முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

101 கனவுகள் - முகவுரை

தூக்கத்தின்போது நாம் காணும் கனவு ஓரற்புதப் படைப்புச் செயல் என்று தோன்றுகிறது. 


கனவை எழுதுவதோ அதைப்பற்றிச் சொல்லுவதோ ஒருவிதமான பசப்பு வேலையே. நினைவிலி மனது நிகழ்த்திப் பார்த்துக்கொண்ட வினோத நாடகத்தின் பொழிப்புரையே நாம் கனவைப் பற்றி எழுதுவது. அந்தப் பொழிப்புரைக்கு இயல்பு நடப்புக்களும், நினைவுறு மனம் அடைந்த உண்மை அனுபவங்களுமே அடிப்படை. மேலும் கனவை மனதின் படைப்புச் செயல் என்று கொண்டால் பிரமிள் சொல்லும் "சிருஷ்டி முகூர்த்தம்" கனவின்போதே நிகழ்கிறது. அதை நாம் சொல்லவோ எழுதவோ உட்காரும்பொழுது கல்யாணம் முடிந்து மண்டபத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்துகொண்டிருப்பார்கள். அப்புறம் 'மானே தேனே பொன்மானே' என்று சேர்த்துத்தான் சொல்லவேண்டியிருக்கிறது. மேலும் நிகழுலகின் ஒழுக்கமும் கோர்வையும் (அல்லது அப்படியிருக்கவேண்டிய நிர்பந்தங்களும்) கனவின்போது இருப்பதில்லை. நமக்கோ கோர்வையும், பொருளொழுங்கும் இல்லாமல் பேசவோ எழுதவோ முடியாதபடிக்கு கற்பிக்கப்பட்டுக் கெட்டுக் குட்டிச்சுவராயிருக்கிறோம். 

முந்தாநாள் இப்படித்தான் ஏதோ கனவு கண்டேன். மிகவும் திறமையாக, உயர்ந்த நகைச்சுவையுடன் கூடிய வாக்கியம் ஒன்றைச் சொல்லி வெடிச்சிரிப்புடன் தூக்கம் கலைந்து கண்விழித்தேன். யோசித்துப் பார்த்ததில் மிக மொக்கையான, மொண்ணையான எதையோ சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. இப்படி நினைவு மனம் எண்ணிப் பார்க்கும் வாக்கியத்தைவிட "அப்பனுக்கும் பொண்ணுக்கும் அப்படியென்ன தூக்கத்தில உளறல்?" என்ற பழிக்குக் காரணமான வாக்கியம் உண்மையில் உயர்ரக நகைச்சுவையாய் இருந்திருக்குமோ? 

நினைவிலி மனம் படைக்கும் இக்கனவுகளை எழுதுவது வேறொரு படைப்பு நிகழ்வாகப் பட்டது. படிக்கச் சுவையாக இருப்பதாக நண்பர்கள் ஏற்றிவிட்டிருக்கிறார்கள். 101 அரேபிய இரவுகள் மாதிரி 101 கனவுகள் என்று தொடங்க எண்ணினேன் - 101 என்பது பாலபாடம்  என்பது தலைப்பின் பாடபேதம். கனவுகள் அருகிவிட்டன.  அவ்வப்போது தோன்றுவதை இங்கே பதியலாமென்றிருக்கிறேன். படித்து இன்புறுக!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந...