கபாலி வெளியாவதற்கு முன்னால் இயக்குனர் பா. இரஞ்சித்தின் நேர்காணல் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. கபாலி உருவான கதையையும் அதைப்பற்றிய சில தகவல்களையும் சொன்னார். கபாலிக்கு முன்னான அவரின் இரு படங்களும் ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலைப் பேசுவதாகவே இருந்திருக்கின்றன - வெகு சினிமாவிற்குள்ளேயே இதைச் செய்திருப்பதே இரஞ்சித்தின் கலை என்று நான் நினைக்கிறேன். அப்படியல்லாமல் இருந்திருந்தால் அந்தப் படங்கள் ஆவணப்படங்கள் போலாகியிருக்கும். எல்லோரும் துய்க்கும் வண்ணமே அவர் கலைப் படைப்புகள் இருப்பதால், அவை சொல்லும் செய்தி எல்லோருக்கும் எட்டுகிறது.
"பொழுதுபோக்கு அம்சங்கள்” என்று சினிமாக்காரர்களே வகுத்திருக்கும் சமன்பாடு ஒன்றிருக்கிறது - சண்டை, நகைச்சுவை, நடனம், பாடல்கள், குத்தாட்டம் (ஐயிட்டம் சாங்), என்று. இப்படியான ‘வசூல்’ குவிக்கும் படங்களின் அதிக விலை போகும் சந்தைப்பொருளாக இரஜினி ஆகிவிட்டார். அப்படியான நட்சத்திர மதிப்பீடு உள்ள நடிகரை வைத்துப் படமெடுப்பதில் சில சமரசங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட எந்த சமரசங்களையும் தாம் செய்துகொள்ளவில்லை என்று இரஞ்சித் தன் செவ்வியின்போது சொன்னார்.
இரஞ்சித்தின் அடுத்த படைப்பில் இரஜினி இணைகிறார் என்று கேட்டதுமே (அப்போது ‘கபாலி’ என்ற தலைப்பே அறிவிக்கப்படவில்லை) என் நினைவுக்கு வந்தது முள்ளும் மலரும் காளி தான். வாட்சாப்பில் அப்போது ‘இரஞ்சித் காளியை மீட்டெடுப்பார் என்று நம்புவோம்’ என்று நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன். முள்ளும் மலரும் படத்தில் இரஜினியின் நடிப்பினால் மிகவும் கவரப்பட்டதாகவும் அந்த இரஜினியை முடிந்த வரையில் மீட்டெடுக்க விழைந்ததாகவும் அவர் சொன்னது, என் போன்ற இரஜினி வெறியர்களின் ஏகோபித்த விழைவுகளின் சாரமே. மேலும், இரஞ்சித்தும் என்னைப்போல் காளியையே யோசித்திருந்ததும் வியப்பாக இருந்தது.
சரிதான், கன்னங்கரேலென்ற நிறத்துடன் இருக்கின்ற, சமூக மற்றும் பொருளாதார அடுக்கின் கீழிருக்கும் காளிக்கும், வெள்ளைவெளேரன்ற, சமூக அடுக்கின் உச்சியிலிருக்கும், பொருளாதார அளவில் காளியை விட மிக உயர்ந்த நிலையில் இருக்கும் இஞ்சினியருக்குமான அதிகாரப் போராகவே அப்படைப்பை (முள்ளும் மலரும்) வாசிக்க முடிந்தது. வெளிப்படையாச் சொல்லாவிட்டாலும், நிற, சமூக, மற்றும் பூடகமான சாதி அரசியல், மற்றும் போராட்டத்தின் குறியீடாகவே அது தெரிந்தது. அப்படியான சமூகச்செல்வாக்கு உடையவர்களின் கையிலே அதிகாரமும் தங்கியிருந்ததும், அந்த அதிகாரத்திற்கும், ஒடுக்குதலுக்கும் அடிபணியாத, எந்தச் சூழலிலும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவனாகக் காளி இருந்ததும் எனக்குள் (பலருக்கும்) பெரும் தாக்கத்தை உண்டு செய்திருந்தது. “நீங்கள் என்னை உடல்ரீதியாகத் துன்புறுத்தினாலும், என் மரியாதையையும், மதிப்பையும் நீங்கள் பலவந்தமாகப் பெற முடியாது” என்கிற நிலையிலேயே காந்திய அகிம்சைப் போராட்டம் இருந்தது. காளியிடமும் இந்த இறுமாப்பு இருந்தும், தங்கையை இஞ்சினியர் தன் அனுமதியின்றி மணக்கும் நிலை வரும்போது இடிந்து போகிறான். அது ஒரு வகையான அதிகாரத்தின் பெயரிலான அத்துமீறலாகத் தெரிகிறது. கடைசி நேரத்தில் தங்கை “எனக்கு என் அண்ணன் போதும்” என்று வந்துவிடும் போது சுயமரியாதை மீட்டெடுக்கப்படுகிறது. அப்போது காளி திமிருடன் சொல்கிறான்: “இப்ப உங்க மூஞ்சிய எல்லாம் எங்கடா கொண்டுபோய் வச்சுக்கப்போறீங்க?” - இரஜினி ஒளிர்ந்த காட்சிகளில் இதுவும் ஒன்று.
இதனாலேயே ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் பேசும் கலைஞரின் இயக்கத்தில் இரஜினி நடிக்கப்போகிறார் என்றவுடன் காளி பலரின் நினைவுக்கு வந்திருக்கக்கூடும். கபாலியைத் தொடர்ந்து காலாவும் இரஜினி என்ற கலைஞனை மீட்டெடுக்கும் என்று நம்புவோம்.
இரஜினியைப் பொறுத்தவரையில் தாம் நடிக்கும் திரைப்படங்களின் அரசியலுக்கும் தமக்கும் எத்தொடர்பும் இல்லையென நிரூபித்து வருகிறார். இதுவும் நல்லதுதான். அவர் அரசியலில் பெரிதும் பொருட்படுத்தப்பட வேண்டியவர் அல்ல என்பதே என் கருத்து. மறைந்த சோ, மற்றும் குருமூர்த்தி முதலானவர்கள் ஆலோசனைப்படி நடப்பது அவர் அரசியலில் அழிவை விரைவில் தேடித்தரும் என்றும் நம்புகிறேன்.
தமிழக அரசியலில் தன்னளவில் வலுவான திராவிடக் கட்சியே (திமுக) மக்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்று விழைகிறேன். பிராந்தியக் கட்சிகளே மாநிலங்களில் ஆளவேண்டும். இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே முகம் என்ற பன்மைத்தன்மைக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட மத்தியக் கட்சிகளைத் தமிழகத்தில் அண்டவிடக் கூடாது என்பதே இப்போது முக்கியமானது.
கருத்துகள்