முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது.


சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்…

உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது.

எனக்கு
யாருமில்லை
நான்
கூட..

யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை கொடுமையானது. அதைவிடக் கொடுமையானது நோய். இவற்றின் வலிகளைப் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. உறவுகளாலும் நட்பாலும் எந்நேரமும் சூழப்பட்டிருந்தாலும் துன்பத்தருணங்களில் தனித்தே உழல வேண்டியிருக்கிறது. ஆனாலும் மனித உறவுகளால் சில நேரம் மனது திடம் கொள்ளுகிறது. வாழ்க்கை சாவில் எப்போதும் முடிந்துவிடும் நிலையற்ற தன்மை இருந்தாலும், நோய்வாய்ப்படும் உடல் என்கிற சுமையை வைத்துக்கொண்டு, சொற்பமாகவே நிகழும் மகிழ்ச்சித் தருணங்களுக்கான நம்பிக்கையில் வாழ்வு உழல்கிறது. நல்ல நட்பினாலும் சில உறவுகளினாலும் இந்த அற்ப வாழ்வின் மீது பிடிப்பு ஏற்படுகின்றது.

“இன்னும் எத்தனை காலம் இந்த வண்டி ஓடும்?” என்பது, “வண்டி இந்த ஸ்டேஷன்ல எவ்வளவு நேரம் நிற்கும்?” என்பது போன்ற சாதாரண FAQ போல மனதில் நிற்கிறது.

 — -
அந்த அறையில் எங்கும் சிதறிக்கிடந்த காகிதங்களிலிருந்தே மீண்டும் நகுலனிடம் திரும்பினேன்.

நகுலனின் கவிதைகள் தவிர்த்த, கதை, கட்டுரைத் தொகுப்புகளை வாங்கிப்படித்திருக்கிறேன். “இந்தச் சாவிலும் ஒரு சுகம் உண்டு” என்று இங்கிருந்து எப்படி எழுதவருகிறது என்று தோன்ற, அந்தக் கவிதையை இணையத்தில் தேடினேன். அகப்பட்டது எஸ். ராமகிருஷ்ணனின் பதிவொன்று: “நகுலனின் பத்துக்கவிதைகள்”. 

இதுவே கவிதை:

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

 — -

அந்தப் படத்தின் தனிமை மற்றும் துயர உணர்வுகளிலிருந்து விடுபட, இயல்பாகவே அவரது பிரதிகளில் தஞ்சம் புகுந்து ஒரு கட்டுரையை வாசித்தேன். 




இப்போது சில ஆண்டுகளாக ஆங்கிலக் கவிதைகளை அணுக்க வாசிப்பு (close reading) செய்யும் உத்தியைக் கற்று வருகிறேன். நகுலனின் தமிழ்க்கவிதை வாசிப்பும் அந்த close reading முறையிலேயே அமைந்துள்ளது என்பதைப் பரவசத்தோடு உணர்ந்தேன். நவீன தமிழ்க்கவிதையின் சில முன்னோர்கள் ஆங்கிலக் கவிதை வாசிப்பு வழியாகவும், ஆங்கிலத்தில் எழுதிப் பார்த்த அனுபவத்தின் வழியாகவும், தமிழில் புதிய வடிவங்களைத் தேடியது தற்செயல் அல்ல. இவ்வடிவம் தமிழில் வலுப்பெற்றதற்கு ஆங்கிலக் கவிதை வாசிப்பும் ஒரு முக்கிய வழியாக இருந்ததென்பதால் அதன் வாசிப்பு அணுகுமுறையும் அதே வழியில் இருப்பதில் வியப்பில்லை.

இதற்கு உதாரணமாக இந்தக் கட்டுரை (திரைச்சொட்டு இணைப்பில்). கவிதையில் ஒலியைக் கவனிப்பதும், ஒலி குறித்து எப்போதும் எழுதுவதும், இந்த அணுகலின் வெளிப்பாடு. ‘மழுது’, ‘மது’ என்று சீர் பிரிக்காத வெண்பாவைப் படிப்பதும் அதே அணுகுமுறைதான். இதைத் தெரிந்தே செய்தால் தமிழ்க்கவிதையின் செய்நேர்த்தி எப்படி மெருகூட்டப்படும்? “வடிவமே பொருளாக” என்ற உத்தியை இதனுடன் சேர்த்தால்? எப்படியானாலும், இப்படியான வாசிப்பு இன்னும் உவகை தருவதே. 

என் அவதானிப்பு என்னவென்றால், ஒலி என்பது கவிதையில் எவ்வாறு இயங்குகிறது என்று கவனிப்பது நவீன ஆங்கிலக் கவிதையின் வரையறுக்கும் அணுகுமுறைகளில் ஒன்று. ஆனால் நவீனத் தமிழின் ‘புதுக்கவிதை’ இதற்கு முற்றிலும் எதிரானதாக மாறிவிட்டதாகத் தோன்றுகிறது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் நீங்கள் ஒரு சிற்றிதழ் எழுத்தாளராக இருந்திருந்தால், மரபார்ந்த தாளமும் தொடையும் இன்றும் பயன்படுத்தப்படும் நாடகப் பேச்சை நீங்கள் கவனமாகத் தவிர்க்க வேண்டியிருந்தது. ஏனெனில் தீவிர இலக்கிய வட்டங்களில் அது “மேடைக் கவிதை” என்றும் மலிவானது என்றும் பார்க்கப்பட்டது.

ஆனால் நகுலன், ஒரு கவிஞராகவும் விமர்சகராகவும், இந்த மேற்கத்திய நுண்ணுணர்வுகளைப் பயன்படுத்தி, அவற்றை பிரக்ஞைபூர்வமாகத் திருத்தி அகற்றும் தமிழ்க் கவிதைகளில்கூட ஒலியின் அம்சங்களைத் தேடுகிறார்.

நகுலன் போல அதைச் (அந்த வாசிப்பை) செய்தவர்களைக் கண்டதில்லை (இதைச் சொல்லுவது என் மிகவும் சொற்பமான வாசிப்பிலிருந்தே என்பதைச் சிட்டிகை உப்பாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் தமிழ் எழுத்து மேம்பட...

"கூடியவைரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது" - தமிழ் உரைநடை பற்றி பாரதியார் பாரதியின் உரைநடையில் இருக்கும் எளிமைக்கும், நேரடியான சம்பாஷணை உத்திக்கும் ஒரு அதி வசீகரம் இருக்கத் தான் செய்கிறது. இந்த வித்தையின் எளிய இலக்கணக் குறிப்பாகவே இந்த மேற்கோள் பயன்படும் என்று நினைக்கிறேன் - மட்டுமல்லாமல், இந்த எளிய குறிப்பு தெளிவாக எழுதவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது. என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது. சின்...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந...