முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ்

பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனிடம், இரண்டு விரல்களைக் கத்தரிபோல் வைத்துக்கொண்டு “ட்வென்டி ருபீஸ்”, எனவும், ப.த.தடியன் முகம் கோபத்தில் விகாரமடையும் நேரம் தெய்வாதீனமாக பச்சை விளக்கெரிய, நான் வண்டியை வீலிங் பண்ணாத குறையாய் கிளப்பிக்கொண்டு விரையும்போது யோசித்தேன், என்னையும் நம்பி இவன் சிறுவயதிலிருந்தே அக்கம்பக்கத்தாரிடம் “எங்கண்ணன் வந்துட்டான்டா, இப்ப வாங்கடா பாக்கலாம்” என்று “இருகை வேழத்து, திண்டோள் தடக்கை”யன்களை  சண்டைக்கு இழுக்கும்போது போது நான் பயத்தில் நடுநடுங்குவதை, என் மனம் பதைபதைப்பதை இந்தப் பாதகன் அறிவானோ என்னவோ, தோள்களின் மேலே என்னைவிட நிலையான தலையை உடையவன் என்று பெயர் வாங்கிய இந்த மண்டையன், அன்றொரு நாள் நாங்கள் வாண்டுகளாக இருந்த சமயம், வெயிலில் விளையாடக்  கூடாதென்ற வீட்டுத்தடையில் இருந்த ஒரு பகற்பொழுதில் கட்டிலின் கீழே கவிழ்த்திருந்த செம்புக்குடமொன்றை எடுத்து நான் தாள ஜாலங்களுடன் கடம் வாசித்ததை என்  வீட்டில் இருப்போர் பாராட்ட, இவன் அதே கட்டிலின் கீழே இருந்த பித்தளைத் தவலையை  எடுத்துக்கொண்டு தானும் வாசிக்க முயன்றாலும், கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியாலும், அப்புறம் என் செம்புக்குடத்தின் நாதம் வராததாலும்,  சீக்கிரம் உற்சாகமிழந்து,  சற்றே வாய் அகன்ற பித்தளை குடத்தை வைத்துக்கொண்டு என்னை மிஞ்ச என்ன செய்யலாம் என்று இவன் ஆராய்ந்ததில், அதைத் தலையின் மேல் கிரீடம் போல அணிந்துகொள்ளலாம் என்று கண்டுபிடித்து அவ்வாறு நிலைக்கண்ணாடியின் முன்னால் நின்று அழகு பார்த்த போது, அட, நமக்கு அந்தக்குடம் கிடைத்திருக்கலாம் என்று நானே ஆசைப்பட, அவனோ தன் கிரீடத்தை உலகுக்குக் காட்டவென வெளிக்கிட்டு வரசித்தி விநாயகர் கோயில் வாசலில், செட்டிப்பாளையம் ரோட்டில் போகும் மாட்டுவண்டிகளை, மாடு சாணம் போட்டால் எடுக்கவேண்டி நோட்டம் விட்டவாறு, கூடியிருந்த அக்கம்பக்கத்தாரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்த பாட்டியிடம், "பாட்டி, பாரு ராஜா மாதிரிக்கிரீடம்!" என்று காட்டப்போய், குடத்தை வைத்து விளையாடுபவனைத் திட்டச் சரியான வசவுகளைத் தன் சொற்களஞ்சியத்தில் பாட்டி தேடிக்கொண்டிருக்கும்போதே, விபரீதமாய்த் தலையிலிருந்த குடம் நழுவிக் கழுத்தில் அமர்ந்து தலையை விழுங்கிவிடவும், பாட்டியும் அருகிலிருந்தவர்களும் குடத்தை இவன் தலையிலிருந்து எடுக்க முடியாமல் திண்டாடவே, அங்கே சிறு கும்பல் சேர்ந்து, ஆளுக்காள் குடத்தை (அல்லது) இவன் தலையை வெளியே எடுக்க யோசனை சொன்னதை வைத்து, ஒராள் இவன் தோள்களை இறுக்கிப்பிடிக்க மற்றோராள் குடத்தை இழுக்கவென நடந்த முயற்சியில், பிரிக்க முடியாதது தலையும் குடமும் என்று தருமிக்கு சொன்ன கணக்காய் குடம் 'கிச்'சென்று பொருந்தியிருக்க, அடுத்த வித்தகர் சொன்ன உபாயத்தைக் கைக்கொண்டு குடத்தை அப்படியும் இப்படியுமாக ஆட்டி எடுக்கப்போய், ஆர நவமணி மாலைகளாட, கங்கை இளம்பிறை செஞ்சடையாட, என்று குடத்துடன் தலையும் சேர்ந்தாட, இவன் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு கல்லுப்பிள்ளையார் மாதிரி நிற்கவே, வெள்ளலூர் ரோட்டு முனையில் புதிதாய் பட்டறை போட்டிருந்த கொல்லர் தன் ஆயுதங்களுடன் குடத்தை வெட்டி எடுக்க முன்வந்தபோது, பாட்டி "ஐயோ, என் தவலை போச்சு" என்று வாய்விட்டலறிய தருணத்தில், மேற்சொன்ன வித்தகர்-1ம், வித்தகர்-2ம், தத்தம் உத்திகளை ஒன்றிணைத்துப் புதிய உத்தியைக் கையாண்டதில் குடம் ஒருவழியாக வெளிவந்ததும், அதை முதலில் பத்திரப்படுத்திக்கொண்ட பாட்டியின் கலைச்சொற்களஞ்சியம் திறந்து சோனாமாரியாகப் பொழியத் துவங்கியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், இந்த விபத்திலிருந்து ஆபத்தின்றித் தப்பியது பித்தளைக்குடம் தான் என்பதால் இவன் இப்படி "ட்வெண்டி ரூபீஸ்" மாதிரித் தலையில் ஏதாவது குடத்தைக் கவிழ்த்துக்கொள்ளும்போதே இப்போதெல்லாம்  நான் உஷாராகிக் குடத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.  

---

Bohumil Hrabal என்கிற செக் (Czhec) எழுத்தாளரின்  புத்தக அறிமுகம் இணையத்தில்  கிடைத்தது. அவரைப்பற்றித் தேடியதில் வினோதமாக அவர் ஒரே நீள்வாக்கியத்தில் அமைந்த நாவலை எழுதியுள்ளார் என்று தெரிந்தது (அம்மாதிரி இரண்டை எழுதியுள்ளார்). அதிலொன்று Dancing  Lessons For The Advanced In Age - 1964ல் இவர் சோதனை முயற்சியாக எழுதியது. இதைப் படித்துக்கொண்டிருக்கிறேன். 130 பக்கங்கள். இதை  ஒரே வாக்கியமாக இருக்கும் வகையில் நிறுத்தக்குறி இல்லாமல் எழுதியிருக்கிறாரே தவிர தொடர்புச் சொற்கள் இல்லாமலேயே நிறைய வாக்கியங்களைக் கோர்த்திருக்கிறார். கதைசொல்லி தன் வாழ்க்கை வரலாற்றைச் சில பெண்களுக்கு (படு வேடிக்கையான மொழியில்) சொல்வதாய் அமைந்திருக்கும் கதையில் வாக்கியங்கள் சில இடங்களில் கோர்வையாகவும், முற்றிலும் வேறு தகவல்களை சொல்லும் இடங்களில் கோர்வையின்றி, தொடர்புச்சொற்களின்றி, வெறும் காற்புள்ளிகளைக்  கொண்டு கோர்க்கப்பட்டிருக்கிறது. இந்த இடங்களில் காற்புள்ளியை நாம் நிறுத்தக்குறியாகவும் வாசித்துக்கொள்ளலாம். புத்தகத்தை நீங்கள் இங்கே படிக்கலாம். 


இதன் தாக்கத்தில் முயன்றதுதான் மேலேயிருப்பது. இதைத் தமிழில் இதற்கு முன்னால் ஆயிரம்பேர் முயன்றிருப்பார்கள். இதுதான் என்னுடைய 'டக்கு'.


கருத்துகள்

Sri இவ்வாறு கூறியுள்ளார்…
குடம் சம்பவம், ஆண் பாவம் பாண்டியராஜன், தவக்களை காமெடி சீனை ஞாபகப்படுத்தியது
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
ஆகா! நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு பின்னூட்டம்! நீவிர் வாழ்க!
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
அதே கண்ணன் எழுத்து. முற்றுப்புள்ளி எப்போது வரும் என்ற்ச் ஸ்மரணை இன்றி வாசித்தேன் �� அன்றைய தமிழ் வலை நாட்களை அசை போட்டபோது, இன்று ஏதோ உங்கள் (& தேசிகன்) ஞாபகம் வந்தது.
நலம். நலமறிய ஆவல். நன்றி.
என்றென்றும் அன்புடன்
பாலா
Balaji_ammu.blogspot.com
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி பாலா. நலமே...

இந்தப் பின்னூட்ட உரையாடல் என்னை தொண்ணூறுகளின் இறுதிக்குக் கொண்டுசென்றுவிட்டது :)

இன்னும் தவிர்க்க முடியாத அரிப்பைச் சொறிந்து கொள்ளவே இங்கே எதையேனும் தட்டி வைக்கிறேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...