முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விறகுகள், மண்ணெண்ணெய், அப்புறம் கொஞ்சம் சாணி - நினைவலைகள்


உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு, உழைப்பில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் சித்திரங்கள் பகிரப்பட்டன. அதிலே சாணி தட்டும் பெண்ணின் படம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. இது சிறுவயது நினைவுகளைக்கிண்டிவிட்டது.
கூட்டுக்குடும்பத்தில் பாட்டியின் பராமரிப்பிலேயே சமையலறை இருந்தது. மாமா, பெரியம்மா, மற்றும் அம்மா ஆகியோர் வேலைக்குப் போய் அவரவர் பங்குகளைக் கொடுத்து ('என்னுடையதை நீ எப்படி எடுக்கலாம்?' என்று சோப்புக்கும் பற்பொடிக்கும் சண்டை போக) வீட்டுச் செலவு நடந்துகொண்டிருந்தது. இப்படியாக, உழைக்கும் பெண்களின்சித்திரம் சிறுவயதிலேயே எனக்குள் பதிந்துவிட்டிருந்தது.

வீட்டுவேலைகள் போக பாட்டி வரசித்தி விநாயகர் கோயில் வாசலில் நின்று யாருடனேனும் பேசிக்கொண்டிருப்பாள். பேசிக்கொண்டிருந்தாலும் செட்டிபாளையம் சாலையில் போகும் மாட்டுவண்டிகளின் மேல் பாட்டி கவனமாக இருப்பாள். மாடுகள் சாணிபோட்டால் அதை ஓடிப்போய்ச் 'சுடச்சுட' எடுத்து வருவது என் பொறுப்பு. இப்படியாகச் சேர்த்த சாணியை வட்டமாகத் தட்டி வீட்டின் பின்சுவற்றில் ஒட்டுவோம். அது காயந்தபின் அதுவும் மற்ற எரிபொருட்களோடு சேர்ந்துகொள்ளும். இந்தப் படத்தில் இருக்கும் பெண் சாணியைக் கலைநயத்துடன் சந்திரக்கலையாகப் பிடித்துவைப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்ன கவனமாகச் செய்கிறார்!

 ---

வீட்டிலே ஒரு மண்ணெண்ணெய் அடுப்பும் இரண்டு விறகடுப்புகளும் இருந்தன. பாட்டி மாதமொன்றிற்கு ஒரு மணு (பதினொன்று சொச்சம் கிலோ) விறகு வாங்குவாள். அதிலே குச்சி விறகு அரை மணுவும், உடைத்த விறகு அரை மணுவுமாக கொண்டுபோட பெரியமுத்து விறகுக்கடைக்குப் போகச்சொல்லுவாள்.

பெரியமுத்து ஊரில் பெரியமனிதர். வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டி உறுப்பினர்; சாயங்காலம் கோயிலில் நடக்கும் கச்சேரிகளில் மிருதங்கம் வாசிப்பவர். சிறிய மைதானம்போல் இருக்கும் கடையின் ஓரத்தில் ஓடு வேயந்த தாழ்வாரத்தில் மரமேசை போட்டு உட்காரந்திருப்பார். தரையெங்கும் கொட்டிக்கிடக்கும் மரச்செதில்களை ஐந்து காசு கொடுத்துப் பை நிறைய அள்ளிப்போவார்கள். மேசைக்கு முன்புறமாகப் போட்டிருக்கும் நீள்பெஞ்சில் அம்மாக்கள் குழந்தைகளுடன் காத்திருப்பர். மைதானத்தின் நடுவில் பெரிய்ய தராசு. அதற்கு அருகில் அரை டவுசர் மட்டும் போட்ட, வயிறு சுருங்கிய, நான் அப்போது தாத்தா என்று விளிக்கத் தகுந்த ஒருவர் விறகு வெட்டிக்கொண்டிருப்பார். கோடாலி கொண்டு பெரிய மரத்துண்டை அளவெடுத்தாற்போல சின்னத் தடிகளாகப் பிளப்பது எனக்கு வேடிக்கை. ஒவ்வொரு முறையும் கோடாலி உயரே எழும்பிச் சரியாக முன்னால் பிளந்த இடத்திலேயே விழுவது எனக்கு ஆச்சரியம். கோடாலி இறங்குவதுடன் கிழவரின் மூச்சிரைப்பும் "ரப், ரப்" என்று கடையின் ஆகப் பெரிய ஒலியாய் இருக்கும். பெரியமுத்து தன் கையில் உள்ள ஓலைச்சுவடிக் கட்டைக் குழந்தைகள் தலையில் வைத்து 'மந்திரித்து' வெண்கலப்பெட்டியிலிருக்கும் திருநீற்றைப் பூசிவிடுவார். இதற்கு நடுவில்தான் நான் போய்நின்று 'அர மணு குச்சி, அர மணு ஒடச்சது - பாட்டி கொண்டாந்து போடச்சொன்னாங்க' என்பேன்.

 நான்கு மணியளவில் விறகுடைப்பவரே கைவண்டியில் விறகுகளை வைத்து இழுத்துக்கொண்டுவந்து வீட்டில் இறக்குவார். பாட்டி அதை வெளியிலேயே வெயிலில் வரிசையாகப் போட்டுக் காயவைப்பாள். ஐந்தரை மணிக்கு அவை சமையல் மேடையின் கீழ் அடுக்கப்படும். அதற்கும் பாட்டி என் போன்ற வீட்டு வாண்டுகளைத் தயார் செய்திருந்தாள். ஒரு வாண்டு விறகுகளை இன்னொன்றின் விரித்த கைகளில் அடுக்க, விறகுடன் வாண்டு பாட்டியிடம் போக, பாட்டி அதைவாங்கி அடுக்கிக்கொள்ளுவாள்.

---

மண்ணெண்ணை வாங்குதல் இன்னொரு இம்சை. பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடனே குடிக்க ஏதாவது கொடுத்து 'ரேசன்' கடைக்கு அனுப்புவாள். சில நாட்களில் வேறொருவரின் 'ரேசன்' அட்டையைக் கடன் வாங்கி அதற்கும் நாங்கள் போகவேண்டியிருக்கும்.

ஒருமுறை கோவை ராமநாதபுரத்தில் 'ரேசன்' வாங்க என்னையும் சஞ்சீவனையும் (சித்திமகன்) அனுப்பினார்கள். அந்த மாதம் யாருடைய 'ரேசன்' அட்டையையோ கடன்வாங்கியிருந்தாள் பாட்டி. நஞ்சுண்டாபுரம் வழியாகப் போனால் வீட்டிலிருந்து ஆறு கி.மீ. தான். இவ்வழியில் ஒரேயொரு பேருந்தும். அதற்குச் சரியாகத்தான் காசு கொடுத்துவிட்டார்கள்.

அன்றைக்குக் கடையில் சர்க்கரை தவிர எதுவும் இல்லை - நீள்வரிசையில் நிற்காமல் ஐந்து நிமிடங்களில் வேலை முடிந்த களிப்பில் இவனிடம் சொன்னேன் "சஞ்சீவா, இங்கிருந்து நஞ்சுண்டாபுரம் ரொம்பப் பக்கம்; நாம நடந்து போயிரலாம்; அங்கருந்து ரயில் தண்டவாளத்துமேல நடந்துபோனா வீட்டுக்கு இன்னும் பக்கம்; பஸ் காசுக்கு ஏதாவது வாங்கித்திங்கலாம்"

சஞ்சீவன் உடனே ஒப்புக்கொண்டான். சட்டைப் பைநிறைய தேன்மிட்டாயோ எதுவோ வாங்கிக்கொண்டோம். ஒரு கி.மீ. நடப்பதற்குள் சஞ்சீவன் மிட்டாயெல்லாம் தின்றுதீர்த்துவிட்டான். கால் வலிக்கிறதென்று புலம்ப ஆரம்பித்தான். நான் எப்படியெல்லாமோ அவனைச் சமாதானப் படுத்த முயன்றேன். ஒன்றும் வேலைக்காகாமல் என் பங்கு மிட்டாயிலிருந்தும் கொஞ்சம் கொடுத்தேன்.

நான் ரஜினி ரசிகன். ஒன்றரை வயது இளையவனான சித்தி மகன் சஞ்சீவன் கமலா ரஜினியா என்ற குழப்பத்தில் இருந்தான். "ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை வச்சா யாரு ஜெயிப்பாங்க?" என்று அவன் எப்போதும் கேட்கும் கேள்விக்கு "கண்டிப்பா ரஜினிதான்" என்ற என் பதிலில் அவனுக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. இதனாலேயே ரஜினியுடன் கமலும் இணைந்து நடித்த பல கற்பனைத் திரைப்படங்களின் கதைகளை (கதை, வசனம், பாடல்கள்(!) எல்லாம் நானே) அவனுக்குச் சொல்லுவேன். கமல் ரஜினியிடம் தரும அடி வாங்கும் காட்சிகளை மிகைப்படுத்திச் சொல்லுவேன். அதில் அவனுக்குச் சந்தேகம் வந்தால் இருவரும் நட்பாயிருந்து ரவுடிகளிடம் இருந்து கமலை ரஜினி காப்பாற்றும் காட்சிகளை வைத்து அவனுக்கு நம்பிக்கையூட்டுவேன். இப்போதும் இந்த மாதிரி கதையில் இலயித்து இன்னும் கொஞ்ச தூரம் நடந்துவிட்டான். அப்புறம் அதுவும் பிடிக்காமல் சாலையோரத்தில் உட்கார்ந்து கொண்டான். அடுத்த பேருந்து வரும்வரை காத்திருந்து அதிலேயே போகலாம் என்று இவன் ஒற்றைக்காலில் நின்றான். இப்படி நடந்து போய் பஸ் காசில் வாங்கித்தின்பது என்னுடைய திட்டம் என்பதாலும், என்னவானாலும் மூத்தவனான எனக்கே அடி, திட்டு உறுதி என்பதாலும் எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ஒருவழியாக அவனைப் பேசிச் சரிக்கட்டி மீண்டும் நடக்க வைத்தேன்.

கடைசியில் அவன் சர்க்கரைப் பையினுள் கைவிட்டு ஒரு பிடி சர்க்கரையை எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் போட்டு மென்றான். மேலும் இப்படி எடுத்தெடுத்துத் தின்ன ஆரம்பித்தான். இது இன்னும் இரண்டு கி.மீ. தாக்குப்பிடித்தது. அப்புறம் இரயில் தண்டவாளத்தில் நடந்தது, நொய்யலாற்றுப் பாலத்தின் நடுவே இருக்கும்போது திடீரென்று இரயில் வந்து நாங்கள் ஒதுங்கியது போன்ற சாகசங்களில் நேரம் கழிந்து போத்தனூர் கடைவீதி வரை வந்துவிட்டோம். வீட்டுக்கு இன்னும் ஒன்றரை கி.மீ. காணாது. இவன் இதற்குமேல் நடக்க முடியாது என்று அடம் பிடித்தான். வேறு வழியில்லாமல் அங்கிருந்து இன்னொரு பேருந்தில் மிச்சமிருந்த ரேஷன் காசிலிருந்து சீட்டு வாங்கி வீடு வந்து சேர்ந்தோம்.

இரண்டு பேர் பேருந்தேறிப் போய் வந்து, அதிலும் ஒருவழிச் செலவுக்கான காசில் வாங்கித்தின்றது போக ரேஷன் கடையில் வாங்கிய ஒரே பொருள் இரண்டு கிலோ சர்க்கரை. அதில் அரைக் கிலோ சர்க்கரையை சஞ்சீவன் தின்று தீர்த்திருந்தான். எல்லாவற்றிற்கும் சேர்த்து நான் பாட்டியிடம் வாங்கிக்கட்டிக்கொண்டேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...