முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ச்சீ... இந்த ஜால்ரா புளிக்கும்!"

"யாரைக் காணொம்?..."

"...சாமியைக் காணொம்"

"சாமியைக் கண்டால்?..."

"...மோட்சம் கிட்டும்"

சின்ன வயதில் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் வரசித்தி விநாயகர் கோவிலில் ஐயப்பமார் சரணம் விளிக்கும்போது சொல்வது. ரொம்ப நாளைக் கப்புறம் தான் அது மலையாளத்தில் உள்ள விளி என்று தெரிந்தது. "ஆரைக் காணான்?" (யாரைப் பார்க்க?) என்பதை, "யாரைக் காணவில்லை?" என்று புரிந்து கொண்டதற்குக் காரணம் குட்டன் என்று அறியப்படும் கோவில் வேலையாள். கருப்பான, நெடிந்த திரேகம் - தாடியின் அடர்த்தியில் கூராகத் தெரியும் கண்கள் என்று ஒரு தீவிரத்துவம் உள்ள முகம் ஆதலால் நாங்கள் (பொடிப் பசங்க) எல்லோரும் அவனைக் கண்டு பயப்படுவோம். அவந்தான் இப்படி தப்புத் தப்பாகச் சரணம் விளிப்பவன்.

வேலையில் கடந்த அரையாண்டில் என் பங்களிப்பு பற்றிய பின்னூட்டம் கொடுத்த மேனேஜரிடம் பலமுறை பதவி உயர்வு வேண்டுவது பற்றி நினைவூட்டினேன். இப்போது கூப்பிட்டு அனுப்பியிருக்கிறார். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு போனேன்.
" உங்கள் பங்களிப்பு நம் நிறுவனத்திற்கு பெரும் உதவியாய் இருந்த்துள்ளது; ஆனால் இன்னும் அடுத்த நிலைக்கான அனுபவம் போதுமா என்று சந்தேகம்; உங்களுக்கு அது போதிய அளவில் வருவதற்காக மூன்று மாதங்கள் ஒரு புதிய காரியத்தைச் செய்ய ஒதுக்கி உள்ளேன். இதே கவனத்துடன் செய்யுங்கள் - நிறுவனத்தின் முக்கியமான பணியாளர்களில் நீங்களும் ஒருவர்" என்று அனுப்பிவிட்டார். (கருணாநிதி, "மந்திரி சபையில் இடமில்லையென்றால் என்ன? என் மனத்தில் இடம் அளித்துவிட்டேன்" என்கிற மாதிரி)

இந்தக் குட்டனை எனக்குச் சுத்தமாய் பிடிக்காமல் போனது ஒரு கோயில் பஜனையின் போது. அப்போதெல்லாம் பஜனை, காலட்சேபம், கச்சேரி என்றால் முதல் வரிசையில் ஆஜராகி, முடிந்தபின் சுண்டல் பஞ்சாமிருதம் வாங்கிச் சாப்பிட்டுத்தான் வீடு திரும்புவேன். பஜனையில் குட்டன் ஜால்ரா (சய்ன் சக், கிண்ணாரம் என்றெல்லாம் சொல்லலாம்) வாசித்து(?)க் கொண்டிருந்தான். எனக்கு அதன்மேல் ரொம்ப நாளாக ஒரு கண். வீட்டில் எனக்கு அது மாதிரி ஒன்று வாங்கிக் கொடுக்கும்படி அடம் பிடித்தேன் - செல்லுபடியாகவில்லை. அன்று என் அம்மாவிடம் அழுது சாட்டியம் பிடித்ததில், குட்டனிடம் சிபாரிசு செய்து ஜால்ரா என் கைக்கு வந்தது. சந்தோஷப் பட்டு, அதை வாங்கிக்கொண்டு, அருகில் இருக்கும் வீட்டுக்கு ஓடினேன். உட்கார்ந்து, ஆசையாய் ஒருதடவை க்ளிங் என்று தட்டினதுதான் தாமதம், முன்னால் குட்டன் வந்து நின்றான். "ஜால்ரா வேணும்னா கோவில்ல வந்து அடி, வீட்டுக்கெல்லாம் எடுத்துகிட்டு வரக்கூடாது" என்றான். நானோ வீட்டில் நான் மட்டும் அதை ஒலிப்பேன் என்றும், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாதென்றும் அழுதேன். குட்டன் என் கையிலிருந்து அதைப் பிடுங்க வந்தான்; வந்த கோபத்தில் ஜால்ராவை வாசலில் விட்டெறிந்தேன். குட்டன் நாக்கை மடக்கி என் பின்புறத்தில் ஒரு அடி கொடுத்து விட்டு, ஜால்ராவை பொறுக்கிக் கொண்டு போனான். அப்போது கறுவிக் கொண்டேன் - பெரியவன் ஆனதும் நிறைய ஜால்ராக்கள் வாங்கி வீட்டில் அடுக்குவது; குட்டனைத் திருப்பி அடிப்பது எனறு.(இரண்டும் நடக்கவில்லை)

பதவி உயர்வு இல்லையென்றாலும் புதிய வேலையில் நான் ரொம்ப முக்கியமான ஆளாக இருக்கிறாற்போல் தெரிந்தது. எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்கமுடிந்ததின் சுதந்திரமும் அதிகாரமும் ஒரு மப்பைக் கொடுத்தது. இந்தச் சமயத்தில் மேலாளர் மறுபடி கூப்பிட்டனுப்பினார், போய் நின்றேன். "நீ பொறுப்பேற்றிருக்கும் இந்தக் காரியம் முக்கியமானது; இதன் வெற்றி நிறுவனத்திற்கு இன்றியமையாதது. இந்தப் பொறுப்பை நீ தனியாக சமாளிப்பது உன் திறமையைக் காட்டுகிறது" எனறு நிறுத்தினார். நமக்கு ஒரே புளகாங்கிதம். "இருந்தாலும் இதன் கஷ்டத்தை மனத்தில் கொண்டு, ரவியையும் உன்னோடு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பது என் விருப்பம் - நீங்கள் வேலையை உங்கள் விருப்பப் படி பங்கீடு செய்து கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல் ரவிக்கும் இது ஒரு நல்ல அனுபவம் தரும் இல்லையா? உங்கள் அபிப்பிராயம் ?" என்றார். குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாய் ஆனதே என்று "சப்"பென்று போனது - கோபம் வந்தது. நான் சொன்னேன் " ஐயா, நானே உங்களிடம் சொல்லலாமென்றிருந்தேன்; சில சொந்தப் பிரச்சனைகளால் சரிவர வேலை செய்ய முடியவில்லை. இரண்டு வார விடுப்பில் போக வேண்டுமென்றிருந்தேன். நல்ல வேளையாக ரவி பற்றிச் சொன்னீர்கள். என்னால் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாது - பழைய வேலையே இப்போது செய்கிறேன். இதை ரவியே முழுவதுமாகப் பார்த்துக் கொள்ளட்டும்" என்று.

(யாரது, "அட முட்டாளே" என்று சொல்வது? தைரியமிருந்தால் என் முன்னே வாருங்கள்!)

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அப்படி எல்லாம் சொல்ல மாட்டோம். வேற ஒண்ணு தான் சொல்வோம்.

"ஆஃபீஸ்ல இதெல்லாம் சகஜமப்பா :-D"
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
KVR,

அப்படீன்றீங்க?
சரி :-)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...