அளிவேணி (கருவண்டுகள் மொய்த்தாற்போலத் தோன்றும் கருஞ்சுருள்க் குழலாள்) - இவள் என் மனதுக்கு நெருக்கமானவள் - சுவாதித்திருநாள் இராம வர்மாவின் பல பதங்களில் உலாவருகிறாள். இவள் குழல் அடர்கரியநிறத்தது; கருவண்டுகளின் பொலிவிலானது. அல்லது, நான் கற்பனை செய்வது போல கருவண்டுக் கூட்டம் மொய்த்தாற்போலக் காணும் - அவளது சுருண்ட மயிர்கொண்ட நீள்குழல். அவள் அன்புருவானவள்,எழில் வடிவினள் கூட! ஆகவேதான் காதற்றலைவி அவளையே எப்போதும் நாடுகிறாள், தன் வருத்தம் சொல்ல. பாங்கி புவியளவு பொறையுள்ளவள், அன்புடனே எப்போதும் செவிசாய்க்கிறாள். அவள் தலைவியின் மரியாதைக்குரியவள் - மாநினி, மேதகிஇன்றும் விசனத்தோடே முறையிடுகிறாள். அந்தத் தாமரைக்கண்ணன் இவளைத் தவிக்கவிடுவதில் கிறக்கம் கொள்கிறான். ஒருவேளை இவள் தேன்மொழியாள், தன் தவிப்பை அழகான பாடலாக்குவதில் வல்லவள் என்பதால் இருக்கக்கூடும்.“அளிவேணீ எந்து செய்வு? ஹந்த ஞானினி, மாநினி!நளினமிழி ஸ்ரீ பத்மநாபன் இஹ வந்நீல்லல்லோ!!இந்து உதயாம் நிசயும், இந்திந்திரா விராவவும்மந்த மாருதனும், சாரு மலயஜா லேபனவும்குந்த ஜாதி சுமங்களும், கோமளாங்கி, சகி - த்ரிலோகசுந்தரன் வராஞ்ஞால், ஐயே, சொல்க, கிம்மே ப்ரயோஜனம்?”இனியதோர் மங்கிய மாலைப்பொழுது, பால்நிலாப் பொழியக் காத்திருக்கிறது. இது “இந்து உதயாம் நிச”! பெரிய வண்டுகளின் (இந்திந்திரா) ரீங்காரம் (விராவம்) மட்டுமே கேட்கிறது. இளந்தென்றல் (மந்தமாருதம்) வீசுகிறது, அது மலையிலிருந்து சந்தன மரங்களின் மணத்தைச் (சாரு மலயஜாலேபனம்) சுமந்து வருகிறது - இங்கே முல்லை வகையினான பூக்ககளை (குந்த ஜாதி சுமங்கள்) அது தழுவிக்கொள்ளுகிறது.இப்படி மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியும் அமைதியும் தரும் சூழல்! என்னே இனிமை, என்னே மேன்மை!என்னவிருந்தும் என் அழகுமேனியளே, பாங்கி, (கோமளாங்கி சகி) மூவுலகிற்கும் பேரழகன் (த்ரிலோக சுந்தரன்) வரவில்லலையானால் இவற்றினால் என்ன பயன் சொல்லு? (சொல்க, கிம்மே ப்ரயோஜனம்)தமிழல்லாத மற்ற தென்னிந்திய மொழிகளில் ஊடாடுவதற்கு வடமொழி அறிவு பெரிதும் பயன்படும். ஒரு பொருளுக்கு நிகரான மலையாள மொழிச்சொல் தெரியவில்லையானால் தயங்கமால் அதற்கான வடமொழிச்சொல்லைப் பயன்படுத்தலாம். அது அங்கே சற்றும் நெருடலின்றிப் பொருந்தும். சுவாதியின் மொழி அத்தகைய மணிப்பிரவாளமானது.இப்பாடலின் சரணத்தில் வரும் பொருட்களை வடமொழியில் குறிப்பிட்டு, (தமிழ் போன்ற) மலையாள விகுதிகளால் நிறைவு செய்கிறார். எடுத்துக்காட்டாக,நிசா என்பது இரவைக்குறிக்கும் சொல். இந்து உதயாம் நிசயும் - என்று நிலவு உதிக்கும் இரவை உம் விகுதி சேர்த்து மலையாளமாக்குகிறார். அதேபோல சுமா என்பது மலர் - சுமங்களும் என்ற பன்மை விகுதி சேர்த்து மலர்களும் என்று பாடுகிறார். எந்த மொழியும் தன்னளவில் நிகரற்ற அழகுள்ளது. சுமா, நிசா, இந்திந்திரா, என்ற சொற்கள் (தன்னளவில் மயக்கும் தன்மை கொண்டிருந்தாலும்) தம் தோற்றுமொழியினின்றும் விலகி இந்தவிகுதிகளால் நமக்கு நெருங்கியதாகிறது, நமதாகிப்போகிறது.இதற்கப்புறம்தான் இசை.குறிஞ்சி என்ற இராகத்தில் இதற்கு மெட்டமைத்திருக்கிறார்கள். இதன் குழைவு பாடலின் பொருளுக்கு மிகப் பொருந்திவருகிறது. இரவும் பகலும் கலக்கும் பொழுதை இசையால் உணர்த்துகிறது - 'இந்து உதயாம் நிசயும்' . 'இந்திந்திரா விராவவும்' என்று வண்டுகளாய் ரீங்கரிக்கிறது. 'மந்த மாருதமாக' இதமாக வருடிக்கொடுக்கிறது. இயல்பான நெகிழ்வுத்தன்மையுடைய இது தேர்ந்த பாடகர்கள் குரலில் தேனாய்க் கரைகிறது. இந்தப்பாடலைத் தனதாக்கிக்கொண்டவர் இந்தத் தங்கக்குரலுக்குச் சொந்தக்காரர்:இதன் இசைத்தன்மை கெடாமல் சீர்சீராகத் (நார் நாராய்க் கிழித்தல் என்பது சந்தர்ப்பவசமாக நினைவுக்கு வருகிறது) தமிழில் மொழிபெயர்க்கும் ஆசை (கழுத்தை நெரிக்கும் அலுவலக வேலைப் பளுவிற்கு மத்தியில்) நிறைவேறியது:அளிகுழலி என்செய்வேன், அந்தோ நானினி - மேதகி!முளரிவிழி பதும நாபன் இன்னும் வரவில்லை அரோ!!மிளிர் திங்கள் பொழியும் நிசியும், முரல் சோலை வண்டினங்களும்,குளிர் மலைத் தென்றலும், நறுசெந் சந்தன விழுதும்,கொடி முல்லைப் பூவினங்களும், எழிலோய் பாங்கி - என்வடிவழகன் வராவிடில், ஐயே, என்னே பயன்கொல்?சமையலில் கிள்ளிப்போட்ட கறிவேப்பிலை மணம் கையில் ஒட்டிக்கொள்வதைப்போல, கேட்டுமுடித்தும் இப்பாடல் வரிகளும், மொழியும், இசையும் கலந்தவொரு உணர்ச்சியாக மனதில் ஒட்டிக்கொள்ளுகிறது. குரங்குமனம் அதைப்பிடித்துத் தொங்குகிறது.
"கூடியவைரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது" - தமிழ் உரைநடை பற்றி பாரதியார் பாரதியின் உரைநடையில் இருக்கும் எளிமைக்கும், நேரடியான சம்பாஷணை உத்திக்கும் ஒரு அதி வசீகரம் இருக்கத் தான் செய்கிறது. இந்த வித்தையின் எளிய இலக்கணக் குறிப்பாகவே இந்த மேற்கோள் பயன்படும் என்று நினைக்கிறேன் - மட்டுமல்லாமல், இந்த எளிய குறிப்பு தெளிவாக எழுதவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது. என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது. சின்...
கருத்துகள்