முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

101 கனவுகள் - 4. கி பி 2050



பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க “hovercraft” ஒன்றைச் சோதனை செய்து வருகிறார்கள் என்ற செய்தியைப் படித்த நினைவு இருந்தது.

சாலையில் எனக்கு முன்னால் ஒரு கரும்பச்சைக் கண்டெயினர் (பெட்டி மட்டும்) காற்றில் மிதந்துகொண்டு சென்றது. சில இடங்களில் சாலையை விட்டு நன்றாக மேலெழும்பியும் சிலவிடங்களில் சாலையைத் தேய்த்துக்கொண்டும் போனது.

இதைத் திடீரென்று ஒரு நாற்சந்தியில் நிறுத்தி வண்டியைத்திறந்து ஒரு வினோத உயிரினத்தை வெளியில் இறக்கினார்கள். 

ஒரு பெண்ணும் உடன் இறங்கி வந்து “வாருங்கள் எல்லோரும் இதைக் கொஞ்சுங்கள்” என்று அதட்டினார்.

மாடு மாதிரி இருந்தாலும் மனித முகமும் கொம்புமாக படுபயங்கரமாக இருந்தது. இதை எப்படிக் கொஞ்சுவது? பெரியவர் ஒருவர் அருகில் சென்று வருடிக்கொடுத்தார். உடனே அது சிலுப்பிக்கொண்டு ஏதோ மொழியில் திட்டிக்கொண்டே அவரை முட்டித்தீர்த்துவிட்டது. 

எனக்கு அளவில்லாத ஆத்திரம். எப்படிப் பொதுவிடத்தில் இப்படிச் செய்யலாம்? உடன் இருந்தவர் சொன்னார், இதுவும் “hovercraft” செய்யும் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘கண்டுபிடிப்பாம்’. ‘எந்திர’ வாழ்க்கை வாழும் நாம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையற்று, பேசிக்கொள்ளுவதற்கும் நேரமில்லாமல் ஓடுவதனால் அரசு முன்னெடுக்கும் ‘socializing initiatives’ இன் பாகமாக இந்தப் புதிய உயிரினத்தை வெள்ளோட்டம் பார்க்கிறார்கள். இதென்ன கொடுமை என்று தலையிலடித்துக்கொண்டேன். 

இன்னும் கடுப்பாகி எல்லோரையும் முட்டித்தள்ளிக் கொண்டிருந்த அது என்னையும் பார்த்துவிட்டது. எதற்கும் முயன்று பார்ப்போம், அடியில்லாமல் பிழைத்தால் போதுமென்று என் காலால் அதன் விலாவில் சொறிந்து கொடுத்தேன். அப்போதுதான் அதன் முகத்தைக் கவனித்தேன். மீசை வைத்த ஒராள் முகம் அது. நான் சொறியச்சொறியக் கண்ணை மூடி அது அனத்திக்கொண்டே கோணியது. அதற்கு மேலும் பார்க்கச் சகிக்காமல் அருவெறுப்பில் அதை எட்டி ஓர் உதை விட்டேன்.

கால் எங்கோ பட்டு வலித்தாலும் அது கனவுதான் என்ற நிம்மதியில் வலியுடனே மறுபடி உறங்கிவிட்டேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...