முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மா ரமணன், உமா ரமணன்!

இரண்டு உன்னதமான கலைஞர்களை எப்படியோ ஒரே சமயத்தில் பெற்றிருப்பது உலகக் கிரிக்கெட்டிற்குக் கிடைத்த பேறு. இருவரும் சமீபத்தில் அவர்களின் துறைகளில் சாதனை படைத்திருக்கிறார்கள். அணுமுறையாலும், ஆடுவதின் இயல்பாலும், குணாதிசயங்களாலும் வேறுபட்ட இரண்டு தனித்துவமான ஆளுமைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறது மனது.

லாராவின் irregularity யாராலும் புரிந்துகொள்ள முடியாததாக இருந்திருக்கிறது. வீழ்ச்சியடைந்ததாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது அற்புதமான ஒரு ஆட்டத்தில் மீண்டு வருவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறார். சிறப்பாய் ஆடிய அநேக ஆட்டங்கள் இவர் அணியை வெற்றி பெற வைத்ததில்லை. இவர் ஆடிய 121 டெஸ்ட்களில் இவர் அணி 56 முறை தோற்றிருக்கிறது.

டெண்டுல்கர் ஒரு காலத்தில் குருவி தலையில் பனங்காய் போல இந்தியாவின் மொத்தச் சுமையையும் பலரின் எதிர்பார்புகளையும் தாங்கி இருந்ததில் அவர் ஆட்டம் பாதித்தது. சமீபத்திய உடலுபாதைகளால் அதிக ஓய்வு எடுக்கும்படி வந்ததும், மீண்டு வரும் முதல் ஆட்டத்திலேயே அவர் நன்றாக ஆடவேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் அவர் மனதில் இன்னும் கிலேசத்தை உண்டு செய்திருக்கும்.

"மார ஜனகன், குமார ஜனகன்..."

லாராவின் ஆட்டமுறை தனித்துவமானது. பந்து வீசப்படும் நேரத்தில் அதிகமாக குறுக்கே நகர்ந்து, மட்டை எங்கோ மேலிருந்து வந்து ("வாம்மா மின்னல்" என்கிற மாதிரி) பந்தைப் பளீரென்று அடிக்க, பந்து தடுப்பாளார்களை வெட்டிச் செல்லும். இவர் மட்டை சுழற்றும் பாங்கில் ஒரு பொறியும் துள்ளலும் இருக்கும் - க்ரீஸில் சட்டென்று குறுக்கே குதித்து இவர் வெட்டியாடுவதில் ஒரு நடன நளினமும், கம்பீரமும் ஒருசேரத் தெரியும். கை இருக்குமிடத்தே பார்வையும், பார்வை யிருக்குமிடத்தே மனதும், மனதிருக்குமிடத்தே பாவமும் என்பது போல ஒரு தாண்டவ வடிவாயெனக்குத் தோன்றும் அவர் ஆட்டம்.

பந்து வீசப்படும்போது சிறிதாக முதல் நகர்வு, அப்புறம் பந்துவீச்சின் திசை மற்றும் நீளத்திநை அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் கணித்து, அதற்கேற்ப அடுத்த நகர்வு என்று சிக்கனமான, நிதானமான அசைவுகள் ஸச்சினுடையது. நேரான மட்டையின் நடு செண்டரில் பந்து படும் அளவிற்குத் வெளித்திறந்து வரும் மட்டையடி பாணி . மட்டையைக் கவிழ்த்துத் துடுப்புப் போடுவது போல ஆடும் paddle sweep என்கிற தனித்துவமான ஷாட் உட்பட, கிரிக்கெட்டின் மொத்த மட்டையடி முறைகளும் இவரிடம் அனாயாசமாய் வெளிப்படும். நிதானமும் நேர்த்தியும், இலக்கணச் சுத்தமும் இயல்பாய் கைவரப்பெற்றவர்.

"மலைமேல் உறைபவன், பாற்கடல் அலை மேல் துயில்பவன்..."

தன் கலையிலே முற்று முழுதாக அமிழ்ந்துவிட்ட ஒரு கலைஞனின் வெளிப்பாடுகள் முற்றிலும் எதிர்பாராதவையாகவும், எதனாலும் வரையறுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாமல் இருப்பது போலவே தான் லாராவின் ஆட்டமும் எனக்குத் தோன்றுகிறது. நன்றாக அமைந்த பொழுதுகளில் பித்துப் பிடித்தது போல 100, 200,300, 400 என்று ஓட்டங்களைக் குவிக்கும் போது சாமானியர்களின் அறிவுக்கு எட்டாத உயரத்தில் தான் இருப்பதை ஒரு வெறியுடன் அவர் பறை சாற்றுவது போல இருக்கும். வேறு சில சமயங்களில் இந்த ஆளுமையைச் சந்தேகத்திற்கு இடமாகும் வகையில் அவர் ஆட்டமிழந்து விடுவதும் உண்டு. புல்லாங்குழல் மாலியின் கச்சேரிகள் பற்றி இப்படிச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் - லாராவின் சில இன்னிங்ஸ்களைப் பார்த்தால் இவ்வாறு சொல்வதை விளங்கிக் கொள்ள முடியும் போலவிருக்கிறது.

தான் செய்யும் வேலையில் மிகுந்த நேர்த்தியும், திறமையும், கடினமானவற்றையும் எளிதாக முடித்துவிடும் கைதேர்ந்த வித்தகர் ஒருவர் நமக்களிக்கும் ஆசுவாசத்தையும் தன்னம்பிக்கையையும் ஸச்சினிடம் அனுபவிக்கலாம். கிரிக்கெட் ஒரு வாழுமுறை - அதிலேயே லயித்து, அதையே சிந்திப்பதில், எல்லாக் கோணங்களில் இருந்தும் அவதானிக்கும் செஸ் அணுகுமுறை சச்சினுடையது.

பலம் பொருந்திய எதிரிகளையும் போட்டிகளையும் சம்பாதிப்பது திறமையின் ஒரு அடையாளம். ஸச்சின் மற்றும் லாராவை எதிரணியில் பெறுவதென்பது பந்துவீச்சாளர்கள் மட்டுமன்றி தடுப்புத் தரப்பில் இருக்கும் எல்லோரையும் தம்முடைய ஆட்டத்தரத்தை உயர்த்திக் கொள்ளச் செய்வதற்கு ஏதுவாகிறது!

லாராவும் டெண்டுல்கரும் ஏனோ அணித்தலைவர்களாக வெற்றியடைந்ததில்லை. லாரா தலைமையில் அவர் மட்டுமே ஆடிக்கொண்டிருந்ததும், ஸச்சின் அவர் தலைமையில் சரிவர ஆடாததும் தத்தம் அணிகளுக்கு சாதகமாக அமையவில்லை.

உலகிலேயே அதிக ரன்களும் அதிக சதங்களும் அடித்தவர்கள் என்கிற பெருமை எந்த விதத்திலும் அவர்கள் ஆளுமை குறித்த அளவுகோல்களாக முடியாது. MRF சின்னம் பொறித்த மட்டையை அடுத்துப் பெறும் தகுதியுடையவர் என்று தற்போது ஆடும் எவரையும் இந்த அளவில் வைத்துப் பார்க்க முடியவில்லை.

ஸச்சின் 50 சதங்களைக் குறிவைக்கிறாரா என்ற பேச்செல்லாம் பரவலாகத் தொடங்கியிருக்கிறது. இன்னும் 17 வயதுக் காரராக லிட்டில் மாஸ்டராகத் தான் எல்லோர் கண்ணுக்கும் தெரிகிறார். அவருக்கும் வயதாகிறது! லாராவுக்கு ஆஸ்திரேலியாவில் பிரிவுபச்சாரம் செய்தாகிவிட்டது. எல்லா நல்ல விஷயங்களும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பது எவ்வளவு வேதனையான, முகத்திலறையும் உண்மை!

நெவில் கார்டஸ் (Neville Cardus) போன்றோர் காதலுற்ற நுட்பங்களும், அருமைகளும் மறைந்து இரைச்சலும் காட்டடியுமே கிரிக்கெட்டின் எதிர்காலமாகிவிடுமோ என்கிற நிலையில் இன்னும் இவர்கள் ஆட்டத்தை எவ்வளவுகாலம் பார்க்க முடியுமோ! இவர்கள் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தோம், இவர்கள் ஆட்டத்தில் உண்மையான மேதமையின் வெளிப்பாடுகளை நேரடியாய் உணர்ந்தோம் என்பவைகளே மீளும். நமக்குப் பின் வரும் சந்ததியினரிடம் நாம் கூறி மகிழவென்று சில அற்புத விஷயங்களைச் சேமித்து வைத்திருப்பது நல்லது தானே?

கருத்துகள்

SnackDragon இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றாக இருக்கிறது உங்கள் கட்டுரை. நன்றி.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கார்த்திக்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...