இரண்டு மாதங்களுக்கு முன்னால் அது நிகழ்ந்தது. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் என் மோட்டார் சைக்கிள் யாரோ கழுத்தைத் திருகியது போல நின்றுவிட்டது. கடந்த ஒருவருடமாகவே அவ்வப்பொழுது சின்னதாக பிரச்சனைகள் கொடுத்து வந்தாலும், இப்படி ஒன்றும் செய்ய இயலாத படிக்கு நின்றதில்லை. ஐயாயிரம் ரூபாய் கொடுத்துப் பழுது பார்த்தேன். ஒரு மாதம் ஓடியபின் மீண்டும் கழுத்து நெரிபட்டது போல நின்று விட்டது. இதை இன்னும் பழுது பார்த்து வைத்துக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலும், அது பண விரயமே என்று தோன்றுகிறது. பத்து வருடங்கள், அறுபதினாயிரம் கிலோமீட்டர்கள்... மிகவும் நன்றி கெட்டவனாக உணருகிறேன் - இதைப் பிரிவதற்குத் தயாராகிவிட்டேன். ஒரு அற்புத விளக்கு கையைவிட்டுப் போவது போலவும், இதனால் இதுவரை கிட்டிய அதிட்டங்களும் இனிமேல் கிட்டாது போலவும் தோன்றுகிறது. எல்லா நல்ல விடயங்களுக்கும் முடிவு உறுதி போலும். இதைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம் பழைய வேகத்தையும் உற்சாகத்தையும், வேட்கையையும் மீட்க முடியும் என்று நம்புகிறேன். எவ்வளவு முயன்றாலும் மீண்டும் கிட்டுமோ இளமை? (எனக்கும் அதற்கும்) வாழ்க்கையின் கடிவாளமிப்படாத பகுதியின் முடிவை...
கண்ணன் தட்டினது!