பெங்களூர் ஜெயநகர் மூன்றாம் பிளாக்கின் சாலைச் சந்திப்பில் (இங்கே எல்லாமே 'சர்க்கல்' தான்) நாகார்ஜுனாவுக்கும் மூலைப் பெட்டிக்கடைக்கும் நடுவே இருந்தது மஞ்சுநாதா (என்று நினைக்கிறேன்) ஃபார்மசி. பழைய பெயர்ப்பலகை. கடையினுள்ளே அப்போத்திக்கரிகள் காலத்து மேசை, கண்ணாடி/மரக்கூண்டுகளுக்குள் மருந்துகள் என்ற அமைப்பு. மேசையின் அருகிலே இருக்கையில் அறுபதை நெருங்கும் வயதுடையவர் என்று நாம் ஊகிக்கக்கூடிய பெரியவர். மெலிந்த தேகம், அதிக உயரமில்லை, வெளுத்த தலை முடி, சின்னதாக கிராப் வைத்திருப்பார். கையில் விரித்து வைத்த ப்ரஜாவாணி பத்திரிகையை படித்த வண்ணம் இருப்பார்.
ஒரு முறை அவசரமாக மாத்திரை வாங்க வேண்டியிருந்ததில் மருந்தகம் நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன். இந்தக் கடை தென்பட்டது - வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறதே என்று கடையில் மருந்தின் பெயரைச் சொல்லிக்கேட்டேன். பத்திரிக்கையினின்றும் தலையை எடுத்து சிரித்துக் கொண்டே சொன்னார் "இங்கே கிடைக்காது (அருகில் உள்ள பெரிய) மருந்தகத்தில் கிடைக்கும்". அப்போதிருந்த அவசரத்தில் ஓடிவிட்டேன். ஆனால் அங்கே ஒரு மருந்தகம் இருப்பதை மனம் குறித்துவைத்துக் கொண்டது.
அப்புறம் மருந்து வாங்க வேண்டுமானால் அதே கடைக்குச் செல்ல ஆரம்பித்தேன். அடுத்த முறை போனபோது கடைக்காரர் வயதையொத்த ஒருவர் கடைக்குவெளியே மடக்கு நாற்காலி போட்டு உட்கார்நதிருந்தார். கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தார். மருந்தைச் சொல்லிக் கேட்டதற்கு இம்முறை வெளியே உட்கார்ந்திருந்த நண்பரே மருந்து அங்கு கிடைக்காதென்று சொல்லி அருகில் இருந்த பெரிய மருந்தகத்திற்கு வழிகாட்டினார்.
வியப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. அப்புறம் மருந்து வாங்க நேர்ந்தால் அந்தக்கடைக்கு முதலில் சென்று கேட்பதும் (இருக்காது என்று தெரிந்தும்) அப்புறம் வேறுகடையில் மருந்து வாங்குவதும் வழக்கமாயிருந்தது. அங்கே வசித்தவரையில் அந்தக்கடையில் எதுவும் வாங்கியதில்லை - எதைக் கேட்டாலும் புன்னகையுடன் இல்லையென்ற பதிலே வரும். இருந்தும் அங்கே மீண்டும் மீண்டும் செல்ல விருப்பம் இருந்தது.
மிகவும் விரைவாக எதையோ நோக்கி எல்லோரும் ஓடிக்கொண்டிருக்க, அந்தக் கடையும் அங்கு சேரும் கடைக்காரரின் நண்பர் கூட்டமும் நவீன பெங்களூர் காட்சிக்கு முரணாகத் தோன்றியது. அருகிலிருந்த நாகார்ஜுனாவில் கூட சாரைசாரையாக மக்கள் வந்து அவசர கதியில் தின்று போய்க்கொண்டிருந்தனர். பெட்டிக்கடையிலும் டீ, சிகரட்டு என்று மனிதர்கள் வந்துபோய்க்கொண்டிருக்க, நடுவில் அந்த மருந்துக்கடை அமைதியாக ஆளரவமின்றி இயங்கிக்கொண்டிருந்தது.
மருந்துக்கடை பெரியவர் பற்றி எதுவும் தெரியாதானாலும் இப்படியாக அனுமானித்தேன்:
சாப்பாடு, இருப்பிடம், எளிய வாழ்க்கைக்கான வருமானத்தை அவர் சேமித்திருக்க வேண்டும். தினமும் கடையைத் திறந்து வைத்திருப்பது, ப்ரஜாவாணி படிப்பது, நண்பர்களுடன் அளவளாவிக்கொண்டு தேநீர் குடிப்பது என்பன தவிர்க்கமுடியாத பழக்கங்களாகி விட்டிருக்கவேண்டும். திரும்பி வராத பழையநாட்களின் வசந்தத்தையும், இளமைக் காலத்தின் உயிர்ப்பையும், நிறைவான, நிதானமான, வேட்கைகளற்ற வாழ்க்கையின் பழைய சுவடுகளையும் இந்தப் பழைய மேசையும், மருந்து வாசம் கமழும் மரக்கூண்டுகளும், கடைக்கதவின் மரப்பட்டிகளும், மேசைமேல் பதித்த கண்ணாடிமூலம் தெரியும் பழைய ஒற்றை ரூபாய் நோட்டும் பெரியவருக்கு நினைவூட்டுவதாக இருக்கக்கூடும்.
இவரைப் பார்க்கப் பொறாமை மேலோங்கும் - எனக்கான பழைய மருந்துக்கடைக் கல்லா, மேசை நாற்காலி என்கிற விழைவும். கண்ணாப்புக் கட்டிய குதிரைபோல வாழ்க்கையின் எளிய மகிழ்ச்சிகளை மறந்து எதையோ நோக்கி ஓடுகிறோம். சன நெரிசலில், அவசரங்களுக்கு மத்தியில், ஒரு நிமிடம் நின்று நிதானித்துத் தேடினால் இந்த மருந்தகம் போன்ற எளிமை மிளிரும் ஒன்று கண்ணுக்குப் புலப்படலாம். அதைக் கண்டுகொண்ட பின்னர் வாழ்நாட்களில் உணரப்போகும் அமைதியை, மகிழ்ச்சியை பெரியவரின் சிரிக்கும் கண்கள் எப்போதும் உணர்த்தும்.
நான் அந்தப் பெரியவர் வாழ்க்கையையே காதலிக்கிறேன். நீங்கள் கேட்கும் மருந்து இங்கு கிடைக்காது; ஆனால் பூரண குணம் கிட்டும் வாய்ப்பு இருக்கிறது.

கருத்துகள்