முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விட்டு விடுதலையாகி...

...நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போலே!



தனிமனித சுதந்திரத்தின், உரிமையின் உண்மையான தேவையை உணர்ந்தவர்கள் பெண் விடுதலையின் இன்றியமையாமையையும் அறிவார்கள். ஒடுக்குமுறை என்பது உடல்வினை சார்ந்தது அல்ல - அது மனம் சார்ந்தது. அதற்கு எதிரான போராட்டம் ஒரு கருத்தாக்கத்திற்கு எதிரான போராட்டம். பெண்விடுதலை என்பது காலங்காலமாய் நம் சமூகத்தில் ஊறியிருக்கும் பெண்ணியல்புக் கருத்தாக்கங்களில் இருந்து நாம் ஒவ்வொருவரும் விடுதலையடைவதே!



பெண்களுக்கென்று எழுதப்படாத வாழ்க்கை விதிமுறைகளை, கருத்தாக்கங்களை கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் அவர்கள் மீது திணிக்கிறோம். தனிமனித உரிமை மற்றும் சுதந்திரம் குறித்து நரம்பு புடைக்கப் பேசும்போது, அச்சுதந்திரம் மற்றும் உரிமைகள் பெண்களையும் உள்ளடக்கியது என்பதை மறந்துவிடுகிறோம். பிறப்பால் உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்பதும் இப்படி வலிந்து திணிக்கப்பட்ட/படுகின்ற ஒரு சமூகக் கருத்தாக்கமே. கவனமாகப் பார்த்தால் இந்த இரண்டு ஒடுக்குமுறைகளுக்கும் வேராக ஒரு பொதுவான கருத்து வன்முறை தெரிகிறது.



ஒரு சமயம் தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறையை தனிமனித சுதந்திரத்திற்கு எதிராகப் பார்ப்பவர்கள், வேறொரு சமயம் பெண்களை மனிதராகப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். ஒருவேளை மனிதர்களின் சமூக ஏற்றத்தாழ்வுகள் மறைந்து விட்டாலும், பெண்களுக்கு எதிரான வன்முறை இருக்கும் வரை பேதம் பாராட்டும் போக்கு ஏதோ ஒரு வகையில் மனத்தில் ஒளிந்துகொண்டுதானிருக்கும் - என்றாவது கொடூரமாகத் தலைதூக்கும். ஆக, இவற்றில் ஒன்றை அடைந்து, இன்னொன்றை அடையாமல் இருப்பதில் உண்மையான சமவுரிமைச் சமுதாயம் காண்பதில் வெற்றி கிட்டாது.



சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை நாகரீகமடைந்த (அல்லது அப்படிச் சொல்லிக்கொள்கிற) சமூகத்தில் எவ்வளவு இகழ்வோ, அவ்வளவு இகழ்வு பெண்களுக்கு எதிரான வன்முறையும். இவ்விரண்டுக்கும் எதிரான போராட்டங்கள் தனிமனித உரிமை மற்றும் சுயமரியாதை என்கிற பொதுவான தேவைகளை முன்வைத்தது. இவற்றில் ஒன்றை ஆதரித்தும், இன்னொன்றைப் புறந்தள்ளியும் ஒழுகுபவர்கள் பொய்யர்களன்றி வேறில்லை.

முக்கியமானதொரு பின்குறிப்பு: பல காரணங்களினால் மேற்கூறிய கருத்தாக்கங்கள் சில என் மனதிலும் வேரூன்றியிருக்கின்றன. வெளிச்சத்தை நோக்கிய ஒரு பெரும்பயணத்தின் ஆரம்பநிலையிலேயே நானும் இருக்கிறேன். பெண்ணியம் பற்றிய சிலரின் எழுத்துக்களையும், தலித் இலக்கியங்களையும் இப்போதுதான் கடந்த சில வருடங்களாய்ப் படித்து வருகிறேன். அதன் வழியாக உலக நடப்புகளைப் புதிய கண் கொண்டு பார்க்கவும் பழகி வருகிறேன்.

கருத்துகள்

வானம்பாடி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் கண்ணன், அருமை.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சுதர்சன்!
இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன், மிகவும் அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். தெரிந்தோ தெரியாமலோ இந்தக் கருத்துருவாக்கங்கள் என்னுள்ளும் எங்கோ மூலைகளில் பதிந்து கிடக்கலாம். சமீப காலங்களில் அவற்றை இனங்கண்டுகொண்டு உள்ளுக்குள்ளேயே நசுக்கி எறிந்து விட முயல்கிறேன். இந்தப் பயணம் நீங்கள் சொன்னது போல் இன்னும் தூரம் அதிகம்.

வலைப்பதிவுகளும், வாழ்க்கையும் கூட இந்தக் கல்விக்குப் பெரிதும் உதவுகின்றன. ஒரு சமுதாயப் புரட்சி என்றில்லாமல் இது ஒவ்வொருவரின் மனதுள்ளும் நடக்க வேண்டும். அதுவே உண்மையான மாற்றத்திற்கு வழிகோலும். அந்த வகையில் உங்களது இந்தப் பதிவும், இது சொல்லும் சுயபயணங்களும் முக்கியம்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
//ஒரு சமுதாயப் புரட்சி என்றில்லாமல் இது ஒவ்வொருவரின் மனதுள்ளும் நடக்க வேண்டும். அதுவே உண்மையான மாற்றத்திற்கு வழிகோலும்.//
மிகச்சரி, செல்வா.

நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...