வேலைத் திரக்கிலையோ இல்லை அந்த சாக்கிலையோ - தினமும் மறக்காமக் கைத்தொலைப்பேசியில கூப்பிட்டு “சும்மா தான் மச்சான் அடிச்சேன்” ன்னு சொல்லற நண்பன் அழைப்பையே எடுக்க முடியல. அப்புறம் கூடடைந்து குஞ்சு குளுவான்களோட குலாவறதுல இன்ன பிற நட்புகள், சொந்தங்கள் யாருக்கும் ஒரு தொலைபேசியோ கடுதாசோ கூடப் போடுறதில்லை. இதுகூடப் பரவாயில்லை - பேருந்து நிலையங்கள், இல்லை பேரங்காடிகளின் முன்னால நடந்து போறவன நிறுத்தி கடன் அட்டை விக்கவோ, நிதி திரட்டவோ வேண்டி ‘எப்படியிருக்கீங்க இன்னைக்கு?” ன்னு கேக்கிறவன் கிட்டக் கூட ‘நான் அவசரமாப் போறேன்’ ன்னு சொல்லாமச் சொல்லி...இப்படி மனுசங்க கூடப் பேசறதுக்குண்டான வாய்ப்புகளை எல்லாம் விட்டிட்டு, புது ப்ளாகு மட்டும் நெறையத் திறந்து, ட்விட்டர் அக்கவுண்டு வைச்சு என்னத்தப் பண்ண?
பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...
கருத்துகள்