மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.
எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப் இணைப்பு இங்கே:
புவிவரைபடங்கள்
- ரஃபீக் அஹமது (மலையாளம்)
மைகொண்டு ஒருவரும் இதுவரை
ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்
குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது...
எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்
அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை
நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது...
வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! - உருவ
ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,
பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ
போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்
அவற்றிற்கு இருக்காது
பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே,
துண்டிக்கப்பட்ட தலைகள் போலே,
கதறுகின்ற முகங்கள் போலே,
இறைச்சிக்கடையில் தொங்கவிடப்பட்ட மாமிசத் துண்டு போலே,
தலையில்லா
முண்டங்கள் போலே தோன்றும் - சிலவற்றைக்கண்டால்...
தெறித்துச் சிதறும் குருதிக்கு மிகச் சுலபமாக ஒரு
வரைப்படச் சித்திரம் ஆக முடியும் - வழிந்து
படர்ந்த கண்ணீருக்கும் அங்ஙனமே...
நேர்க்கோடானவொரு சிறிய கீறலினாற் போலும்
சீர்செய்ய முடியும் சித்திரம் வேறுள்ளதா?
இவ்வளவு தெளிவாக ஓர் அருவுருவமான படத்தை
யாராலும் வரைய முடியாது
எந்தப் புவிவரைபடமும்
புவியின் படம் அல்ல
புவியின் படத்தைப் பாருங்கள் - அதன்
உருண்டைத் தன்மை நம்மிடம் எதையோ
சொல்லவில்லையா?
இவரின் பிரபலமான திரைப்பாடலின் இணைப்பு இங்கே:
கருத்துகள்