முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய ஐடி புரட்சியில் என் பங்கு - ஓர் ஐடி குமஸ்தக் குஞ்சாமணிக் குளுவானின் வாக்குமூலம்


கணினியியல் முதுகலைப்படிப்பின் பகுதியாக பாடம் சம்பந்தப்பட்ட திட்டப்பணி (project) செய்யவேண்டி இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) மீத்திறன்கணினி மையத்தின் (SERC) தலைவராக இருந்த (அந்தப்பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்) பேராசிரியர் ராஜாராமன் அவர்களை நண்பனின் உதவியால் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இளங்கலை கணினியியல் படிப்பில் அவர் எழுதிய புத்தகம் ஒன்றுதான் பாடப்புத்தகமாக இருந்தது. பற்பல ஆய்வு மாணவர்களை முனைவர்களாக்கிய பெருமை வாய்த்தவர். அப்படியொரு மாஜி மாணவரான ஒரு முனைவர் / பேராசிரியரை அழைத்து என்னைக்காட்டி "இவனைச் சேர்த்துக்கொள்" என்றார். ஆசிரியர் கையால் இட்ட பணியைத் தலையால் செய்து முடிக்கும் அந்த மாணவப் பேராசிரியர் என்னை ரிஷிமூலம் நதிமூலம் பார்க்காமல் சேர்த்துக்கொண்டார். ராஜாராமன் மென்மையான மனிதர்; மிகவும் அன்பாகப் பேசினார். என்னால் மறக்கமுடியாத  முதல் சந்திப்பு  அது. இன்றைக்குப் பிழைப்பு ஓடுவது அவர் போட்ட பிச்சை.

இளங்கலை / முதுகலை என்று ஐந்தாண்டுகளில் 'படித்ததை'விட அந்த ஒன்பது மாதங்களில் நிறையக் கற்றுக்கொண்டேன். ஐந்து மாதங்களில் பல்கலைக்கு வேண்டிய வேலை முடிந்து விட்டது. வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு பெரும் கல்வி / ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அதன் மாணவர்களின் தொடர்பு,  கல்விக்கு உகந்த பசுமையான வளாகம், மாணவ நண்பர்கள் கைங்கரியத்தில் ஏ மெஸ், ஃபாகல்டி கிளப் உணவு, காபி போர்டு காபி, நள்ளிரவு ஜிம்கானா தேநீர், இதெல்லாம் போக உருப்படியாக எதையாவது படிக்கவேண்டும் என்கிற வேகமும் சேர்ந்துகொண்டு இன்னும் நான்கு மாதங்கள் அங்கேயே பாடு கிடந்தேன். பேராசிரியர் பாடம் எடுக்கப் போகும்போது கூஜாதூக்கியாக (teaching assistant) என்னையும் கூட்டிச் செல்லுவார். அப்புறம் பேராசிரியரின் ஆய்வுக்கூடத்தைப் (parallel-distributed computing lab) பார்க்க வருபவர்களுக்கு அதைச் சுற்றிக்காட்டி அங்கிருப்பவற்றை விளக்குவது, இப்படிச் சில பல வேலைகள் செய்துகொண்டிருந்தேன்.

இரண்டு மூன்று நுழைவுத்தேர்வுகளையும் இதற்கு நடுவில் எழுதி எப்படியாவது ஐயையெஸ்ஸியில் சேர்ந்துவிடத்துடித்தேன். இப்படியான என் பாச்சாக்கள் பலிக்காததால் அப்புறம் 'ஐடி குமாஸ்தாக்களின்', 'கூவான்களின்', 'குஞ்சாமணிகளின்', 'பிளெடி ஐடி ஃபெலோஸின்' பாசறையில் களப்பணியாற்றத் தோழர்களுடன் இணைந்துவிட்டேன். "யெடோ, வர்க்க போதமில்லாத்த தொழிலாளி பூர்ஷ்வாஸி தந்நெ!" என்று மலையாளச் சேட்டன்மார் திரைப்படங்களில் அருளியது என் கண்ணைத் திறந்துவிட்டது. அப்புறம் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட பெற்றவர்களைப் பார்த்துக்கொள்ளவேண்டும், மற்றும் அக்காள் திருமணத்திற்கு வாங்கிய கடனைத் தீர்க்கக் கொஞ்சமேனும் உதவவேண்டும் என்கிற ஞானோதயமும் காரணம்.

அதுவும் எப்படிப்பட்ட களப்பணி! உண்மையில் நான் பிறந்த இந்தக்காலத்தோடு பெரும் கடன்பட்டிருக்கிறேன். வாய்ப்புக்களின் சூறாவளியடித்த இக்காலத்தில் வாழ்வின் இண்டிடுக்குகளிலிருந்து கிளப்பியெடுத்து  உயரப்பறக்கவிடப்பட்ட தூசுகளில் நானுமிருந்தேன்.

வாழ்க்கை அவலங்களைக் குறித்த போதமும் கவலையும் மற்றும் எந்த இலட்சியங்களும் இல்லாமலே கழிந்ததெனது வாலிபம். அந்நாட்களின் அண்டையயல் அண்ணாக்களும் அக்காக்களும் என்னவெல்லாம் முயன்றார்களோ அதைவிடக் குறைவாகவே என் முயற்சிகள் இருந்தன.

இப்படியிருந்தும் வாய்ப்புகளை வாரியிறைத்து குடும்பத்தை மேல் மத்தியத்தர வாழ்க்கைக்குக் கொண்டு செல்ல உதவியது இந்தச்சூறாவளி.
---

மத்தியத்தர வகுப்பினரின் ஒரே குறிக்கோளாக இருந்தது தொழிற்படிப்பு. காரணம் எண்பதுகளின் இறுதிவரைக்கும் நிலைத்திருந்த 'வேலையில்லாத் திண்டாட்டம்' (இதை ஏதோ கொண்டாட்டம் என்று நினைத்திருந்தேன்) ஆக இருக்கலாம்; சில படிப்புகளுக்கே வேலைவாய்ப்பு என்கிற கருத்து நிலவியது. அறிவியல் மற்றும் கணிதப்பாடங்கள் பதினொன்றாம் வகுப்பில் நானே தேர்ந்தெடுத்தது தான். ஆனால் நான் சோம்பேறி (அறிவும் மட்டு). பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பம் வாங்கவே என் மதிப்பெண்கள் போதுமானவையாக இல்லை. இளங்கலை ஆங்கில இலக்கியம் படிக்கவென என் ஆசையைச் சொன்னேன். குமாஸ்தாவாகவே முப்பது ஆண்டுகள் (இளம்நிலை எழுத்தர்) பணியாற்றி டென்னிஸ் முட்டி (tennis elbow) வாய்க்கப்பெற்ற என் அம்மா "நீயும் என்னைமாதிரி சீரழியணுமா?" என்று மறுத்துவிட்டார். ஆங்கில இலக்கியப் படிப்பிற்கான சமூக இடத்தை இப்படிப் புரிந்து வைத்திருந்தாள் அம்மா. பிற்காலத்தில் "ஐடி குமஸ்த்தன்" ஆகப்போகிறேன் என்பதை அப்பேதை அப்போது அறியமாட்டாள். கணினியியல் தான் எனக்குச் சொல்லியிருந்தது.

இந்தக்கணினியியல் பாடத்திட்டத்தின் முன்னோடி பேராசிரியர் ராஜாராமன் என்பதை நான் தெரிந்துகொண்டேன். MCA என்கிற அப்போது பிரபலமாயிருந்த பட்டப்படிப்பின் பாடத்திட்டம் இவருடையது. இதையே அடிப்படையாகக் கொண்ட இளங்கலை அறிவியலின் கணினிப் பாடத்திட்டத்தின் சிற்பி யாரென்று தெரியவில்லை. ஏனென்றால் சிலபல கணினிசாரந்த பாடங்களோடு (உருப்படியாய் ஒன்றுமில்லை) மருந்துக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிப்பாடங்கள், கணித்ததில் மருந்துக்குச் சொற்பம்,  வர்த்தகம் சார்ந்த இரண்டு பாடங்கள், என்று கடைசியில் மற்ற அறிவியல் பயலும் மாணவர்களைக் காட்டிலும் 'அறிவியல்' குறைவாகவே இருந்தது. வாழ்க்கையில் நான் எழுதாத நுழைவுத்தேர்வுகள் குறைவு. இளங்கலை முடித்ததும் முதுகலைப் பொறியியல் சேரலாம் என்று எழுதிய GATE தேர்வின்போது நான் படித்த இளங்கலை அறிவியலின் பற்றாக்குறை புரிந்தது. இளங்கலைப்பட்டச் சான்றிதழில் இருந்த, நான் தவறுதலாகப் வாசித்த "அறிவில் இளையர்" பட்டம் கனவில் வந்து வருத்தியது.

வேலைக்குச் சேர்ந்தபோது தொழில்முறைக் கணினி நிரலி வரைவது முதல் பூச்சி பிடிப்பது மற்றும் ஆவணப்படுத்துவது வரை கல்லூரியில் கற்றது எதுவும் கைகொடுக்கவில்லை. முதல் ஐந்தாண்டுகளில் வேறுவிதமான கணினிசார் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. மேலும் நிரல் எழுதுவது என்பது 'மேலாண்மை செய்வது' போல ஒரு சராசரி அறிவே என்பதும் புரிந்தது. அதனால் நான் பணியாற்றிவந்த நிறுவனத்தின் முக்கியத்தொழிலின்மேல், அந்தத் துறையில் அதிக கவனம் செலுத்தவாரம்பித்து அத்தொழிலில் என்னை நிலைநிறுத்திக்கொள்ள முனைந்தேன்.

பிறகு யோசித்ததில் இளங்கலைப் படிப்பில் கணினியியலை மட்டும் படிப்பது மூன்றாண்டுகளை விரயம் செய்வது என்று தோன்றியது. அறிவியலோ, கலையோ, வர்த்தகமோ இப்படி எதையாவது படித்து, அதற்குக் கணினிப்படிப்பு துணைப்பாடமாகவே இருந்தால் போதுமானது என்றும் முடிவு செய்துகொண்டேன். இந்த ஞான ஒளியுடன்,  என்னைப் பின்பற்றத்துடித்த இளம் தம்பி தங்கையரைத் தடுத்தாட்கொண்டு உருப்படியாக ஏதேனும் படிக்கச் சொன்னேன் (பெரும் பழிக்கும் ஆளானேன்). என்னுடைய சமூகப் பொறுப்புணர்வு விழித்துக்கொண்டது இங்கேதான்.

இந்த ஞானத்திற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பெரும்பாலும் நிரல் எழுதும் திறன் இருந்தாலும் துறைசார்ந்த அனுபவமோ படிப்போ இல்லாமல் இருந்தால் தப்பும் தவறுமாகவே நிரல்கள் இருப்பதுடன், அந்த நிரல் மூலம் ஏற்படக்கூடிய அனுகூலமோ அதன் உண்மையான தேவையோ புதிய நிரலாளர்களுக்குத் தெரிவதில்லை. அதைத் தெரிந்துகொள்ளப் பலரும் முனைவதில்லை. இதனாலேயே தேவைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியாமல் நிரல் ஆரம்பத்திலேயே ஆட்டம் காணுகின்றது. நிரலை யார்வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அதைக்கோருபவருக்குப் பயன்படும்படியாக இருக்க, இதை இப்படிச் செய்யலாம் என்ற உருப்படியான ஆலோசனைகள் வழங்க துறைசார்ந்த அறிவும் அனுபவமும் தேவைப்படுகிறது. கணினியை மட்டுமே படிக்கும் மாணவர்களுக்கு இது புதிதாகவும் புதிராகவும் இருப்பதாகவே படுகிறது.

நிறையபேர் சொல்லிவிட்டது இது:  தானியங்கிமுறையிலான தொழிற்சாலை வழியிலான மென்பொருள் உற்பத்தி (production line) முறை, உற்பத்தி செய்யும் பொருளை முழுதாகப் பார்க்காமல் பல பாகங்களாகப் பிரித்து, அந்தப் பாகங்களைத் தனித்தனியாக உருவாக்கி, கடைசியில் ஒன்றிணைப்பது. இந்த உதிரிப்பாகங்களைச் செய்யும் வேலைகளே முதலில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை. இம்மாதிரியான வேலைகளுக்குக் கல்லூரிப்படிப்பும் தேவையில்லை. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இம்மாதிரியான வேலைகளுக்கு ஐஐடி போன்ற கல்லூரிகளிலிருந்து கூட ஆட்களைச் சேர்ப்பார்கள். அவர்கள் சரியாக இரண்டாண்டுகள் வேலை செய்துவிட்டு மேற்படிப்புக்காக வெளிநாடோ உள்ளூர் ஐஐஎம்மோ போய்விடுவார்கள். இவர்களிடத்தில் வேறு பல புதியவர்கள் சேருவார்கள். பொதுவில் இந்தமாதிரியான சுழற்சிக்கு (churn) ஏதுவாகவே இந்த "உதிரி பாகங்களைச்" செய்யும் முறையை வைத்திருந்தார்கள். ஆதிமுதல் ஈறுவரை யோசித்து வடிவமைத்து உருவாக்கிய மென்பொருட்கள் இந்தியாவில் குறைவே. இம்மாதிரி வேலைகளைக் காண்பது (அப்போது) மிகவும் அரிது.

இதுபோன்ற வேலைகளில் சேரும் கணினி மட்டும் படித்தவர்கள் மூன்றாண்டுகளுக்கு மேல் இந்தத் தொழிலில் தொடர மேற்படிப்பு அல்லது ஒரு துறையில் ஒட்டிக்கொள்வது போன்ற எதையேனும் செய்யவேண்டியிருந்தது.

---

சீரழிந்துவரும் பள்ளிக் கல்விமுறையைப் பற்றி ஆங்காங்கே சில குரல்கள் ஒலித்தவண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு குழந்தையும் மிகுந்த ஆற்றலுடனும், படைப்புத்திறனோடும் பிறக்கின்றது. ஆனால் நாம் அவற்றை தயவுதாட்சணியமில்லாமல் வீணடித்துவிடுகிறோம் என்கிறார் சர் கென் ராபின்சன் என்கிற கல்வியியல் ஆராய்ச்சியாளர். இதற்கான முக்கியக் காரணமாக அவர் சொல்லுவது தவறுகளின் பால் அதிக கவனம் செலுத்துவதும், (வகுப்பறைகளில்) தவறு செய்வது பெருங்குற்றம் என்கிற நம் சிந்தனையுமே. தவறு செய்யத் தயாரற்றவர்கள் புதியது எதையுமே படைத்துவிட முடியாது என்றும் கென் சொல்லுகிறார்.

கென் ராபின்சன் முதல் கான் அகதெமியின் சல்மான்கான் வரை எல்லோரும் சொல்லுவது நம் கல்விமுறையில் பயிற்றுவிப்பதின்அணுகுமுறையும் பரீட்சை (தேர்வு) முறையும் சரியானவை அல்ல என்பதே. சிறுவயதில் நமக்குக் கற்றல் இயல்பானது. ஆனால் எல்லலோரும் கற்கும் முறை ஒன்றல்ல. ஐம்பதிற்கும் அதிகமான மாணவர்கள் இருக்கும் வகுப்பறையில் ஓர் ஆசிரியர் எப்படி ஒவ்வொரு மாணவனுக்கும் புரியும்படியான முறையில் பாடம் நடத்துவது? நாற்பது மதிப்பெண்கள் வாங்கிவிட்டால் அடுத்த வகுப்பிற்குப் போகமுடியும் என்ற நிலையில், அந்த மதிப்பெண்கள் ஒரு மாணவன் ஒரு நிலையில் முழுத்தேர்ச்சி பெற்றுவிட்டதற்கான அடையாளம்தானா?

இந்தச்சூழலில் சிலமாணவர்கள் நன்றாகத் தேர்ச்சி பெற்றும், கணிசமான மாணவர்கள் சராசரித் தேர்ச்சி பெற்றும், ஒருசிலர் கடைநிலையில் இருப்பதும் நியாயம் தானா? குழந்தைகளுக்குக் கற்றல் இயல்பான ஒன்றாயிற்றே?!

இப்போது சில "மாற்றுக் கல்வி முறைகள் " மதிப்பெண்களை விடுத்து "கற்றலில்" கவனம் செலுத்துகின்றன. ஒவ்வொரு மாணவரின் பயிலும் முறைக்கேற்ப பாடங்களை மாற்றியமைத்து எல்லோரையும் அரவணைத்துச் செல்லுவதுடன், ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சியையும் முடிவெடுக்கும் அதிகாரத்தையும் வழங்குகின்றன. மாணவர்களின் ஆற்றலையும் ஆர்வத்தையும் தெரிந்துகொண்டு அவர்களைச் சரியாக வழிநடத்துகின்றன. இவை ஏன் "மாற்று முறைகளாக" வழங்கப்படுகின்றன? இவையல்லவோ சரியான முறைகள்?

என் பள்ளியாசிரியர்கள் மேல் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆனாலும் எனக்கு எல்லாப் பாடங்களும் புரிந்ததில்லை - குறிப்பாக அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் புரிந்தவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு தேர்வெழுதினேன். புரியாதவற்றை முயன்று தெரிந்துகொள்ளச் சோம்பலும் தடையாயிருந்தது. பள்ளிப் படிப்பு இன்னும் ஆர்வமளிப்பதாக இருந்திருக்கலாமே என்கிற அங்கலாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் பள்ளிப்படிப்பு சரியாக அமைந்துவிட்டால் ஒரு மாணவர் அதற்குமேல் நல்ல முடிவுகளை எடுக்கமுடியும் என்று நம்புகிறேன். இப்போது மாணவர்கள் தங்களுக்கு இன்ன படிப்புத்தான் வேண்டும் என்று திண்ணமாக இருப்பது பொறாமையாக இருக்கிறது. இந்த 'வெவரம்' நமக்கில்லாமல் போய்விட்டதேயென்று. எல்லாப் படிப்பிற்கும் வாய்ப்பும் மரியாதையும் இருக்கிறது என்கிற புதிய வழக்கமும் நம்பிக்கை தருகின்றது.



---

ஜோசப் எப்ஸ்டெயின் என்கிற அமெரிக்கக் கட்டுரையாளர் / இலக்கிய விமர்சகரைப் பக்கத்துவீட்டு மலையாள நண்பர் அறிமுகம் செய்துவைத்தார். இவர் கட்டுரைத் தொகுப்புகளைத் தேடித்தேடிப் படிக்கிறேன். ஜான் ஓ ஹாரா (John O'Hara) பற்றிய ஒரு கட்டுரையில் இப்படிச் சொல்லுகிறார்:

His great dream of going to Yale was shattered when his father, at the age of 57, died of Bright's disease, leaving heavy debts in his wake. No Dink Stover, no boola-boola for O'Hara, who seems never quite to have got over missing out on Yale. A story—O'Hara tells it himself—has it that Hemingway, Vincent Sheean, and James Lardner pooled their money to go off to Spain but had an odd two francs left over, causing Hemingway to say: "Let's take the bloody money and start a bloody fund to send John O'Hara to Yale."

இதைப் படித்ததும் பழைய ஐயையெஸ்ஸி நினைவுகள் கிளர்ந்தெழுந்தன. நாற்பத்துநான்கு வயதில் (இருபது சொச்சங்கள் 'அங்கிள்' என்று விளிக்கும்போது வயது இன்னும் உறைக்கிறது) எனக்கு உருப்படியான எதையேனும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. பிடிக்காத, வராத வேலையை இருபதாண்டுகளாகச் செய்து, அம்மாவின் (எனக்கான) கனவைச் சிதைத்தது, மற்றும் மிகுந்த சிரமத்துக்கிடையில் எனக்கு நல்ல படிப்பை வழங்கத்தயாராயிருந்த பெற்றோரின் பணத்தை விரயம் செய்தது என்பனவற்றுக்கான கைம்மாறு செய்தாகிவிட்டது. பைத்தியம் பிடித்துவிடும் நிலையில் வாழ்க்கையில் உருப்படியாக என்ன செய்யலாம் என்று (ரூம் போட்டு) யோசித்ததில் ஒன்றும் தேறவில்லை. Follow your passion என்று சிலர் உசுப்பேற்றி மனது ரணகளமாகியிருந்தது. பெருநிறுவனச் சமூகப் பொறுப்புணர்வு (CSR) சார்ந்து நான் பணியாற்றிய நிறுவனத்தில் தொண்டூழியம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இது நான் பணியாற்றிய நிறுவனத்தின் CSR கிளையை நிர்வாகம் செய்யும் வாய்ப்பு. இதிலே பெரிதும் ஈர்க்கப்பட்டு , தொடர்ந்த சிந்தனையின் நீட்சியாக உலகத்தின் பேண்தகுநிலை (sustainability) தொடர்பான வேலை செய்யவேண்டும் என்று இரண்டாண்டுகளாக இருந்த வேலையை விட்டுவிட்டு வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறேன். சுற்றுச் சூழல் நிர்வாகம் தொடர்பான முதுகலைப் படிப்பொன்றின்மீது கண்ணாக இருக்கிறேன். ஓ ஹாராவின் நண்பர்கள் போல வீட்டில் மனைவியும் மக்களும் எப்பாடுபட்டாவது என்னை எனக்கு விருப்பமான படிப்பை படிக்கச் செய்து என் புலம்பலில் இருந்து விடுதலை பெறத்தவிக்கிறார்கள்.

----

என் பிள்ளைகளுக்கு (இரண்டு பெண்கள்!) எதையும் திணிக்கக்கூடாது என்பதில் திண்ணமாக இருக்கிறேன். அவர்கள் விரும்பும் துறையில் அவர்கள் ஆர்வத்தைப் பொறுத்து  வேண்டியவற்றைச் செய்துகொடுக்கவேண்டும் என்கிற முனைப்பு இருக்கிறது. பள்ளிப்படிப்பில் மதிப்பெண்களைவிட கற்றலே முக்கியம் என்று சொல்லித்தருகிறேன். எதையுமே விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் செய்யவேண்டும் என்பதையும் அவர்களுக்குச் சொல்லுகிறேன். சகமனிதரிடத்தும் எல்லா உயிர்களிடத்தும் அன்போடும், புரிந்துணர்வோடும் இருக்கவேண்டும் என்று எப்போதும் நினைவூட்டுகிறேன். என்னால் முடிந்தவரையில் அவர்கள் கல்விப்பயணம் இனிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கவேண்டும் என்று பார்த்துக்கொள்ளுகிறேன். இவர்களை புவியின் நல்ல குடிமக்களாக ஆக்க வேண்டும் என்றும் விழைகிறேன்.

சராசாரி ஐடி குமஸ்தனாக என்னால் முடிந்தது இதுவே. போய் எல்லாரும் புள்ள குட்டிங்களப் படிக்க வையுங்கப்பா!

(படங்கள்: (c) மகேஷ் பாபு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க