முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐயோ பாலு!

 நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அடுத்துப் பழகிய குரல். ஒரு வேளை கருவிலிருந்தே கேட்கத்தொடங்கியிருக்கலாம் அவன் குரலை. எப்போதும் உடன் இருக்கும் என்று நம்பி, பெரிதாகப் பொருட்படுதப்படாத ஒன்று இல்லாதாகும் நிலை வந்தால் தான் அதன் அருமையும் தாக்கமும் புரிகிறது. 


அவன் அண்மையில் பாடியதைக் கேட்டதில்லை. ஆனால் அவன் இன்னும் எங்கோ உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருந்ததே  மனதிற்கு அமைதியைத் தந்தது. குரூரமான 2020 அவனையும்  விழுங்கக் காத்திருந்தது என்பது மனதை இதுவரை அறியாத உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது. நிழலாய் உடனிருக்கும் நெருங்கிய நட்பை இழக்கவிருந்தது போல் மனம் தவித்துவிட்டது. இந்தத் தவிப்பு புதியது - இப்படி உணர்வேன் என்று நான் எதிர்பாராதது. 


எல்லோரும் ஒருநாள் போகவேண்டியவர்கள் தான் என்று தெரிந்திருந்தாலும் இவனும் இறப்பான் என்ற எண்ணமே இதுவரை தலைக்காட்டாத்தது ஏனென்று புரியவில்லை. 


இசைக்குள் என்னை இழுத்த முதற்குரல் இதுவாகத்தான் இருக்கவேண்டும். 'சம்சாரம் என்பது வீணை' பாடலைப்  பல வீடுகள் இருந்த 'காம்பவுண்டில்' 6 வயதுச் சிறுவனாக நான் பாடித்திரிந்ததை அக்காள் இன்னும் சொல்லிச் சிரிப்பாள்.  சொல்லவொண்ணா இன்பத்தில் ஆழ்த்திய பல பாடல்களுக்கு என்னவென்று நன்றி சொல்வது? 


ஒன்றும் சொல்வதற்கில்லை, விடை கொடுக்கவும் மனதில்லை... 


அவன்மேல் அன்பு வைத்திருக்கும் பல்லாயிரங்களில் ஒருவனாக - உங்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...