முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

101 கனவுகள் - 3. கெத்து

ஏதோ வேலையாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். வழியில் ஒரு வீடு. வீட்டிலேயே தட்டி வைத்திருந்தார்கள் - ‘பேக்கரி’ ரொட்டிகளும் ‘கேக்’குகளும். உடன் இருந்த யாரோ சொல்கிறார்கள், அது நல்ல இடம் என்றும், முன்பதிவு இல்லாதவர்களுக்கு ஒன்றும் கிட்டாது என்றும். வீட்டிலே குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிப்போகலாமே என்ற எண்ணத்தில் அழைப்பு மணியை அழுத்தினேன்.

கதவைத் திறந்துகொண்டு ஓரிளம்பெண் சிரித்துக்கொண்டே வந்தாள். பின்னோடு முண்டா ‘பனியன்’ அணிந்த ஒருவர் வந்தார் - அந்தப்பெண்ணின் தகப்பனாயிருக்கக்கூடும். அவரிடம் ஆங்கிலத் துரையே வெட்கும் ஆங்கிலத்தில் கேட்கிறேன்:

“இங்கிருந்து வாங்கிப்போக ஏதும் கிடைக்குமா?”

“நிச்சயமாக. நீங்கள் ஏதும் முன்பதிவு செய்திருக்கிறீர்களா?”

இதற்கு நான், “மன்னிக்க வேண்டும். போகும் வழியில் எதேச்சையாக இந்தத் தட்டியைப் பார்க்க நேர்ந்தது, அதனால் வந்தேன்” என்றேன்

அவர் கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கண்ணாடியை மூக்கின்மேல் பொருத்திக்கொண்டு “உங்களுக்காக என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன்” என்று உள்ளே போனார்.

அந்தப் பெண் என்னை உள்ளே உட்கார அழைத்தாள். உள்ளே கண்ணாடிப் பெட்டிகளில் ரொட்டிகளும் பற்பல குளிர்பதனப் பெட்டிகளில் ‘கேக்குகளும்’ நிறைந்திருந்தன. 

அவர் சொன்னார், “உங்களுக்கு ஒரு  கிலோ அளவுள்ள இந்த ‘பேஸ்ட்ரி’ மட்டுமே தரமுடியும். இதை வாங்கிக்கொள்ளுகிறீர்களா?” என்று ஒன்றை நீட்டினார். சதுர வடிவில் ‘சாக்லேட்’ மற்றும் பாதாம் பருப்புகள் தூவிய மேற்பரப்புடன் பார்க்க நன்றாகவேயிருந்தது.

“சரி, இதை வாங்கிக்கொள்ளுகிறேன், நன்றி” என்றேன்.

அதற்கு அவர், “இதன் விலை சற்றே கூடுதலானது. உங்களால் வாங்க முடியுமா?” என்றார்.

எனக்கு அவர் அப்படிக்கேட்டது பிடிக்கவில்லை. அந்தப்பெண் நான் என்ன சொல்லப்போகிறேன்  என்று என்னையே பார்த்தவண்ணம் இருந்தாள்.

சற்றே இறுமாப்புடன் சொன்னேன் “விலையைப் பற்றிக் கவலையில்லை”.

“நல்லது, நீங்கள் நேரில் வந்ததால் நாற்பது சதம் தள்ளுபடி செய்து தருகிறேன்” என்றபடி தாளில் ஏதோ கணக்குப் போட்டுவிட்டு எனக்குக் காட்டினார். 

ரூ 24,150 என்றிருந்தது!

திகைப்புடன் அவர்களைப் பார்த்தேன். விலையை முதலில் கேட்டிருக்கலாம், இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே! தள்ளுபடியில்லாமல் நாற்பதாயிரம் ரூபாயா ஒரு கிலோ ‘கேக்’?  அநியாயம்!!

ஆங்கிலத்தில் பேசியிருக்கக் கூடாது. சரியான முட்டாள் என்று நினைத்துவிட்டார்களா? இப்படியும் ஏமாற்ற முடியுமா? என்ன சொல்லி நழுவலாம் என்று யோசித்துக்கொண்டே காற்சட்டைப் பையில் இருந்து ‘பர்சை’ எடுத்தேன். திறந்து பார்த்தால் துடைத்து வைத்தமாதிரி இருந்தது. கடன் அட்டைகளை எல்லாம் எதனாலோ எடுத்து வைத்துவிட்டுக் கிளம்பியிருக்கிறேன். 

சட்டென்று யோசனை வர, “மன்னிக்கவேண்டும் கடன் அட்டை எடுத்து வரவில்லை. வீட்டுக்குப் போய் எடுத்துவருகிறேன்” என்று பதிலுக்குக் காத்திராமல் வெளியேறி வீட்டுக்கு ஓட்டம் பிடித்தேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

  டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.  இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான். Ejercicio cerebral para las personas mayores. pic.twitter.com/wEMLDTjti0 — Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025 இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு. மூதாட்டிகள்      - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது) மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை   அநிச்சயமான காடுகளில் இருந்து  தெளிவற்ற குறிகளும் சொல்வதில்...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...