முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்பின் வழியது உயிர்நிலை

Photo by Magesh Babu (used with consent - https://flickr.com/mageshb)

இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் சிலர் ஆய்வாளர்களாக மாறியது நாமறிந்ததே. தியடோர் பாஸ்கரன் இந்திய அஞ்சல் பணியில் இருந்தபோதே திரைப்படங்களில் ஆர்வம் கொண்டு, தமிழ்த் திரைப்பட வரலாற்றை ஆய்வு செய்து முக்கியமான நூல்களை எழுதியவர்.

அதேபோல மதுரையில் தமிழிலக்கியம் பயின்ற (சங்க இலக்கிய + தொல்பொருள் ஆய்வு — கலம் செய் கோவே — இவர் ஆராய்ச்சி மிகவும் ஆர்வமளிக்கக்கூடியது) பாலகிருஷ்ணன் மதுரையிலிருந்து டில்லி கிளம்பும்போது திருவாசகமோ எதுவோ ஒரு தமிழ்ப்புத்தகத்தை மட்டுமே தமிழ் நினைவாக எடுத்துச் சென்றதாகவும், பின்னாளில் சிந்து சமவெளி மற்றும் தமிழ்ச் சங்க இலக்கியம் குறித்த ஆய்வுக்கு அதுவே தமிழார்வத்தூண்டுதலாக அமைந்தது என்பதாகவும் சொல்லியிருந்தார்.

கொஞ்சம் சிரமப்பட்டு இ ஆ ப தேறியிருந்தால் நாமும் இந்தமாதிரி ஏதேனும் செய்திருக்கலாம் என்ற எண்ணம் வந்தது (“அவர்கள் அவ்வளவு பிழைப்புக்கெட்டு இருந்தார்களா?”)

இதையெல்லாம் இப்போது சொல்லக் காரணம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மொழிபெயர்ப்பு இலக்கியம் அம்மொழிகளுக்கு, குறிப்பாக அவற்றின் தற்காலப் பயன்பாட்டிற்கு, என்ன வளம் சேர்த்துள்ளது என்பது குறித்து ஓர் ஆய்வை முன்னெடுக்கவேண்டும் என்ற உந்துதல்தான்.

வயதாக ஆக அறிவு முதிர்ச்சி ஏற்படுகிறதோ இல்லையோ, அனுபவப் பாடங்கள் நம்மை ஒருமாதிரிக் கனியச் செய்கின்றன. முன்னாட்களில் எதிலும் சிறக்க என்றிருந்த எத்தனங்கள் இப்போது சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றுகின்றன.

எல்லா உயிரினங்களின் பாலும் அன்பும் கனிவும் காட்டுவதே அறிவு வளர்ச்சியின் முடி என்று புரியத்தொடங்குகிறது. ஒரே நேரத்தில் எளிதானதாகவும், முற்றிலும் இயலாததாகவும் இருக்கும் புதிரான இலக்கு அது.

இருந்தும் சொறிந்து கொள்ள அரிப்புகள் இன்னும் இருக்கின்றன. இத்தனை ஆர்வத்தோடு எதையும் கற்க முயன்றதில்லை — தமிழ் / மலையாளம் சார்ந்த மொழியியல் ஆர்வத்தையும், சூழலியல் கல்வியையும் சொல்கிறேன்.

ஒழுங்கு என்பதன் முக்கியத்துவம் காலம் கடந்து புரிகிறது.

---

(எல்லாவுயிரிடத்தும்) அன்பாயிருப்பதே அறிவு முதிர்ச்சியின் உச்சம் என்ற கருத்துடன் ஒன்றுகிறேன். மலையாள அறிஞர் எம் என் விஜயன் சொல்லுவார்: எல்லோரிடமும் இவ்வுலகுக்கு அளிக்கவென்று ஏதோ இருக்கிறது; அப்படிக் கொடுப்பதில்தான் வாழ்க்கை முற்றுப்பெறுகிறது. இதை இங்கு குறிப்பிடுவதன் நோக்கம், அறிவுசார்ந்த ஏற்றத்தாழ்வு இன்றைய அறிவுச்சூழலில் மலிந்திருக்கிறது என்று சொல்லவே. ‘தேடிச்சோறு தினந்தின்று…வேடிக்கை மனிதர்’ வாழ்க்கையை மீற வேண்டும் என்றிருப்பது நல்ல நோக்கமே. அப்படித் ‘தன் விழிப்புணர்வு’ இருப்பதே நம்மை ‘வேடிக்கை மனிதரி’னின்றும் வேறுபடுத்திவிடும்.

ஆனால், எளிய உள்ளம் படைத்தவர்களை ஏளனம் செய்வதற்காக பாரதி ‘தேடிச்சோறு’ எழுதவில்லை. தன்னுடைய விழிப்புணர்வை அப்பாடலின் வழியாக வெளிப்படுத்தினான் அவ்வளவே.

அறிவுமுதிர்ச்சியின் அறிகுறியும் அன்பே. எல்லோரையும் கட்டித்தழுவி முத்தம் கொடுக்கவேணுமென்பதில்லை. தன்னைவிட எளிதாய்ச் சிந்தித்துச் செயல்படும் மனிதனிடம் நாம் காட்டக்கூடிய அன்பு என்ன? குறைந்தபட்சம் அவனிடம் நம் அறிவுமேட்டிமையைக் காட்டாமல் இருப்பது; (அப்படிக்காட்டினாலும் அவன் அதனால் பாதிப்படைவதில்லை) அவனிடமும் உலகிற்குக் கொடுக்கவென்று ஏதோ இருக்கிறது என்று நினைவில் கொள்வது.

விஜயனின் பேச்சுக்கள் என்னை ஈர்ப்பதற்கு இந்தத் தன்னடக்கம் தரும், அன்பால் மட்டுமே வரும் அறிவுச்செம்மையே காரணம். யாரையும் புண்படுத்தாமல் பேசவும் புறவுலகில் இயங்கவும் ஒரு உண்மையான அறிவாளியால்தான் முடியும். இங்கே அன்பு உணர்ச்சியாக வெளிப்படுவதில்லை (தழுவல், முத்தம், கண்ணீர், இதர…) — அறிவினுள் ஒளிர்கிறது.

அறிவாளியாய் இருப்பதென்பது எல்லாம் தெரிந்திருப்பதல்ல. எல்லாம் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை என்று ஒவ்வொரு கணமும் உணர்ந்திருப்பதே.

நான் முன்னெப்பொழுதோ சொன்னது போல, அறிவுத்தேடலில் மீதமிருக்கும் வாழ்க்கையைச் செலவழிப்பதைவிட எப்போதும் எல்லாவுயிரிடத்தும் அன்போடிருந்து பழகவே விழைகிறேன். அறிவுச்சத்திற்கான குறுக்குவழி இதுவே. ஆனால், அது எளிமையான வழியல்ல!

வட மொழியின் கருணை, தயை, காருண்யம் என்று பல சொற்களாலும் விளக்கமுடியாத ‘kindness’ அன்பு என்ற தமிழ்ச்சொல்லில் கட்டுண்டுவிடுகிறது.

‘அன்புடைமை’ இப்போது புதுப் பொலிவில் துலங்குகிறது!

இலக்கியத்தை உண்மையில் ஊன்றிப்படித்தவன் அன்பு நிறைந்தவனாகவே இருப்பான். ஏனெனில், இலக்கியம் படிப்பதன் பயன் மனது செம்மையாதலும், சிந்தனை விசாலமாதலும் என்பது பொது அறிவு. அப்படி இல்லாவிடில் அவன் படித்ததினால் எந்தப் பயனையும் அடையவில்லை என்றுதானே கொள்ளவேண்டும்?

---

மற்ற உயிரினங்களைப் போலவே, உயிரினம் என்ற அளவில் எதையும் கொடுக்க வேண்டிய அவசியம் மனிதர்களுக்கும் இல்லை. பண்பும், கலாச்சாரமும், கல்வியும், ஒழுங்கும், மனிதர்களுக்கு சமூகத்தில் அவர்களுக்கான இடத்தை நிலைநாட்டுவதுடன், ஓரிடத்திலிருந்து மேலோரிடத்திற்குச் செல்லும் விழைவை அளிக்கின்றன.

இதிலே பெரும்பான்மைச் சமூகம் எதைக் கொண்டாடுகிறதோ, அதற்கே மிகுந்த செல்வாக்கு இருக்கிறது.

இயற்கையாக இன்னொருவன் தன் உணவுக்கும் துய்ப்பிற்கும் போட்டியாக வருபவன் என்ற கற்காலத்தினும் தொன்மையான நினைவிற்கு, எதிர் துருவமாக இருப்பது அன்பெனும் உணர்ச்சி. இது அறிவுமுதிர்ச்சியால் வருவது — இதை நான் சொல்லவில்லை. Illinois மாநிலத்தின் ஆளுநர் JB Pritzker Northwestern பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் இதைச் சொல்கிறார்

அதற்கடுத்த அறிவுமுதிர்ச்சி, சமூகச் செல்வாக்கு மிக்க வளத்தையும் அறிவையும் எப்படியேனும் அடைய வேண்டும், அப்படி அடைந்தவர்களையே ‘உயர்ந்தவர்கள்’ என்று வரிந்துகொள்ள வேண்டும் என்ற நவீன மிருக மூளையையும் வென்று, அன்பை முதன்மைப்படுத்துவதில் இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

நெறிப்படுத்தும் நட்பே,

என்னோடு நட்புப் பாராட்டுமுன் தெரிந்து கொள் - அல்ப்பத்தனம், பொறாமை, முன்கோபம், வெளி வேஷம் எல்லாங்கலந்த கலவை நான். என்னை ஒருநேரம் கடையில் நீ வாங்க நேர்ந்தால், இவைகளுக்கும் விலைகொடுத்து வாங்க வேண்டும் - தனியாய்க் கிடைக்கமாட்டேன். நான் சின்ன அறிவும் பெரிய ஆசையும் படைத்த, பல தவறுகளை இழைக்கிற, அவற்றை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கிற சாதாரணன். உந்தன் நட்புப் போர்வைக்குள் நான் வந்த பிறகு என்னுடன் வந்த என் சிறுமைகளை என் முகத்தில் எறிந்து காயப்படுத்தாதே. என் சிறுமைகள் அறிந்தும் நீ நட்பாய் இருப்பதிலேயே அச்சிறுமைகளைக் களையும் ஆசையும் உறுதியும் எனக்கு வாய்க்கிறது. எல்லாச் சிறுமைகளும் போக எனக்குள் எஞ்சி நிற்கும் மனிதத்தை நீ கண்டுகொண்டதன் அத்தாட்சி உன் நட்பு - இதுவே அச்சிறுமைகளைக் களைந்து அங்கே மனிதத்தை நிரப்புவதற்கான எனது பெரிய நம்பிக்கை. நான் இங்கே வருமுன்னரே மனத்தில் பலப்பல குப்பைகளை நிரப்பி வைத்திருக்கிறேன். இவைகளை ஒருநாளில் களைய முடியாது. மனத்துக்கண் நான் மாசிலன் ஆக ரொம்பக்காலம் பிடிக்கும். ஆனால் அதுவரை நீ என்மேல் நம்பிக்கையுடன் இரு, நெறிப்படுத்தும் நட்பே!

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...