முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெண்பா வாரம்

மரபுக் கவிதைகள் மேலே புதிய ஆர்வம். யாப்பிலக்கணத்தைப் பார்த்தால் 'கோலம் வரைந்தபின் இடப்பட்ட புள்ளிகள்' என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் (கவிதை) மரபை மீற விழைந்தவர்களுக்கு யாப்பு ஒரு ஆயத்த வடிவமாகவும் (template) கவிதை எழுதுதல் என்பது இந்த வடிவத்திலே சொற்களைச் சொருகி நிரப்புவதாகவும் இருக்கிறது. இதிலே 'சிருஷ்டி முகூர்த்தத்தின் லயம் தப்பாமல்' மனம் ஓடிய திக்கெல்லாம் ஓடி கவிதையைப் பிரசவிக்கும் உன்னத 'முகூர்த்தத்திலே' கணக்கு பிணக்கு சுணக்கு என்று தொடைகளைத் தேடி ஆயத்தவடிவத்தில் சொற்களை எப்போது சொருகுவது? அப்படிச் செய்வது கவிதையை மலினப்படுத்திவிடாதா?

பிரமிள் எழுதியது:
"பாரதி, யாப்பு அணிகளை மனசில் சப்பி, பிறகு குந்தியிருந்து வார்த்தைகளை அங்கங்கே கொட்டிப்பிரித்து 'பாட்டுக்கட்ட' வில்லை. காளமேகமோ யாரோ ஒரு தடவை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சோழ நாட்டுத் திருக்குடந்தையைச் சேர்ந்த முன்குடுமிக்காரனின் எச்சில் சோறு தன் இலையில் அவன் பிசகால் விழுந்ததற்கோ எதற்கோ சுர்ரென்று கோபம் வர,

சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்
பொருக்குதிர்ந்த வாயா புலையா - திருக்குடந்தைக்
கோட்டானே நாயே குரங்கே உனையொருத்தி
போட்டாளே வேலையற்றுப் போய்

என்று திட்டினது உங்களுக்குத் தெரித்திருக்கலாம். அந்தக் கவிஞர் இலையை விட்டு எழுத்துபோய் ஏடும் ஆணியும் வைத்து, 'பாட்டுக்கட்ட'வில்லை. உணர்ச்சி, அடிமன ஓட்டத்தின் வீச்சினால் உந்தப்பட்டு வார்த்தையில் பாயும்போது ஜனிக்கும் வெறிதான் மேற்சொன்னது"

மேலே சொன்ன அந்த வெறி; யாப்பிலக்கணம் ஏற்படுமுன் கவிஞர்களின் மனங்களிலே அடிநாதமாய் ஓடிய மொழியின் இசைநயம்; எப்படி இது உருவாகியிருக்கும்? இயற்சீர் வெண்டளை, மற்றும் வெண்சீர் வெண்டளைகளே வெண்பாவிற்கு உரித்தான தளைகள் என்பது இயல்பாகவே எப்படிக் கைகூடியது? இதுதான் மரபுக் கவிதைகள் மேல் புதிய ஆர்வம் ஏற்படக்காரணம். மரபுக் கவிதையில் பொருளை விட்டுவிட்டு சொற்களைப் பிடித்தே தொங்கிக்கொண்டிருந்தேன். பழங்கவிதைகளின் ஓசைநயங்களை மட்டுமே வைத்துப் பார்த்தால் இசைக்கும் மொழிக்கும் இடையே இருந்த பிணைப்பு புலனாகிறது. அடிப்படைச் சொல்லிலக்கணம் கூட meter ஐ அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டதோ  என்று தோன்றுகிறது.

இப்படியான ஒரு மன அவசத்திலே, சில காலைகளில் நாம் கேட்க நேரும் ஒரு பாட்டு நாள் முழுதும் மனதிலே அரைபட்டுக் கொண்டிருப்பதைப் போல, வெண்பா இலக்கணம் ஒரு வாரத்திற்கு என்னை அலைக்கழித்தது. மனம் தளை வாய்ப்பாட்டையே எப்போதும் பாடிக்கொண்டிருந்தது. மனத்தில் யோசிக்கும் எதுவும் இயற்சீர் வெண்டளைகளாக ஒரே இம்சையாகிப்போனது.

ஆஸ்பத் திரியில்
அம்மா கிடப்பு
சுருண்டொரு சாணித்
துணியது போலே
தேய்த்துக் குளித்தால்
அழுக்கது போகும்
ஒழுக்கம் விழுப்பம்
கற்க கசடற
மரபுக் கவிதை
அரபுக் குதிரை
ரோகம் பயங்கரம்
தேகம் இதுசுமை

தூங்கித் தூங்கி எழுந்தாலும் குரங்கு மனம் அதை விடவில்லை. இப்படியே ஒரு வாரம் போனது. இப்போது அதிலிருந்து மீண்டுவிட்டேன். இதையெல்லாம் எழுதிப் பார்க்க வேண்டும் போலிருந்தது...


உபரியாக, சில பல வெண்பாக்களை விளையாட்டாக எழுதிப் பார்த்துக் கொண்டேன். நண்பர்களுக்கு அனுப்பி அவர்களைப் படுத்தினேன். அவற்றில் இரண்டு இங்கே:

வெண்பா எழுதலாம் என்று புறப்பட்டேன்
நண்பா அதுமுதல் தானே தினந்தோறும்
தேமா எதிர்நிரை யென்றே யலையும்காய்
முன்மா வெனவென் நினைப்பு

பாரடி கண்ணேநாம் வெண்பா எழுதுங்கால்
நேரடி போதாது சிந்தடி காணாது
ஈரடிப் பாவில் திருமறை தந்தனன்
யாரடி ஐயன் நிகர்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க