முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash


கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார்.


அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது. 


உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?" 


அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!"


வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?" 


மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு)


"இதையெல்லாம் சேர்த்து இத்தன பெரிய ஒண்ணா வாங்கிக்கோ" என்று ஆசிரியர் அவன் கையில் ஆறு அடி கொடுத்தார்.


---


வாழ்க்கையின் ஆரம்பங்கள் ரம்மியமாய் இருப்பதன் காரணம் சலனமற்ற வெள்ளை மனதின் இந்தக் கற்பனை தானே? மனதில் மலரும் ஆயிரம் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும்  ஆயிரம் பதில்களும் இருந்தன. குழந்தைகளுக்கு இன்னும் இருக்கின்றன. அந்த சாத்தியங்களை எல்லாம் வயதும், 'பக்குவமும்' பாழடித்து விடுகின்றன. 'அலகிலா விளையாட்டின்' களிப்பிடமாக இருக்கும் உலகம் சுருங்கிச் சுருங்கி சொற்களை நெருக்கும் அடைசலான அறையாக ஆகிவிடுகின்றது. 


மஜீதும் சுஹராவும் இருக்கும் உலகம் எவ்வளவு விசாலமானது! அங்கே ஒன்றும் ஒன்றும், இன்னும் பலவும் ஒன்றேயாக இருக்கும் சாத்தியம் இன்னுமிருக்கிறது. பஷீரின் இன்னொரு கதையில் கெட்டியோன் குருவி, கெட்டியோள் குருவியைக் கொத்தப்போகிறது. அப்போது ஆட்சேபம் தெரிவிக்கும் பூனையிடம் குஞ்ஞுப்பாத்திமா என்கிற இன்னொரு பத்து வயதுக்காரி அலுத்துக்கொள்ளுகிறாள்: "சொன்னாக் கேக்காது, பாரு". 


மொழி மனிதர்களுக்கே (அதிலும், ஆண்களுக்கே) ஆனது என்று அவள் வயதான பின்னால் தெரிந்து கொள்வாள், ஆனால் அவள் வயதில் குருவிகளும், பூனைகளும், மரங்களும் செடிகளும் மலையாளம் பேசும்.


இதுபோல் பேசும், உயிருள்ள உலகை நினைக்கும்போது, பாரதியையும் நினைத்துக்கொள்கிறேன். அவன் ஒரு துண்டுக்கயிற்றிடம் பேசியவன்.


மனிதர்களிடம் இந்தக் குழந்தை மனது எப்போதும் இருந்தாலும், அது அடக்கிவைக்கப்பட்டிருப்பதால் நமக்குத் தெரிவதில்லை. பாரதியிடம் அது அடக்கப்படாமலேயே இருந்திருக்கவேண்டும்.


"ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக்கயிறு

தொங்குகிறது.

ஒரு சாண்கயிறு.

இந்தக் கயிறு, ஒருநாள் சுகமாக ஊசலாடிக் கொண்டிருந்தது.

பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

சில சமயங்களில் அசையாமல் ‘உம்’ மென்றிருக்கும்.

கூப்பிட்டாற்கூட ஏனென்று கேட்காது.

இன்று அப்படியில்லை. ‘குஷால்’ வழியிலிருந்தது.

எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் சிநேகம். நாங்கள்

அடிக்கடி வார்த்தைசொல்லிக்கொள்வதுண்டு.

“கயிற்றினிடத்தில் பேசினால், அது மறுமொழி சொல்லுமா?”

பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை." 


இவையெல்லாம்  'உம்மிணி பலிய ஒன்னு' என்ற பெரிய ஒன்றான உலகத்தின் நிதர்சனங்கள். 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் தமிழ் எழுத்து மேம்பட...

"கூடியவைரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது" - தமிழ் உரைநடை பற்றி பாரதியார் பாரதியின் உரைநடையில் இருக்கும் எளிமைக்கும், நேரடியான சம்பாஷணை உத்திக்கும் ஒரு அதி வசீகரம் இருக்கத் தான் செய்கிறது. இந்த வித்தையின் எளிய இலக்கணக் குறிப்பாகவே இந்த மேற்கோள் பயன்படும் என்று நினைக்கிறேன் - மட்டுமல்லாமல், இந்த எளிய குறிப்பு தெளிவாக எழுதவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது. என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது. சின்...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந...