என்னோடு நட்புப் பாராட்டுமுன் தெரிந்து கொள் - அல்ப்பத்தனம், பொறாமை, முன்கோபம், வெளி வேஷம் எல்லாங்கலந்த கலவை நான். என்னை ஒருநேரம் கடையில் நீ வாங்க நேர்ந்தால், இவைகளுக்கும் விலைகொடுத்து வாங்க வேண்டும் - தனியாய்க் கிடைக்கமாட்டேன். நான் சின்ன அறிவும் பெரிய ஆசையும் படைத்த, பல தவறுகளை இழைக்கிற, அவற்றை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கிற சாதாரணன். உந்தன் நட்புப் போர்வைக்குள் நான் வந்த பிறகு என்னுடன் வந்த என் சிறுமைகளை என் முகத்தில் எறிந்து காயப்படுத்தாதே. என் சிறுமைகள் அறிந்தும் நீ நட்பாய் இருப்பதிலேயே அச்சிறுமைகளைக் களையும் ஆசையும் உறுதியும் எனக்கு வாய்க்கிறது. எல்லாச் சிறுமைகளும் போக எனக்குள் எஞ்சி நிற்கும் மனிதத்தை நீ கண்டுகொண்டதன் அத்தாட்சி உன் நட்பு - இதுவே அச்சிறுமைகளைக் களைந்து அங்கே மனிதத்தை நிரப்புவதற்கான எனது பெரிய நம்பிக்கை. நான் இங்கே வருமுன்னரே மனத்தில் பலப்பல குப்பைகளை நிரப்பி வைத்திருக்கிறேன். இவைகளை ஒருநாளில் களைய முடியாது. மனத்துக்கண் நான் மாசிலன் ஆக ரொம்பக்காலம் பிடிக்கும். ஆனால் அதுவரை நீ என்மேல் நம்பிக்கையுடன் இரு, நெறிப்படுத்தும் நட்பே!
கண்ணன் தட்டினது!