முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்களை புரட்டிப் புரிந்துகொள்ள முயற்சி செய்வது போலச் சிலவும் சேர்த்து ஒன்றிலிருந்து ஒன்றரை மணி அங்கே தீரும். (இப்போது புரிந்தது மாதிரி இருக்கிறது, நிச்சயமில்லை) எப்படியும் எதையாவது வாங்கி விடும் பலவீனம் அகன்று விட்டது. அதனால் இனி வாங்கிச் சேர்த்தவற்றைப் படித்துக் கரைக்க பலம் கூடியிருக்கிறது.

கடையை விரிவுபடுத்துகிறேன் என்று இப்போது அதிகம் புதிய புத்தகங்களைக் குவித்திருக்கிறார்கள். பெஸ்ட் ஸெல்லர்கள் கடையின் பெரும்பகுதியை நிறைக்கின்றன. மாப்பஸான் கதைத் திரட்டொன்றிற்கு விலை இருநூற்று ஐம்பது ரூபாய். கான் அப்துல் கஃபார் கானின் சரிதை அவர் கையொப்பத்துடன் (யாருக்கோ கொடுத்தது) , பல ஊர்களின் நூலகங்களில் சுட்டது, யாரோ யாருக்கோ பரிசாய்க் கொடுக்கும்போது புத்தகத்தின் மகுடத்தில் அழகான, விதவிதமான கையெழுத்தில் ஆச்சரியமான கருத்துக்களை எழுதி வைத்திருக்கும் புத்தகங்கள் குறைவதால் அங்கே நான் இனி அதிகம் போவதில்லை என்று முடிவு செய்தேன்.

***


நிகாட் காந்தியின் நல்லதொரு கட்டுரை நேற்று இந்துவில் வந்தது. களவு நடந்தவிடத்தில் களவு கொடுத்தவரையும், கொலை நடந்தவிடத்தில் கொலையுண்டவரையும் குறைசொல்லாத நாம், ஒரு பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாகும்போது மட்டும் அவளையே குறைசொல்வது ஏன் என்ற கேள்வியெழுப்புகிறார். இவர் தரும் statistics மண்டை காய வைக்கிறது. வன்புணரப்பட்ட பல பெண்கள் (70ல் 69 பேர்! - இதில் தண்டிக்கப் படுபவர்கள் சதவிகிதம் 20!!) இதை வெளியே தெரிவிப்பதில்லை. காரணம் அவள் உற்றாரும் பொதுவே இச்சமூகமும் அப்பெண்ணே தவறு இழைத்தது போலப் பார்ப்பதும், இந்நிகழ்வால் ஏற்படும் உடல், மற்றும் மன ரீதியான பாதிப்புகளைப் புரிந்து கொள்ளாமல் செய்யப்படும் விசாரணைகளும் வன்புணர்வை விடவும் கொடிய துன்பத்திற்கு ஆளாக்கும் என்பதே. இத்தவறுகள் நடக்காதவாறு அதிகபட்ச தண்டனையும், புரிந்துணர்வுடன் கூடிய விசாரணைகளும், முக்கியமாக சுற்றத்தின், நட்பின் அரவணைப்புமே முக்கியத் தேவைகள். அவர்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்ற யோசனை அல்ல.

***

நான் ஆட்டோக்களை பெங்களூரில் இயன்றவரை தவிர்த்து வருவது தெரிந்ததே. அப்படியும் ஒரு பலவீனமான தருணத்தில் டிஜிடல் மீட்டர் பொருத்தப் பெற்ற ஒரு ஆட்டோவில் ஏறினேன். இது பயணித்த தொலைவையும், அதற்கான கட்டணத்தையும் ஒருசேரக் காட்டும் வசதி கொண்டது என்பதாலும், இந்த டிஜிடல் முறை வழக்கிற்கு வந்து சில நாட்களே அகிறது என்பதாலும் ஒரு தைரியத்தில் ஏறிவிட்டேன். ஒன்றரைக் கிலோமீட்டர்கள் சரியாக ஓடிய மீட்டர், சடுதியில் அரைக் கிலோமீட்டரை விழுங்கி ஒன்றரையிலிருந்து இரண்டானது. வண்டியை நிறுத்தச் சொல்லி மீட்டர் 'எகிறும்' மாயை பற்றிக் கொஞ்சம் காட்டமாகவே கேள்விகேட்டேன். அப்பாவித்தனமாக வண்டி ஓடினால் மீட்டர் எகிறத்தானே செய்யும் என்று பதில் வந்தது. அரைக் கிலோமீட்டரை அரை நொடியில் தாண்டும் வண்டிகள் வந்து விட்டனவா என்று நானும் அப்பாவித்தனமாய்க் கேட்டேன். தான் ஏதும் செய்ததாலேயே மீட்டர் இப்படி எகிறியது என்று குற்றம் சாட்டுவது தான் எண்ணமா என்ற கேள்விக்கு, அப்படியில்லாமல் வேறு ஒன்றும் யோசிக்க வழியில்லை என்று பதில் சொன்னேன். கொஞ்சம் ஒடிசலான ஆளாய் ஆட்டோக்காரர் இருந்திருந்தால் I would have fancied my chances of taking him. But wiser counsels prevailed. "தயவிட்டு பேறே ஆட்டோ தகொள்றீ " என்ற ஆலோசனையை ஏற்று பத்து ரூபாய் தண்டம் அழுதுவிட்டு பஸ்ஸைப் பிடிக்கத் தலை தெறிக்க ஓடினேன்.

இனி முடிந்தவரை நடராஜா ஸர்வீஸ் தான்.

கருத்துகள்

ROSAVASANTH இவ்வாறு கூறியுள்ளார்…
நான் 10 வருடங்கள் முன்பு பெங்களூரில் இருந்த போது ப்ரிகேட் ரோட் துவக்கத்தில் செலக்ஷன் என்று ஒரு பழைய புத்தக கடை இருக்கும். ஒரு கிழவர் வைத்திருப்பார். அதே கடைதான் இப்போது Bலாஸமாகியிருக்கிறதோ?
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
ரோசா, அதுதான் ப்ளாஸம் ஆகியிருக்குமென்று தோன்றவில்லை. நான் செலக்ஷன் பார்த்ததில்லை.
arulselvan இவ்வாறு கூறியுள்ளார்…
வசந்த்!, அவரை கிழவர் என்றா சொல்லுவீர்கள்.:-). பெங்களூர் பழைய புத்தகப் பித்தர்கள் பலருக்கும் இருபது வருடங்களாக நல்ல நண்பர் அவர். செலக்ட் இன்னும் அங்கேயேதான் இருக்கிறது. எம்ஜிரோடில் ப்ளூபாக்ஸ் வளாகத்தில் இடப்புறம் சுற்றினால் ஒரு குட்டி பழைய பு.கடை உண்டு. அங்கே முடித்து விட்டு அப்படியே பின்னால் தெருவில் இறங்கி வலப்பக்கம் திரும்பினால் ப்ளாஸம்ஸ் (சரிதானே கண்ணன்?). நாலைந்து வருடங்கள் முன்பு வரை வெறும் பழசுதான். போன சம்மர்ல பாத்தேன். புது பாட் பாய்லெர்ஸ் (ஐம்பது வருட முந்தைய பிரயோகம்!) அதிகம்தான். ஆனாலும் கலக்டெட் பிலிப் யோசே பார்மர் கிடைத்தது.
அருள்
arulselvan இவ்வாறு கூறியுள்ளார்…
வஸந்த், கண்ணன்
இதைப் பார்க்கவும்
http://www.deccanherald.com/deccanherald/aug182005/metrothurs1423352005817.asp
கண்ணன், பிரிகேட் ரோடில் காவேரி ஸைடில் நடந்தால் (யார்மேலும் 'தெரியாமல்' இடித்து உதைவாங்குமுன்) முதல் இடப்பக்கம் திரும்பும் சந்து. அதன் இறுதியில் இருக்கிறது செலக்ட். இப்போதும் ஒரு நடை போனால் ஏதாவது கிடைக்கும். ஆனால் அதன் 'தங்கத் தினங்கள்' எண்பதுகள்தான்.
அருள்
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
அருள்,

சுட்டிக்கு மிக்க நன்றி!!!

செலக்ட் எதுவென்று தெரிந்து விட்டது. பார்த்திருக்கிறேன், போனதில்லை. அடுத்தமுறை போகவேண்டும். முன்பு இம்மாதிரிக் கடைகள் மற்றும் ப்ரீமியர், ஸ்றாண்ட் போன்ற கடைகளில் நிறைந்த கூட்டத்தையும், அதன் பின்னே கோஷிஸ் கஃபேயில் TG வைத்தியநாதன் போன்றோர் கும்பல் சேர்த்துப் புத்தகங்களைப் பற்றிக் கதைத்த கதைகளை ராமச்சந்திர குஹா புளகாங்கிதத்தோடு எழுதப் படித்திருக்கிறேன்.

இப்போது வாரயிறுதிகளில் ப்ரிகேட் மற்றும் எம்ஜி ரோடுகள் பக்கம் போகமுடிவதில்லை.
dondu(#11168674346665545885) இவ்வாறு கூறியுள்ளார்…
சென்னையில் இதே போல ஈஸ்வரி வாடகை நூல் நிலையம் பல வருடங்களாக பிரசித்தம். எழுபதுகளில் கொடி கட்டிப் பறந்தது. இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. இதைப் பற்றி நான் போட்டப் பதிவு இதோ. பார்க்க: http://dondu.blogspot.com/2005/09/blog-post_11.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
ROSAVASANTH இவ்வாறு கூறியுள்ளார்…
//அவரை கிழவர் என்றா சொல்லுவீர்கள்//

தாத்தா என்று அன்பாய் சொல்லலாமா என்று யோசித்து, சென்னை பாணியில் அன்பாய்தான் 'கிழவர்' என்றேன். இன்னும் அங்கேயே இருப்பது குறித்து மகிழ்ச்சி. தலைவரின் பேட்டி பல காலம் முன்னமேயே ஃப்ரண்ட்லைனிலோ வேறு பத்திரிகையிலோ வந்ததாய் ஞாபகம். அவரே என்னிடம் காட்டினார்.

// ஆனால் அதன் 'தங்கத் தினங்கள்' எண்பதுகள்தான். //

நான் 90கள், குறைந்தது வெள்ளியாவது கிட்டியிருக்கும் என்று நம்புகிறேன்.
Ramya Nageswaran இவ்வாறு கூறியுள்ளார்…
//மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால்...//

நீங்களும் நம்ம கேஸ்தானா? பரவாயில்லை.. நான் தான் கொஞ்சம் மக்கோன்னு நினைத்துக் கொண்டிருந்தேன்!! :-)
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
டோண்டு,

நீங்கள் சொன்ன நூலகம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் புத்தகப் பித்து நிலையில்லாதது - அவ்வப்போது ஜுரம் போல வந்து போய்விடும். பல நூலகங்களில் சேர்ந்து, இரண்டாம், மூன்றாம் முறைக்குமேல் போனதில்லை. எடுத்த புத்தகத்தைப் பல நாட்கள் வைத்திருந்து விடுவதால் அதற்குப் பிறகும் அந்தப் பக்கம் போகும் வாய்ப்பில்லை


ரம்யா,

இதிலென்ன உங்களுக்குச் சந்தேகம் ?

:-)
Santhosh Guru இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன், உங்களோடு ஒருநாள் அங்கு போகலாம் என்று எண்ணியிருந்தேன். இப்போது நீங்களும் ஜகாவா :).

சென்ற வாரம் ஒரு நண்பனுடன் ப்ளாஸம்ஸ் செல்ல நேரிட்டது. Fiction எல்லாம் முதல் மாடி, Non-fiction எல்லாம் மூன்றாம் மாடியாம். இது தெரியாம என் கொழுப்புச் சத்தினை குறைக்கும் தேகாப்பியசத்தினை ஒரு எட்டு அல்லது பத்து முறை செய்திருப்பேன். சத்யஜித் ராயின் Our films, their films என்ற புத்தகம் தேடி ஒரு ரெண்டு தடவை கீழேயும் மேலேயும் அலைந்து....ம்ம்ம்ம்...
Santhosh Guru இவ்வாறு கூறியுள்ளார்…
...கடைசியில் கிடைக்கவில்லை (மீதி கமெண்ட் எப்படியோ விட்டுப்போச்சு)
இளங்கோ-டிசே இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன், பெங்களூர் பற்றி சற்று அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. நன்றி. 'நட'ராஜா சேர்வீஸ் நீங்கள் செய்வதால் செல்வராஜ் போல நிரம்ப எழுத விசயஙகள் இருக்குமே. எழுதுங்களேன்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
சந்தோஷ்,

எங்கே, உங்களைக் கையிலே பிடிக்க முடிவதில்லையே... விடாது திட்டம் போடுவோம் :-)

டிசே,

// செல்வராஜ் போல நிரம்ப எழுத விசயஙகள் இருக்குமே. எழுதுங்களேன். //

எனக்கும் அந்த ஆசைதான். மற்றபடி, உங்கள் படம் அருமை - நல்ல வடிவாய் இருக்கிறீர்கள் ;-)
G.Ragavan இவ்வாறு கூறியுள்ளார்…
ப்ளாசம் முன்பு மிகவும் சிறிய கடையாக இருந்தது. ஒரு இளைஞர் மட்டும் தனியாளாக நடத்தி வந்தார். அங்குதான் vets might fly, vet in spain ஆகிய புத்தகங்களை வாங்கினென். இப்பொழுது பெரிய கடையாக மாற்றி விட்டார்கள்.

பெங்களூர் ஆட்டோக்கள் சென்னை ஆட்டோக்களை விட எவ்வளவோ தேவலாம். பெங்களூரில் நான் ஆட்டோவைப் பயன்படுத்த யோசிப்பதில்லை. பெரும்பாலும் பைக்கில்தான் பயணம் என்றாலும் தேவையென்றால் ஆட்டோவில் ஏறியதுண்டு.
இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன், நீங்கள் சொன்னது போல் வார இறுதிகளில் எம்ஜி ரோடு பக்கமெல்லாம் போக முடிவதில்லை. தெரியாமல் இரண்டு வாரங்கள் இங்கு வந்த புதிதில் போய் மாட்டிக் கொண்டு 'கண்ணாமுழி' பிதுங்கிவிட்டது.

விமானநிலையத்தில் இருக்கிற ஒரு புத்தகக் கடையில் போய் நிறைய நல்ல புத்தகங்கள் கண்டு பெருமூச்சு விட்டுவிட்டு வந்துவிட்டேன். பிளாசமில் தமிழ்ப்புத்தகங்கள் கிடைக்குமா? பழைய தமிழ்ப்புத்தகங்கள் கிடைக்கும் இடம் பெங்களூரில் எது? சும்மா இன்னும் கொஞ்சம் பெருமூச்சு விடலாமென்று தான். :-)
G.Ragavan இவ்வாறு கூறியுள்ளார்…
செல்வராஜ், எனக்குத் தெரிந்து பழைய தமிழ்ப் புத்தகக் கடையென்று இல்லை. ஹிக்கின்பாதம்சில் கொஞ்சம் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கின்றன. லேண்ட்மார்க்கிலும் கொஞ்சம் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கும். வேறு எங்கும் கிடைக்குமென்று சொன்னால் எனக்கும் வசதியாக இருக்கும்.

ஆனால் சென்னையில் அப்படி ஒரு கடை எனக்குத் தெரியும். தெற்கு உஸ்மான் ரோட்டில், சென்னை சில்க்ஸில் இருந்து பஸ்டாண்டை நோக்கி நடந்து வந்தால் ஒரு வறுகடலை நிலையம் வரும். அதற்க்கு அருகில் கொஞ்சம் தள்ளி ஒரு லைப்ரரி இருக்கிறது. அங்கு போய் மேலிருக்கும் புத்தகங்களைப் பார்க்க வேண்டுமென்றால் கூட்டிச் செல்வார். நிறைய பழைய புத்தகங்கள். பத்திரிகைகளில் வந்து கிழித்து பைண்ட் செய்யப்பட்டவை. எக்கச் சக்கமாக இருக்கின்றன.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
ராகவன்,

முதலிலேயே இவ்வளவு வேண்டும் என்று கேட்டால் ஆட்டோவிற்கு மீட்டருக்கு மேலே கொடுப்பதில் எனக்குத் தயக்கமில்லை. ஏமாற்றப்படும் போது தாங்க முடிவதில்லை - கொஞ்சம் அவமானமாகவும் உள்ளது

செல்வா,

தமிழ்ப் புத்தகங்கள் பெங்களூரில் கிடைப்பது அரிது (எனக்குத் தெரிந்த வரை) காவ்யா பதிப்பகம் இங்கே இருந்தவரை ஓரளவுக்குப் புத்தகங்களை அங்கே வாங்க முடிந்தது. இப்போது அதுவும் சென்னைக்குப் புலம் பெயர்ந்து விட்டது.

ஆனால் இரண்டு நல்ல நூலகங்கள் இருக்கின்றன. ஒன்று பெங்களூர் தமிழ்ச்சங்க நூலகம். இன்னொன்று திருக்குறள் மன்றம் என்று. இரண்டுமே அலசூரில் உள்ளன.
G.Ragavan இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன்,
பொதுவாக மீட்டருக்கு மேல் இங்கு கேட்பதில்லையே. ஆனால் சில ஏரியாக்களில் தூரத்தை கணக்கில் கொண்டு முதலிலேயே பேரம் பேசுவார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...