முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்?

செயமோகனின் கட்டுரையை முன்வைத்து:

செயமோகனின் கட்டுரைகளில் காணப்படும் பொதுமைப்படுத்தல்கள், தம் சொந்தக் கருத்துகளை முடிவான உண்மைகளாக முன்வைத்தல், பேசுபொருள் எதுவானாலும் தன்னையே முன்வைத்தல், தற்பெருமை பேசுதல், என்பவற்றைக் கடந்து, என்னால் அவர் கருத்துகளை சமனான மனநிலையில் அணுக முடிவதில்லை. எழுத்துச்சிக்கனமின்மையும் அவரைப் வாசிப்பதில் எனக்கொரு இடரே. இவற்றைத் தாண்டி இக்கட்டுரையை முழுதும் படித்து முடித்தேன். செயமோகனின் நீண்ட கட்டுரையில் சில விசயங்களில் எனக்கு நல்ல உடன்பாடு உண்டு. அதில் முக்கியமானது இது:

“பிராமண வெறுப்பு என்பது தலித்வெறுப்பின் மறுபக்கம். தலித் வெறுப்பு உள்ளடங்கி இருக்கிறது. பிராமண வெறுப்பு வெளிப்படையாக முற்போக்கு முகத்துடன் முன்வைக்கப்படுகிறது. பிராமண வெறுப்பு கொண்டவன் உறுதியாக தலித் வெறுப்பாளனே. தலித் வெறுப்பை கைவிடுபவன் பிறப்பு அடிப்படையில் எவரையும் வெறுக்கமுடியாதவன் ஆகிறான். அவனால் பிராமணர்களையும் வெறுக்கமுடியாது.”

கட்டுரையின் பல விசயங்களில் விமரிசனமுண்டு என்றாலும், அதை மேற்சொன்ன - எனக்குச் செயமோகனை வாசிப்பதில் உள்ள பிரச்சனை - சார்ந்தது என்பதால் அதைச் சொல்லப்போனால் இது செயமோக வெறுப்பு ஆகிவிடும். வெறுப்புக்கும் காழ்ப்புக்கும் எதிராகத் தானே இப்போது நம் நிலைப்பாடு?

ஆனாலும் இதை முன்வைத்துப் பொதுவாக பிராமணர் குறித்த சில வருத்தங்களைச் சொல்லுகிறேன்.

இந்தப் பலகால பிராமண எதிர்ப்பு / வெறுப்பினால் அவர்கள் அதிகாரத்தினின்றும் விரட்டப்பட்டிருக்கலாம், சமூகத்தில் அவமரியாதைகளையும் வசைகளையும் நேரிட்டிருக்கலாம், நாட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கலாம், பண்பாட்டைத் தக்கவைக்க அனுமதிக்கப்படாமலும் ஆகியிருக்கலாம். ஆனால் இக்காலம் தோறும் தம் சாதிக்குள்ளே எந்த விதமான சுயவிமரிசனங்களை, சீர்திருத்தங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள்? தங்களுக்கு மறுக்கபடும் உரிமைகளை ஏற்கெனவே இழந்து காலம் காலமாக ஒடுக்கப்படும் சாதியினரைச் சரிசமமாக நடத்தவும், அவ்வுரிமைகள் மற்றவர்களுக்கும் உடைத்தானவொன்று என்கிற பக்குவத்திற்கு வந்துவிட்டார்களா? இல்லை ‘தருக்கரீதியாக முன்னெடுக்கப்படும் பிராமண எதிர்ப்பு அரசியலுக்கு’ அறிவார்ந்த எதிர்வினை ஏதும் புரிந்திருக்கிறார்களா? இப்போது ‘தனிப்பட்ட பண்பாடாக’ அவர்கள் கொண்டாட விழைவது மேட்டிமைத்தனத்தையும், சகமனிதர்களைச் சூத்திரர்களாக விலக்கி வைக்கும் போக்கையும் சேர்த்துத்தானா? தமக்குள்ளேயே பல ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருக்கும் பிராமண சாதியிலே ஒற்றுமைக்காக ஏதும் செய்திருக்கிறார்களா?

பொதுவில் சாதிவெறுப்பு என்பது (அது பிராமண வெறுப்பானாலும், தலித் வெறுப்பானாலும்) இச்சுமூகத்திற்குக் கேடே. எந்தச் சமூகமும், சாதியும் இப்படிப்பட்ட காழ்ப்பை, வசைகளை எதிர்கொள்ளக்கூடாதுதான். அவ்வகையில் எந்தப் பிரிவினருக்கும் தம் உரிமைகளும், பண்பாட்டு அடையாளங்களும் மறுக்கப்படுவதை எதிர்க்கிறேன். பலவகைச் சாதிகளை ஏற்றத்தாழ்வின்றி, இம்மண்ணின் கலாச்சார, பண்பாட்டுப்பன்மைத்தன்மையின் கூறாகப் பார்க்கவும், இப்பன்மைத்தன்மையைக் கொண்டாடவும் ஒரு மனநிலை எல்லாச் சாதியினருக்கும் வாய்க்குமாயின் அதுவே நன்று. அப்படிப்பட்ட நிலையை எளிதில் அடைந்து மற்ற சமூகத்தினருக்கு எடுத்துக்காட்டாக இருக்க பிராமணர்களுக்கு எல்லாச் சாத்தியங்களும் உண்டு - செயமோகன் புகழ்த்திப் பேசும் அவர்களின் கல்வி ‘வழிபாட்டுத்தன்மையை’க் கொண்டு சொல்லுகிறேன். இவ்வளவு கற்ற, கற்பிக்கும் சமூகம் அறிவும் தருக்கமும் கொண்டு ஏற்றத்தாழ்வில்லாத சமூகத்தை ஏற்கவும் அங்கீகரிப்பதற்கும் ஏது தடை? இப்படிப்பட்ட நிலையை அடைந்துவிட்டு ஒட்டுமொத்த ஒடுக்கலுக்கு எதிராகக் குரல் கொடுத்தால் தோள்கொடுக்க ஆளில்லாமல் போகுமா?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...