முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெரி அமல்தேவ் - "மலரும் நினைவுகள்"

ஒருதலைராகம் வந்த நேரம் (கோவை கீதாலையா தியேட்டரில் 450 நாள் ஓடியது - அதனால், வந்த வருடம் என்று சொல்லவேண்டும்) படுத்த வாக்கில் இருக்கும் ஒலிநாடாக் கருவியை எங்கள் குடும்ப நண்பரொருவர் இரவல் தந்திருந்தார். கூடவே கொஞ்சம் நாடாக்களும் - அதிலே 60 நிமிடம் ஓடக்கூடிய நாடாவொன்றில் ஒன்றேகால் பக்கம் ஒருதலைராகம் பாடல்கள். மீதி முக்கால் பக்கத்தில் ஒருதலைராகம் நாயகன் சங்கர் நடித்து (பாசில் முதலில் இயக்கி, மோகன்லால் அறிமுகம் பெற்ற) பாடல்கள் பிரபலமடைந்த மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் பாடல்களைப் ‘பதிவு’ செய்திருந்தார்.

இரண்டுவார இரவலில் நாள்முழுதும் அதே நாடாவை தேய்த்திருக்கிறேன். வாசமில்லா மலரிது, ரீனா மீனா, கூடையில கருவாடு, குழந்தைபாடும் தாலாட்டு, கடவுள் வாழும் கோவிலிலே, நான் ஒரு ராசியில்லா ராஜா, என் கதை முடியும் நேரமிது என்று நாடாவில் வந்தபடி வரிசைக்கிரமமாகப் பாடுவேன் ("ஏண்டா உனக்கு வாயே வலிக்காதா?”). தொடரும் மலையாளப்பாட்டுகளை மனப்பாடம் செய்ய முடியவில்லை (மொழி அப்போது வசப்படவில்லை). ஆனால் மெட்டுகள் மனத்தில் அப்படியே தங்கிவிட்டன.

இன்றைக்கு ஏசியாநெட்டில் ஒரு நிகழ்ச்சியில் சங்கர். பழைய நினைவுகளை அவர் பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியில் "மஞ்சாடிக் குன்னில்" என்ற பாடலை இசைத்தனர். போத்தனூர், புளியமரத்தடி, கிரிக்கெட், செட்டிபாளையம் ரோட்டில் சாணி அள்ளியது, கோவில் வாசலில் சிதறுகாய் பொறுக்கியது, ஊர்க்கொட்டகை சினிமாவுக்காக ஒலிபெருக்கியுடன் வலம்வந்த குதிரை வண்டியின் பின்னாலே கோமண நீளமான நோட்டீசைப் பொறுக்க ஓடியது என்று பல அந்தக்கால நினைவுகள் வந்து மனத்திரையில் ஓடினாலும் இப்போது புரட்டிப்போட்டது யேசுதாசின் குரலும் பாடலின் இசையும். 

இப்படத்திற்கு (மஞ்ஞில் வி பூ) ஜெரி அமல்தேவ் (அறிமுகம்) இசையமைத்திருக்கிறார். எல்லாம் இரசிக்கும்படியான பாடல்கள். இப்போது விடுபட முடியாமல் இந்தப்பாட்டு 'லூப்'பில்:





ஜெரி அமல்தேவின் நௌஷாதிடம் internship செய்திருக்கிறார். (அப்போதைய) பம்பாயின் பாந்த்ரா கடற்கரைச் சாலையில் நடக்கப்போய் முன்னேற்பாடில்லாமல் நௌஷாத் வீட்டைக் கண்டுபிடித்ததை ஒரு தொலைக்காட்சி நேர்முகத்தின்போது சொன்னார் ஜெரி.  

இதை அறிந்த பிறகு ஜெரி (மஞ்ஞில் வி பூ - 1980)  மற்றும் நௌஷாத் (த்வனி - 1988) வெவ்வேறு காலகட்டத்தில் செய்த  இரு மலையாளப் பாடல்களின் ஒற்றுமையைக் கவனிக்கமுடிந்தது.  ஒற்றுமை என்று நான் சொல்லுவது மெட்டைக் குறித்த(மட்டும்)ல்ல - வாத்தியங்களின் தெரிவு மற்றும் வாத்தியச் சேர்க்கையில் (music arrangement) நௌஷாத்தின் நேர்த்தியை ஜெரி சரியாகக் கற்றுக்கொண்டிருக்கிறார் என்றுதான் கொள்ளவேண்டும். நௌஷாத்துடன் த்வனியில் ஜெரியே பணியாற்றியிருக்க வாய்ப்புள்ளது. ஜெரி சிறு வயது முதல் தேவாலயத்தின் சேர்ந்திசையைப் பாடி வந்தவர்; முறைப்படி இந்துஸ்தானி இசை பயின்றவர்; மேற்கத்திய இசையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அந்தக் கலவை உருசிகரமானது!

அந்த இரண்டு பாடல்கள்:




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...