முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

101 கனவுகள் - 2. கனவில் மிதத்தல்…


இது உண்மைதானா? 

எதற்கும் சரிபார்த்துக்கொள்வோம் என்று மறுபடியும் எம்பிப் பார்த்தேன். சரிதான்! ஆனாலும் எவ்வளவு நேரத்திற்கு இது தாக்குப்பிடிக்கும்?

கடற்கரையை அடைந்து நீருக்கு மேலாக எம்பிப்பார்த்தேன். நினைத்தபடியே வேலை செய்தது. நடுக்கடலில் பயம் வயிறைச் சுண்டியிழுத்தது. திரும்பிவிடலாம் என்று வலப்புறம் சாய்ந்தேன். சரிப்படவில்லை. இடது புறமாகத் திரும்ப முடிந்தது, அதுவும் கொஞ்சமாக. ஹாண்டில் பார் வளைந்த சைக்கிளை ஒரு மாதிரித் ‘தேற்றி’ ஓட்டிக்கொண்டுபோவதுபோல் இருந்தது.

இதற்குள் அக்கரையை அடைந்துவிட்டேன். 

எங்கள் ஊரில் அந்தக்காலத்தில் பொட்டல்காட்டில் முளைத்த புதிய குடியிருப்பு மாதிரி ஓரிடம். தார் போடாத, மாட்டுவண்டித்தடங்கள் மிகுந்து அதுவே பாதையாகிவிட்ட சிறிய சாலை. இடது பக்கம் பார்த்தால் ஓடு வேய்ந்த கடையின் முன்புறம் வாழைத்தாரும், சணல்க்கயிறும் தொங்கிக்கொண்டிருந்தது. 

அட! நம்மூர் மாதிரித்தான் இங்கெல்லாம் இருக்கிறது.  ஊர்ப்புறம் வந்தால் தானே உண்மையான ‘வளர்ச்சி’ தெரியும்? 

இருந்தாலும் அப்போது நினைத்துக்கொண்டேன் “ஒரு பெருநகரத்தை நேர்த்தியாக கட்டியெழுப்பியிருக்கிறார்கள். அந்தப் பாடங்கள் மறந்துவிடுமா? நாளைக்கு இந்த இடங்களும் அதே நேர்த்தியுடன் இருக்கப்போகிறது”. அப்படி நினைத்ததை கண்களால் உறுதி செய்ய மீண்டும் சுற்றிலும் நோட்டம் விட்டேன் - அகலச்சாலைகள், சாக்கடை, இம்மாதிரி ‘திட்டமிட்ட’ கூறுகள் இருக்கிறதா என்று…

சற்று முன்னால் நடந்து போனால் பழைய கடைவீதி மாதிரி ஒன்று. ஒரு டீக்கடையில் நுழைந்து டீ குடித்தேன். ரேடியோவில் அறிவிப்பு ஏதோ புரியாத மொழியில். வெளியே கடைப் பலகையில் பார்த்தால் என்னவோ ‘காட்டோங்’ என்று எழுதியிருக்கிறது. இம்மாதிரி முன்னர் பார்த்ததில்லையே என்று யோசிக்கும்போதே தெரிந்து விட்டது. 

இது மலேசியா! 

அதனால் தான் ஊர் இப்படிப் “பழையதாக” இருக்கிறது. அடடா, விசா இல்லாமலே வந்து உட்கார்ந்திருக்கிறேன். இப்படி வந்து மாட்டிக்கொண்டேனே!

உடனே கிளம்பிவிட்டேன். 

மீண்டும் கடல். மாலை மங்கலில் அக்கரையில் சீமைக்கட்டிடங்கள் பளீரென்ற விளக்கொளியுடன் கண்ணுக்குப் புலப்பட்டன. 

எப்படி யாருக்கும் தெரியாமல் திரும்புவது? 

மறுபடி ஹாண்டில் பார் கோணல் சைக்கிள் படுத்தியது. அக்கரையில் நினைத்த இடத்திற்குப் போக முடியவில்லை.

சரியாக ஒரு படகுத் துறையில் குடியுரிமை அதிகாரிகள் கண்முன்பாக வந்து இறங்கினேன். "சரி, உண்மையைச் சொல்லிவிடுவோம் - வேறென்ன வழி?” என்று ஒரு பெண் அதிகாரியை அணுகி, வேறு அதிகாரிகள், பயணிகள் என்று சூழ்ந்திருக்கும் மற்றவர்கள் யாருக்கும் கேட்காத விதத்தில் அவரிடம் சொல்கிறேன்:

“மேடம், எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. எனக்கு திடீரென்று “பறக்க” வந்துவிட்டது. அதைச் சோதிப்பதற்காகக் கடல் மேல் பறந்து பார்த்தேன். சரியாகத் திரும்ப முடியாமலும், நினைத்த இலக்கிற்கு என்னைச் செலுத்த முடியாமலும் போனதில் அப்படியே காற்று வாக்கில் மலேசியா போய்விட்டேன். அங்கே இறங்கியதும் தான் அது மலேசியா என்றே தெரியும்… … …”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...