முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்று தீரும் ஆடுகளச் சர்சை?

மும்பை டெஸ்ட் - இரண்டாம் நாள் - இந்தியா 104 & 5/0 (3 ஓவர்கள்) - கம்பீர் 1*, சேவாக் 4*, ஆஸ்திரேலியா 203

இன்று ஹிந்துவில் பீட்டர் ரீபெக் பத்தி(column) பார்த்தீர்களா? வான்கடே ஆடுகளம், களங்களுக்கெல்லாம் இழுக்கு என்றும், நம்மாட்கள் இத்தொடரில் ஒரு ஆட்டத்தையாவது வெல்ல வேண்டி கேவலமாக ஆடுகளம் தயாரித்திருக்கிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார். ஆடுகளம் தவிர்த்த, மைதானத்தின் எந்தப் பகுதியுமே இதைவிட மேம்பட்டது என்றும், பயிற்சிக் களமே தேவலை என்றும் தாறுமாறாக எழுதியிருக்கிறார்.

களம் அவ்வளவு மோசமா? இல்லை இது அளுகுணியா? நம்மூரில் ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் களம் பற்றிய சர்ச்சைகள் வந்தவண்ணம் இருக்கிறதே! பாகிஸ்தான், இலங்கைக் களங்கள் பற்றி "ஸ்லோ விக்கட்" என்ற விமரிசனத்தை மீறி வேறொன்றும் வருவதில்லையே. நம்மாட்கள் விழுந்து புரண்டு அரை நாளில் பத்து விக்கட் எடுத்தாலும், இம்மாதிரி யாராவது குறை சொல்லி அழுகிறார்கள்.

பேசாமல், இனிமேல் நியூட்ரல் இடங்களில் தான் டெஸ்ட் பந்தயங்கள் வைப்பது என்று சொல்லலாம் - ஆனால் இது சரிப்பட்டு வராது; நம்மாட்கள் ஆடுவதை நம் மண்ணில் பார்க்காமல் என்ன கிரிக்கெட் வேண்டியிருக்கு? வேறொன்று நடைமுறைச் சாத்தியம் என்று நினைக்கிறேன் - ICC ஆடுகளம் அமைப்பதற்கான சில விதிமுறைகள்/கோட்பாடுகள் வகுத்தால், எல்லா ஊரிலும் அடிப்படையான சில வரைமுறைகளுக்குட்பட்டு, (அதற்குமேல் நாம் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்) ஆடுகளங்கள் தயாரிக்கலாம்.

இதற்கு மேல் களங்களைப் பற்றி யாரும் எதுவும் சொல்லத் தேவையில்லை. இந்த மாதிரி நம்மாட்கள் அபூர்வமாய் நன்றாய்ச் செய்தால் நிம்மதியாய் சந்தோஷப்படலாம்.

கருத்துகள்

rajkumar இவ்வாறு கூறியுள்ளார்…
இந்டியாவில் மட்டும் பிட்ச் தயாரிப்பதை குறை கூறுவதே இவர்களது வழக்கமாய் இருக்கிறது.

உலகக் கோப்பைக்கு முன் நியுஸிலாந்தில் நடந்த டெஸ்ட் மேட்சிற்க்கு போட்ட பிட்சுகளைப் பற்றி ரோபோக் குறையேதும் சொன்னாரா?

இதைத் தவிர சவுத் ஆப்ரிக்காவில் கிங்ஸ்மெட்டில் இரண்டு ஆள் உயரத்திற்கு பந்து எழும்புவதைப் போல் பிட்ச் அமைத்தார்கள்.

இவையெல்லாம் கண்டிக்கப்ப்ட மாட்டாது. இந்தியாவில் பந்து திரும்பினால் கோபம் வரும்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
உள்ளது, ராஜ்குமார்...
Badri Seshadri இவ்வாறு கூறியுள்ளார்…
மும்பை ஆடுகளம் மோசமானதுதான். சும்மா பந்தைத் தூக்கிப்போடும் கிளார்க் எல்லாம் கொத்து கொத்தாக விக்கெட் எடுத்தார் அல்லவா? ஆனால் அவ்வப்போது ஒருசில ஆட்டங்கள் மோசமான ஆடுகளத்தில் நடப்பதில் தவறொன்றுமில்லை. இந்தியா நியூசிலாந்தில் போய் மூன்று நாள்களுக்கு ஒரு டெஸ்ட் என்று இரண்டு டெஸ்ட்களில் உதை வாங்கிக்கொண்டு வந்ததில்லையா? அவையும் கூட மோசமான ஆடுகளங்கள்தான்.

கர்ட்லி ஆம்புரோசும், கோர்ட்னி வால்ஷும் உச்சத்தில் இருந்த நேரம் மேற்கிந்தியத் தீவுகளில் அமைக்கப்பட்ட சில ஆடுகளங்களும் (முக்கியமாக ஜமாய்க்கா) படு மோசமானவை. ஒருமுறை ஆட்டம் தொடங்கி முதல் பந்து நடுக்களத்தில் விழுந்து விக்கெட் கீப்பர் தலைக்கு மேலாகப் பறந்து எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்றது. நாலைந்து ஓவர்களுக்குப் பிறகு அந்த டெஸ்ட் ஆட்டத்தை ரத்து செய்துவிட்டனர். அது மோசமான ஆடுகளம்தான்.

மும்பை போல தொடர்ச்சியாக ஆடுகளங்களை அமைப்பது நல்லதில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...