசப்பு வேலையே. நினைவிலி மனது நிகழ்த்திப் பார்த்துக்கொண்ட வினோத நாடகத்தின் பொழிப்புரையே நாம் கனவைப் பற்றி எழுதுவது. அந்தப் பொழிப்புரைக்கு இயல்பு நடப்புக்களும், நினைவுறு மனம் அடைந்த உண்மை அனுபவங்களுமே அடிப்படை. மேலும் கனவை மனதின் படைப்புச் செயல் என்று கொண்டால் பிரமிள் சொல்லும் "சிருஷ்டி முகூர்த்தம்" கனவின்போதே நிகழ்கிறது. அதை நாம் சொல்லவோ எழுதவோ உட்காரும்பொழுது கல்யாணம் முடிந்து மண்டபத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்துகொண்டிருப்பார்கள். அப்புறம் 'மானே தேனே பொன்மானே' என்று சேர்த்துத்தான் சொல்லவேண்டியிருக்கிறது. மேலும் நிகழுலகின் ஒழுக்கமும் கோர்வையும் (அல்லது அப்படியிருக்கவேண்டிய நிர்பந்தங்களும்) கனவின்போது இருப்பதில்லை. நமக்கோ கோர்வையும், பொருளொழுங்கும் இல்லாமல் பேசவோ எழுதவோ முடியாதபடிக்கு கற்பிக்கப்பட்டுக் கெட்டுக் குட்டிச்சுவராயிருக்கிறோம்.  முந்தாநாள் இப்படித்தான் ஏதோ கனவு கண்டேன். மிகவும் திறமையாக, உயர்ந்த நகைச்சுவையுடன் கூடிய வாக்க...

101 கனவுகள் - 4. கி பி 2050

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க “hovercraft” ஒன்றைச் சோதனை செய்து வருகிறார்கள் என்ற செய்தியைப் படித்த நினைவு இருந்தது. சாலையில் எனக்கு முன்னால் ஒரு கரும்பச்சைக் கண்டெயினர் (பெட்டி மட்டும்) காற்றில் மிதந்துகொண்டு சென்றது. சில இடங்களில் சாலையை விட்டு நன்றாக மேலெழும்பியும் சிலவிடங்களில் சாலையைத் தேய்த்துக்கொண்டும் போனது. இதைத் திடீரென்று ஒரு நாற்சந்தியில் நிறுத்தி வண்டியைத்திறந்து ஒரு வினோத உயிரினத்தை வெளியில் இறக்கினார்கள்.  ஒரு பெண்ணும் உடன் இறங்கி வந்து “வாருங்கள் எல்லோரும் இதைக் கொஞ்சுங்கள்” என்று அதட்டினார். மாடு மாதிரி இருந்தாலும் மனித முகமும் கொம்புமாக படுபயங்கரமாக இருந்தது. இதை எப்படிக் கொஞ்சுவது? பெரியவர் ஒருவர் அருகில் சென்று வருடிக்கொடுத்தார். உடனே அது சிலுப்பிக்கொண்டு ஏதோ மொழியில் திட்டிக்கொண்டே அவரை முட்டித்தீர்த்துவிட்டது.  எனக்கு அளவில்லாத ஆத்திரம். எப்படிப் பொதுவிடத்தில் இப்படிச் செய்யலாம்? உடன் இருந்தவர் சொன்னார், இதுவும் “hovercraft” செய்யும் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘கண்டுபிடிப்பாம்’. ‘எந்திர’ வாழ்க்கை வாழும் நாம் ஒருவருக்கொ...

101 கனவுகள் - 3. கெத்து

ஏதோ வேலையாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். வழியில் ஒரு வீடு. வீட்டிலேயே தட்டி வைத்திருந்தார்கள் - ‘பேக்கரி’ ரொட்டிகளும் ‘கேக்’குகளும். உடன் இருந்த யாரோ சொல்கிறார்கள், அது நல்ல இடம் என்றும், முன்பதிவு இல்லாதவர்களுக்கு ஒன்றும் கிட்டாது என்றும். வீட்டிலே குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிப்போகலாமே என்ற எண்ணத்தில் அழைப்பு மணியை அழுத்தினேன். கதவைத் திறந்துகொண்டு ஓரிளம்பெண் சிரித்துக்கொண்டே வந்தாள். பின்னோடு முண்டா ‘பனியன்’ அணிந்த ஒருவர் வந்தார் - அந்தப்பெண்ணின் தகப்பனாயிருக்க க் கூடு ம். அவரிடம் ஆங்கிலத் துரை யே  வெட்கும் ஆங்கிலத்தில் கேட்கிறேன்: “இங்கிருந்து வாங்கிப்போக ஏதும் கிடைக்குமா?” “நிச்சயமாக. நீங்கள் ஏதும் முன்பதிவு செய்திருக்கிறீர்களா?” இதற்கு நான், “மன்னிக்க வேண்டும். போகும் வழியில் எதேச்சையாக இந்தத் தட்டியைப் பார்க்க நேர்ந்தது, அதனால் வந்தேன்” என்றேன் அவர் கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கண்ணாடியை மூக்கின்மேல் பொருத்திக்கொண்டு “உங்களுக்காக என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன்” என்று உள்ளே போனார். அந்தப் பெண் என்னை உள்ளே உட்கார அழைத...

101 கனவுகள் - 2. கனவில் மிதத்தல்…

இது உண்மைதானா?  எதற்கும் சரிபார்த்துக்கொள்வோம் என்று மறுபடியும் எம்பிப் பார்த்தேன். சரிதான்! ஆனாலும் எவ்வளவு நேரத்திற்கு இது தாக்குப்பிடிக்கும்? கடற்கரையை அடைந்து நீருக்கு மேலாக எம்பிப்பார்த்தேன். நினைத்தபடியே வேலை செய்தது. நடுக்கடலில் பயம் வயிறைச் சுண்டியிழுத்தது. திரும்பிவிடலாம் என்று வலப்புறம் சாய்ந்தேன். சரிப்படவில்லை. இடது புறமாகத் திரும்ப முடிந்தது, அதுவும் கொஞ்சமாக. ஹாண்டில் பார் வளைந்த சைக்கிளை ஒரு மாதிரித் ‘தேற்றி’ ஓட்டிக்கொண்டுபோவதுபோல் இருந்தது. இதற்குள் அக்கரையை அடைந்துவிட்டேன்.  எங்கள் ஊரில் அந்தக்காலத்தில் பொட்டல்காட்டில் முளைத்த புதிய குடியிருப்பு மாதிரி ஓரிடம். தார் போடாத, மாட்டுவண்டித்தடங்கள் மிகுந்து அதுவே பாதையாகிவிட்ட சிறிய சாலை. இடது பக்கம் பார்த்தால் ஓடு வேய்ந்த கடையின் முன்புறம் வாழைத்தாரும், சணல்க்கயிறும் தொங்கிக்கொண்டிருந்தது.  அட! நம்மூர் மாதிரித்தான் இங்கெல்லாம் இருக்கிறது.  ஊர்ப்புறம் வந்தால் தானே உண்மையான ‘வளர்ச்சி’ தெரியும்?  இருந்தாலும் அப்போது நினைத்துக்கொண்டேன் “ஒரு பெருநகரத்தை நேர்த்தியாக கட்டியெழுப்ப...

இரஜினி, இரஞ்சித், அரசியல்

கபாலி வெளியாவதற்கு முன்னால் இயக்குனர் பா. இரஞ்சித்தின் நேர்காணல் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. கபாலி உருவான கதையையும் அதைப்பற்றிய சில தகவல்களையும் சொன்னார். கபாலிக்கு முன்னான அவரின் இரு படங்களும் ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலைப் பேசுவதாகவே இருந்திருக்கின்றன - வெகு சினிமாவிற்குள்ளேயே இதைச் செய்திருப்பதே இரஞ்சித்தின் கலை என்று நான் நினைக்கிறேன். அப்படியல்லாமல் இருந்திருந்தால் அந்தப் படங்கள் ஆவணப்படங்கள் போலாகியிருக்கும். எல்லோரும் துய்க்கும் வண்ணமே அவர் கலைப் படைப்புகள் இருப்பதால், அவை சொல்லும் செய்தி எல்லோருக்கும் எட்டுகிறது. இது நிற்க. "பொழுதுபோக்கு அம்சங்கள்” என்று சினிமாக்காரர்களே வகுத்திருக்கும் சமன்பாடு ஒன்றிருக்கிறது - சண்டை, நகைச்சுவை, நடனம், பாடல்கள், குத்தாட்டம் (ஐயிட்டம் சாங்), என்று. இப்படியான ‘வசூல்’ குவிக்கும் படங்களின் அதிக விலை போகும் சந்தைப்பொருளாக இரஜினி ஆகிவிட்டார்.   அப்படியான நட்சத்திர மதிப்பீடு உள்ள நடிகரை வைத்துப் படமெடுப்பதில் சில சமரசங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட எந்த சமரசங்களையும் தாம் செய்துகொள்ளவில்லை என்று இரஞ்சித் தன் செவ்வி...

இந்திய ஐடி புரட்சியில் என் பங்கு - ஓர் ஐடி குமஸ்தக் குஞ்சாமணிக் குளுவானின் வாக்குமூலம்

கணினியியல் முதுகலைப்படிப்பின் பகுதியாக பாடம் சம்பந்தப்பட்ட திட்டப்பணி (project) செய்யவேண்டி இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) மீத்திறன்கணினி மையத்தின் (SERC) தலைவராக இருந்த (அந்தப்பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்) பேராசிரியர் ராஜாராமன் அவர்களை நண்பனின் உதவியால் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இளங்கலை கணினியியல் படிப்பில் அவர் எழுதிய புத்தகம் ஒன்றுதான் பாடப்புத்தகமாக இருந்தது. பற்பல ஆய்வு மாணவர்களை முனைவர்களாக்கிய பெருமை வாய்த்தவர். அப்படியொரு மாஜி மாணவரான ஒரு முனைவர் / பேராசிரியரை அழைத்து என்னைக்காட்டி "இவனைச் சேர்த்துக்கொள்" என்றார். ஆசிரியர் கையால் இட்ட பணியைத் தலையால் செய்து முடிக்கும் அந்த மாணவப் பேராசிரியர் என்னை ரிஷிமூலம் நதிமூலம் பார்க்காமல் சேர்த்துக்கொண்டார். ராஜாராமன் மென்மையான மனிதர்; மிகவும் அன்பாகப் பேசினார். என்னால் மறக்கமுடியாத  முதல் சந்திப்பு  அது. இன்றைக்குப் பிழைப்பு ஓடுவது அவர் போட்ட பிச்சை. இளங்கலை / முதுகலை என்று ஐந்தாண்டுகளில் 'படித்ததை'விட அந்த ஒன்பது மாதங்களில் நிறையக் கற்றுக்கொண்டேன். ஐந்து மாதங்களில் பல்கலைக்கு வேண்டிய வேலை முடிந்...

விறகுகள், மண்ணெண்ணெய், அப்புறம் கொஞ்சம் சாணி - நினைவலைகள்

உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு, உழைப்பில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் சித்திரங்கள் பகிரப்பட்டன. அதிலே சாணி தட்டும் பெண்ணின் படம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. இது சிறுவயது நினைவுகளைக்கிண்டிவிட்டது. Inspired by @drvivekm 's #WomenatWork series, digging thru my archives to add to it 3: cow dung cake maker, #Kolkata pic.twitter.com/R8IhX4p9Sd — Arati Kumar-Rao (@AratiKumarRao) March 12, 2017 கூட்டுக்குடும்பத்தில் பாட்டியின் பராமரிப்பிலேயே சமையலறை இருந்தது. மாமா, பெரியம்மா, மற்றும் அம்மா ஆகியோர் வேலைக்குப் போய் அவரவர் பங்குகளைக் கொடுத்து ('என்னுடையதை நீ எப்படி எடுக்கலாம்?' என்று சோப்புக்கும் பற்பொடிக்கும் சண்டை போக) வீட்டுச் செலவு நடந்துகொண்டிருந்தது. இப்படியாக, உழைக்கும் பெண்களின்சித்திரம் சிறுவயதிலேயே எனக்குள் பதிந்துவிட்டிருந்தது. வீட்டுவேலைகள் போக பாட்டி வரசித்தி விநாயகர் கோயில் வாசலில் நின்று யாருடனேனும் பேசிக்கொண்டிருப்பாள். பேசிக்கொண்டிருந்தாலும் செட்டிபாளையம் சாலையில் போகும் மாட்டுவண்டிகளின் மேல் பாட்டி கவனமாக இருப்பாள். மாடுகள் சாணிபோட்டால் அதை ஓடிப்போய்ச் ...

101 கனவுகள் - 1. நேற்றை கனவு

யாரோ ஒரு பையன். அவனுக்கு நான் பூகோளப் பாடம் சொல்லிக்கொடுத்தில் நிறைய மதிப்பெண்கள் வாங்கிவிட்டான். எனக்குக் காட்டுவதற்காக அவன் 'ரிப்போர்ட்'டை என்னிடம் கொடுத்தான். மீனாவின் கிறுக்கலுக்காக நான் அவளுக்குக் கொடுத்த 80 பக்க நோட்டு மாதிரி இருந்தது. பக்கங்களைப் புரட்டுகிறேன் - இவன் எவ்வளவுதான் வாங்கியருப்பானென்று பார்ப்பதற்காக. என்னவோ குறிப்புகள், கிறுக்கல்கள் என்று பக்கங்கள் தீர, மதிப்பெண் பட்டியல் வரவேயில்லை. அப்போது யோசித்தேன்: "இதுவே கனவு. இதிலே நாம் 'நினைத்த' மதிப்பெண் இருப்பதாக வரவேண்டுமெனில் கனவினின்றும் வெளிவர வேண்டும். அதனால் அந்தப்பக்கம் எனக்குக் கிட்டப்போவதில்லை. மேலும் உயரத்திலிருந்து விழுதல் போல இந்தத் தீராப் பக்கங்ககளைப் புரட்டுதல் என்பது கனவினின்றும் மனம் விழித்துக்கொள்ளச் செய்யும் ஓர் உத்தி" உடனே கண்விழித்து எழுந்துவிட்டேன்.

மருந்து

பெங்களூர் ஜெயநகர் மூன்றாம் பிளாக்கின் சாலைச் சந்திப்பில் (இங்கே எல்லாமே 'சர்க்கல்' தான்) நாகார்ஜுனாவுக்கும் மூலைப் பெட்டிக்கடைக்கும் நடுவே இருந்தது மஞ்சுநாதா (என்று நினைக்கிறேன்) ஃபார்மசி. பழைய பெயர்ப்பலகை. கடையினுள்ளே அப்போத்திக்கரிகள் காலத்து மேசை, கண்ணாடி/மரக்கூண்டுகளுக்குள் மருந்துகள் என்ற அமைப்பு. மேசையின் அருகிலே இருக்கையில் அறுபதை நெருங்கும் வயதுடையவர் என்று நாம் ஊகிக்கக்கூடிய பெரியவர். மெலிந்த தேகம், அதிக உயரமில்லை, வெளுத்த தலை முடி, சின்னதாக கிராப் வைத்திருப்பார். கையில் விரித்து வைத்த ப்ரஜாவாணி பத்திரிகையை படித்த வண்ணம் இருப்பார். ஒரு முறை அவசரமாக மாத்திரை வாங்க வேண்டியிருந்ததில் மருந்தகம் நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன். இந்தக் கடை தென்பட்டது - வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறதே என்று கடையில் மருந்தின் பெயரைச் சொல்லிக்கேட்டேன். பத்திரிக்கையினின்றும் தலையை எடுத்து சிரித்துக் கொண்டே சொன்னார் "இங்கே கிடைக்காது (அருகில் உள்ள பெரிய) மருந்தகத்தில் கிடைக்கும்". அப்போதிருந்த அவசரத்தில் ஓடிவிட்டேன். ஆனால் அங்கே ஒரு மருந்தகம் இருப்பதை மனம் குறித்துவைத்துக் கொண்டது. அப்ப...

அழகாயிருப்பது

உலகின் புகழ்பெற்ற படைப்பாளிகள் சிலரின் தினசரி ஒழுங்குகளை இங்கே கொடுத்திருக்கிறார்கள் . நானும் இம்மாதிரி ஏதாவதொன்று ஆக ஆசைப்படுவதால் ஆர்வத்துடன் படித்தேன். இதிலே எல்லாவற்றையும் விட என் கவனத்தைக் கவர்ந்தது விக்டர் ஹியுகோவின், தினசரி முடிதிருத்துபவரிடம் போகும் வழக்கம். கடந்த இரண்டாண்டுகளில் முடி வெட்டிக்கொள்ளப் போனால் ஒன்று, இரண்டு என்று மண்டையைக் காட்டி இலக்கம் சொல்வது பழகியிருந்தது. இயந்திரத்தில் அந்த இலக்கத்துக்கேற்ற வில்லையைப் போட்டு மழித்தால் பத்து நிமிடங்களில் வேலை முடியும். உபரியாகப் பல வசதிகளும்: இரண்டு மாதங்களுக்கு முடிவெட்டிக்கொள்ள வேண்டியதில்லை;  தூங்கியெழுந்தவுடன் பரட்டைத் தலையை ஒழுங்கு செய்ய நேரம் எடுத்துக் கொள்ளாமல் காற்சட்டையை இழுத்து மாட்டிக்கொண்டு உடனே பால் வாங்கவோ, மகளைப் பள்ளிக்கூடத்தில் விடவோ ஓடலாம்; பயணங்களில் சீப்பு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியதில்லை; கண்ணாடி பார்க்க வேண்டாம்; இரவுப்பயணங்களில் தூக்கத்துக்கு நடுவே தலையைக் கோதி சரிசெய்ய வேண்டாம்; இப்படிப் பல... இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் வீட்டிலே இதற்கு பலத்த எதிர்ப்பு உண்டு. ("ஏன் இப்படிக் கரண்டீட்டு வர்ற...

தமிழில் கிரந்தம் தவிர்ப்பது பற்றி...

தமிழ் எழுதுவதில் இயன்றவரை கிரந்தம் தவிர்க்கலாம் என்று முடிவெடுத்திருந்தேன். இது தமிழ் வெறியினாலோ பிறமொழிக் காழ்ப்பினாலோ உந்தப்பட்டதல்ல. தற்போது புழக்கத்தில் இருக்கும் தமிழ் மொழி தமிழல்லாத மொழிகளின் பல சொற்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இது பல்லாண்டுகளாக இயல்பாக, பையப்பைய நடந்தது - யாரும் திட்டமிட்டுச் செய்யவில்லை என்பது தெரிந்ததே. இம்மொழியின் தொன்மையையோ, செம்மைத் தன்மையையோ, பிற பெருமைகளையோ முதன்மைப்படுத்தாமல், ஒரு தனித்தன்மை வாய்ந்த, (பிறமொழிகளைப்போலவே) நம் தாய்மொழி என்கிற அளவில், நாம் மறந்துவிட்ட தமிழ்ச்சொற்களை ஞாபகப் படுத்திக்கொள்ள வேண்டும், அவற்றை நம் புறக்கணிப்பினின்றும் மீட்கவேண்டும் என்பதே என் குறிக்கோள். கிரந்தத்தை ஒழித்தலே நம் கடன் என்று எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்த முனைவதில் எனக்குச் சில மனத்தடைகள் உண்டு. அவற்றில் முதன்மையானது பெயர்களைத் தமிழ்ப்படுத்துவது. நாம் நம் பெயர்களைப் பெருமையோடு தாங்குபவர்கள்; தமிழ்ப் பெயர்களையும் பிற பெயர்களையும் பெயருக்குச் சொந்தக்காரர் எழுதுவது போலேயே எழுதவேண்டும் - அது கிரந்தம் கலந்ததானாலும்.  எழுத்துப்பிழைகளையும் ( இருப்பதாக நாம் கருதினாலும்...

வெண்பா வாரம்

மரபுக் கவிதைகள் மேலே புதிய ஆர்வம். யாப்பிலக்கணத்தைப் பார்த்தால் 'கோலம் வரைந்தபின் இடப்பட்ட புள்ளிகள்' என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் (கவிதை) மரபை மீற விழைந்தவர்களுக்கு யாப்பு ஒரு ஆயத்த வடிவமாகவும் (template) கவிதை எழுதுதல் என்பது இந்த வடிவத்திலே சொற்களைச் சொருகி நிரப்புவதாகவும் இருக்கிறது. இதிலே 'சிருஷ்டி முகூர்த்தத்தின் லயம் தப்பாமல்' மனம் ஓடிய திக்கெல்லாம் ஓடி கவிதையைப் பிரசவிக்கும் உன்னத 'முகூர்த்தத்திலே' கணக்கு பிணக்கு சுணக்கு என்று தொடைகளைத் தேடி ஆயத்தவடிவத்தில் சொற்களை எப்போது சொருகுவது? அப்படிச் செய்வது கவிதையை மலினப்படுத்திவிடாதா? பிரமிள் எழுதியது: "பாரதி, யாப்பு அணிகளை மனசில் சப்பி, பிறகு குந்தியிருந்து வார்த்தைகளை அங்கங்கே கொட்டிப்பிரித்து 'பாட்டுக்கட்ட' வில்லை. காளமேகமோ யாரோ ஒரு தடவை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சோழ நாட்டுத் திருக்குடந்தையைச் சேர்ந்த முன்குடுமிக்காரனின் எச்சில் சோறு தன் இலையில் அவன் பிசகால் விழுந்ததற்கோ எதற்கோ சுர்ரென்று கோபம் வர, சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப் பொருக்குதிர்ந்த வாயா புலையா - திருக்...

ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்?

செயமோகனின் கட்டுரையை முன்வைத்து: செயமோகனின் கட்டுரைகளில் காணப்படும் பொதுமைப்படுத்தல்கள், தம் சொந்தக் கருத்துகளை முடிவான உண்மைகளாக முன்வைத்தல், பேசுபொருள் எதுவானாலும் தன்னையே முன்வைத்தல், தற்பெருமை பேசுதல், என்பவற்றைக் கடந்து, என்னால் அவர் கருத்துகளை சமனான மனநிலையில் அணுக முடிவதில்லை. எழுத்துச்சிக்கனமின்மையும் அவரைப் வாசிப்பதில் எனக்கொரு இடரே. இவற்றைத் தாண்டி இக்கட்டுரையை முழுதும் படித்து முடித்தேன். செயமோகனின் நீண்ட கட்டுரையில் சில விசயங்களில் எனக்கு நல்ல உடன்பாடு உண்டு. அதில் முக்கியமானது இது: “பிராமண வெறுப்பு என்பது தலித்வெறுப்பின் மறுபக்கம். தலித் வெறுப்பு உள்ளடங்கி இருக்கிறது. பிராமண வெறுப்பு வெளிப்படையாக முற்போக்கு முகத்துடன் முன்வைக்கப்படுகிறது. பிராமண வெறுப்பு கொண்டவன் உறுதியாக தலித் வெறுப்பாளனே. தலித் வெறுப்பை கைவிடுபவன் பிறப்பு அடிப்படையில் எவரையும் வெறுக்கமுடியாதவன் ஆகிறான். அவனால் பிராமணர்களையும் வெறுக்கமுடியாது.” கட்டுரையின் பல விசயங்களில் விமரிசனமுண்டு என்றாலும், அதை மேற்சொன்ன - எனக்குச் செயமோகனை வாசிப்பதில் உள்ள பிரச்சனை - சார்ந்தது என்பதால் அதைச் சொல்லப்போனால் இது செய...

உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு

மார்சல் து சாம்ப்பின் ' அருவி ஊற்று' (Marcel Duchamp - "Fountain") என்கிற கலைப்பொருள் 1917 ல் நியூயார்க்கி ல் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்தக் கலைப்பொருள் வேறொன்றும் அல்ல - ஆண்கள் கழிப்பறைகளில் நாம் பார்க்கும் சிறுநீரேந்தி தான் இது. இதை ஒரு கலைப் பொருளாக்க இந்தக் கலைஞன் செய்தது அதை வழக்கத்திற்கு மாறான ஒரு கோணத்தில் இருத்தியதும், தன் கையொப்பத்தை (புனைப்பெயர்) இட்டதும், அதற்கு ' அருவி ஊற்று' என்ற தலைப்பிட்டதுமே.  கலைசார்ந்த ஒரு சோதனை முயற்சியாகவும், முதல் உலகப்போரின் முடிவில் ஐரோப்பாவில் தோன்றிய தாதாயிசம் என்னும் எதிர்கலையியக்கத்தைச் சார்ந்தும் இது புரிந்துகொள்ளப்பட்டது என்பது இணையத்தில் தேடினால் எளிதில் கிட்டிவிடும் தகவல்களே. (படம்: விக்கிபீடியா)  ***  1970-80 களில் (ஒரு தொன்மையான காலத்தைக் குறிப்பிடவோ, அதிரடியான தொடக்கத்தை இந்தப் பத்திக்குக் கொடுக்கவோ இந்த ஆண்டுகளைக் குறிப்பிடவில்லை) மனித எத்தனத்துடன் பராமரிக்கப்படும் மலப்புரையையே எங்கள் வீட்டில் உபயோகப் படுத்திவந்தோம். ஒரு சீமெந்து மேடைமேல் குத்தவைத்து உட்கார்ந்து கழிக்கும் மலம் கீழே விழுந்து ஒரு தளத...

சினிமா பிரபலம் மறைவுக்கு எழுத்தாளர் அறிவுக்குஞ்சு இரங்கல்

நேற்று மதியம் நண்பர் ஜாலி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் - யோகி மாமா நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். நான் சாதாரணமாகச் செல்பேசியை உபயோகிப்பதில்லை. இப்போதெல்லாம் விமானத்தில் ஏறி சென்னையில் இறங்கும் போது என்னைக் கொணர வருபவர்கள் அழைப்பதற்காக இதை வைத்திருக்கிறேன். என் ஏழு வயது மகன் பராந்தகன் தான் குறுஞ்செய்தி வந்த விபரத்தைக் கூறினான். நான் உடனடி காரில் ஏறிக்கொண்டு கொச்சி விமானத்தைப் பிடிக்க வேண்டியிருந்ததால் கிளம்பிவிட்டேன். இன்று காலை ஜாலி மறுபடியும் தொலைபேசி யோகி மாமா காலமாகிவிட்டதைத் தெரிவித்தார். நான் மலையாள இயக்குனர் பிஜாயோடு இருந்தேன் - இருவரும் யோகியின் இழப்பை துக்கம் கொண்டாடினோம். யோகி நெகிழ்த்தவைக்கும் கலைக்குச் சொந்தக்காரர். ஜாலியின் சமீபத்திய கட்டுரை ஒன்றே யோகியின் கண்டுகொள்ளப்படாத கடைசி நாட்களில் அவரது தன்னம்பிக்கையை மீட்டு, தன்னை மாபெரும் கலைஞனாக கருதிக்கொள்ள வைத்தது. அந்த வகையில் இக்கலைஞனை ஒற்றைக்கட்டுரையில் மீட்டெடுத்த பெருமை ஜாலியைச் சேரும். அதற்காக அவருக்கு என் நன்றிகள். மிகையுணர்ச்சிக்கும், கலையடர்த்திக்கும் இடைப்பட்ட ஒரு மெல்லிழையை யோகி பிடித்துக் கொ...

’பருப்’பிசை

திரையிசையை (பரப்பிசை என்று சொல்லமாட்டேன் - இப்படியாகத்தானே அப்பிரகாம் பண்டிதர் வழிவந்தவர்கள் இசைக்கான தமிழ்வார்த்தைகள் மட்டுமல்லாது, தற்காலத்தமிழே அவர்கள் கண்டெத்தியதுதான் என்று பீற்றிக்கொள்ள அவகாசம் கொடுக்கமாட்டேன்) மரபிசை இலக்கணங்களைக் கொண்டு அளவிடவோ விமர்சிக்கவோ கூடாது என்பது தெளிவானவொன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் மரபிசை ரசனையை / அனுபவத்தை புறவயமான புண்ணாக்கு இலக்கணம் சார்ந்தது மட்டுமே என்று குறுக்குவது என்னே மடமை. மரபிசையோ மறுப்பிசையோ (நான் மட்டும் தமிழிசைக் கலைச்சொல்லகராதிப் புகழ் பெறவேண்டாமா?) எதுவானாலும், நுகர்வுத்தன்மையும் அதனாலான உணர்வெழுச்சியும் அந்தரங்கமாகவே நடைபெறுகிறது. ’மச்சானைப்பாத்தீங்களா’ வுக்கு பேருந்தினின்றும் இறங்கவைக்கும் உணர்வெழுச்சிதான் மரபிசை கேட்டுக் கண்ணீர்மல்கவும் வைக்கிறது. இலக்கணம் தெரிந்ததால் மட்டுமே மரபிசையை விமரிசிக்கவோ அனுபவிக்கவோ முடியாது. இன்னும், எந்த இசைவடிவமும் சில அடிப்படை இலக்கண ஒழுங்குகளுக்குள்ளாகவே அமைகிறது - அதனாலேயே இசை இசையாகிறது. ஆக, இசை நுகர்வும் விமர்சனமும் மரபிசை, திரையிசை பேதமின்றி தன்னனுபவம் சார்ந்த வ்யக்திபரமான (அகவயம் என்றெழுதக...

எழவு

அதாகப்பட்டது , இவர் தன்னை சமூகப் போராளியாகவும், ஜனநாயக (பஹுஜன) விரோதியாகவும் காட்டிக் கொள்வதால், இவரின் பிரதி சந்தேகதிற்குரியதாகியும், அதற்கு இவர் பெற்ற புக்கர் பரிசானது இவர்தம் கருத்த சுருண்ட தலைமுடி மற்றும் செம்பொன் வண்ணக் கண்களைக் காட்டி மயக்கி வாங்கியதெனவும் ஆகின்றது தெரிந்ததே. இப்பவும் இவர் இந்தத் தகாத செயல்களைச் செய்வதில், இவரது தழுவிஎழுதும் படைப்புத் திறன் கூட பாதிக்கப்பட்டிருப்பது இவர் இன்னொரு புத்தகத்தைத் தழுவி எழுதாததிலிருந்து புலனாகிறது. மற்றபடி தழுவல் கொழுவல் சமாசாரங்களில் உண்மை இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள நான் முயற்சிக்கவில்லை. ஆனால் விமரிசனங்கள் என்பன என்னைப் பொறுத்த வரையில் தனி நபர் விருப்பு வெறுப்பு சார்ந்தவை - அதாவது இந்த படைப்பாளியாகிய நபரைப் பற்றிய விருப்பு வெறுப்பு சார்ந்தவை என்பது என்னுடைய இந்த சொத்தைப் பதிவிலிருந்து உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நம் சொந்தக் காரியங்கள் சுமூகமாக நடக்கும் வரையில், எதைப்பற்றியும் தீவிரமான ஈடுபாடோ எதிர்ப்போ இல்லாத ஜனநாயக அணுக்கப் போக்கு இருந்தால் படைப்புத் திறனும் பெருகும், நாடும் சுபிக்ஷமாக இருக்...

சும்மா ...

வேலைத் திரக்கிலையோ இல்லை அந்த சாக்கிலையோ  - தினமும் மறக்காமக் கைத்தொலைப்பேசியில கூப்பிட்டு “சும்மா தான் மச்சான் அடிச்சேன்” ன்னு சொல்லற நண்பன் அழைப்பையே எடுக்க முடியல. அப்புறம் கூடடைந்து குஞ்சு குளுவான்களோட குலாவறதுல இன்ன பிற நட்புகள், சொந்தங்கள் யாருக்கும் ஒரு தொலைபேசியோ கடுதாசோ கூடப் போடுறதில்லை. இதுகூடப் பரவாயில்லை - பேருந்து நிலையங்கள், இல்லை பேரங்காடிகளின் முன்னால நடந்து போறவன நிறுத்தி கடன் அட்டை விக்கவோ, நிதி திரட்டவோ வேண்டி ‘எப்படியிருக்கீங்க இன்னைக்கு?” ன்னு கேக்கிறவன் கிட்டக் கூட ‘நான் அவசரமாப் போறேன்’ ன்னு சொல்லாமச் சொல்லி... இப்படி மனுசங்க கூடப் பேசறதுக்குண்டான வாய்ப்புகளை எல்லாம் விட்டிட்டு, புது ப்ளாகு மட்டும் நெறையத் திறந்து, ட்விட்டர் அக்கவுண்டு வைச்சு என்னத்தப் பண்ண? Posted via email from Kannan's posterous

கட்டற்ற...

இந்த வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து இன்னொரு முறை வாழ நேர்ந்தால் என்ன செய்வேன்? என்று கேட்டால் 'ஒண்ணையும் மாத்த மாட்டேன்' என்று ஒரு புனைச் சுருட்டும் காட்ட மாட்டேன். அசட்டுத் தனங்களின், ஏமாற்றங்களின், விரக்திகளின், தணியா வேட்கைகளின், மற்றும் இந்தமாதிரி பலவற்றின் தொகுப்பாகவே தெரிகிறது வாழ்க்கை. நம்மைப் பற்றிய நமதானதும் பிறரதுமான எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்வதே பக்குவப்படலின் ஒரு முக்கிய அலகாகத் தெரிகிறது இப்போது. இந்த அனுபவ ஞானத்தோடு இன்னொரு முறை வாழ்ந்தால் தான் என்ன கேடு? ~~~ சுசீலா, சச்சிதானந்தம் பிள்ளை தொடங்கி, கண்ணாயிரம் பெருமாள் என்று நீளும் "மன நிழல்களின்" பாரம்பரியத்தில் நானும் மாதவக் கைமள், கோவிந்தன் நம்பூதிரி என்று (ஏனோ மலையாளப் பெயர்களே நினைவுக்கு வருகிறது) ஒன்றிரண்டை அவிழ்த்து விடுவோமா என்று யோசிப்பதுண்டு. நீரும் நெருப்பும் - இரண்டு எம்.ஜி.ஆர் - ஒருவன் முரடன், ஒருவன் சாது. இல்லை - தெரியாமல் "பாரம்பரியம்" என்று வந்துவிட்டது. "அதைக் காப்பியடித்து" என்று வைத்துக்கொள்வது தான் சரி. ~~~ மேலே தட்டச்சுவது கடினமாக இருக்கிறது - தூக்கம் வருகிறது. கொஞ...