முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதையும் உடுக்காமல்/ பகல் வெளிச்சத்தை ஊடுருவி/அவள் இறங்குகிறாள்

சித்திரக்கலை குறித்த முறையான அறிமுகம் எனக்கில்லை. சில ஓவியங்களைப் புரிந்துகொள்ள அவற்றைப் பற்றிய கவிதைகள் எனக்கு நுழைவாயிலாக அமைந்திருக்கின்றன. மேற்கத்திய (சித்திரக்) கலையில், கருத்தியல் ரீதியாகப் பல பாய்சல்கள் நிகழ்ந்துள்ளன என்று புரிந்துகொண்டேன். மற்ற கலைவடிவங்களிலும், குறிப்பாகக் கவிதையில், இவற்றுக்கு இணையான மொழி மற்றும் வடிவப் பாய்ச்சல்கள் நிகழ்ந்ததாக என் சொற்ப வாசிப்பின் மூலம் தெரிந்துகொண்டேன். ஆரம்ப காலத்து இமேஜிஸ்டு கவிதைகள் சிலவற்றைப் படித்தபோது பிரமிப்பாக இருந்தது. அதிலும் எஸ்ரா பவுண்டின் In a Station of the Metro இரண்டே வரிகளில் ஒரு அசையும் காணொளியையே காட்டுவது மொழியின் இத்தகைய பாய்ச்சலுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

இன்னும் சில பிரபலமான ஓவியங்களை ஒட்டி (அவற்றைப் பற்றி) எழுதப்பட்ட கவிதைகளையும் படித்தேன். காரவஜியோவின் The Calling of Saint Matthew என்ற ஓவியத்தை James Lasdun எழுதிய The Calling of the Apostle Matthew கவிதை மூலம் தெரிந்துகொண்டேன். கவிதையின் பொருள் மாத்தியூவின் ஆன்மிகப் பயணத்தைப் பற்றியதாக இருந்தாலும், அது தொடங்குவது இந்த ஓவியத்தில் உறைந்திருக்கும் ‘ஆட்கொள்ளுதல்’ என்ற தருணத்திலிருந்து. இயேசு மாத்தியூவைக் கைநீட்டி அழைக்கும் அந்தத் தருணமும், இருண்ட அறைக்குள் வெள்ளமென ஒளி பாய்வதை வர்ணத்தில் காட்டியிருக்கும் விதமும், ஓவியத்தின் வித்தையை எனக்குப் புரியவைத்தன.

By Gleb Simonov - Own work, CC0, https://commons.wikimedia.org/w/index.php?curid=166007596

இதேபோல நான் எதேச்சையாகப் படிக்க நேர்ந்த இன்னொன்று Lisel Mueller எழுதிய Monet Refuses the Operation என்ற கவிதை. Monet யின் திட்டுத்திட்டாக வர்ணம் பூசப்பட்ட ஓவியங்களின் மாயாஜாலம் அவரின் கண் கோளாறு காரணமாகவே நிகழ்ந்தது என்று (பகடியாக) நிறுவி, அதனால் தனக்கு கண்புரை அறுவைசிகிச்சை வேண்டாமென்று அவர் மருத்துவரிடம் கேட்பது போல் கவிதையை உருவாக்கியிருந்தாலும், Monet யின் ஓவியங்களை அந்தக் கவிஞர் எவ்வளவு ஆழமாக இரசித்திருக்கிறார் என்பதும் கவிதையில் வெளிப்படுகிறது. இதனால் Impressionist ஓவியங்களை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தது. அதிலும் இந்த வரிகள்:

…The world
is flux, and light becomes what it touches

ஒளி ஒரு பொருளின்மீது விழுந்து அதை வெறுமனே வெளிப்படுத்துவதில்லை; தான் தொடும் பொருளையே வேறொன்றாக மாற்றுகிறது என்பதையும், Monet யின் ஓவியங்களில் அது வர்ணங்களால் நிகழ்வதையும் இந்த வரிகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. (ஆகா, எப்போதும் பயன்படுத்தும் தொடராக இருந்தாலும் இந்தப் பதிவோடு தொடர்புடைய கேள்வி வேடிக்கையாய் மனதுக்கு வருகிறது: வரிகள் படம் பிடிக்குமா?!)

By Claude Monet - art database, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=23750619
இவ்வாறான கவிதைகள் எனக்கு சித்திரத்தையும், அந்த உத்திகளையும் ‘விளக்குகின்றன’. இன்னும் பல கவிதைகளை சொல்லமுடியும் என்றாலும், இந்தப் பதிவுக்கு முன்னுரையாகவே இதை ஆரம்பித்தேன் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

ஓவியம் போன்ற பிற கலைப்படைப்புகளோடு உரையாடும் இத்தகைய கவிதைகள் ekphrastic poems என்று அழைக்கப்படுகின்றன. கீழே இருப்பது மார்சல் துசாம்பின் Nude Descending a Staircase என்ற முன்கியூபிஸ சித்திரத்தை ஒட்டி (பகடியாக?) XJ Kennedy எழுதிய ஆங்கிலக் கவிதையின் என் தமிழ் மொழிபெயர்ப்பு.

இதற்குத்தான் இந்த நீள அறிமுகப் பீடிகை.

அடிகீழ் அடிவைத்து
பொன்னிற எலுமிச்சையாய்
பனியாய்ப் பொழியும் சதையாய்
கேசாதி பாதமாக
உள்ளும் புறமும்
எதையும் உடுக்காமல்
பகல் வெளிச்சத்தை ஊடுருவி
அவள் இறங்குகிறாள்.

சதா ஒன்றின்மேல் ஒன்றுரசும் தொடைகளை
படிக்கட்டுக் கைப்பிடியின் ஊடாக நாம் பார்க்கலாம்;
அவள் இதழ்கள் சற்றே பிளர்ந்து
அவளின் அங்கங்கள் கடந்துசெல்ல ஏதுவாக
சுழலும் காற்று மெல்லப் பிரிந்து கொடுப்பதை
அச்செடுக்கின்றன.

ஒற்றைப் பெண் அருவியாக
அவளின் நிதானமான இறங்குதலை
ஒரு பின்னங்கி போல அணிந்து பின்
கடைசிப் படியில் தயங்கி நின்று
தன் நடமாட்டங்களை ஓருருவாய்த்
திரட்டிக்கொள்கிறாள்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

நெறிப்படுத்தும் நட்பே,

என்னோடு நட்புப் பாராட்டுமுன் தெரிந்து கொள் - அல்ப்பத்தனம், பொறாமை, முன்கோபம், வெளி வேஷம் எல்லாங்கலந்த கலவை நான். என்னை ஒருநேரம் கடையில் நீ வாங்க நேர்ந்தால், இவைகளுக்கும் விலைகொடுத்து வாங்க வேண்டும் - தனியாய்க் கிடைக்கமாட்டேன். நான் சின்ன அறிவும் பெரிய ஆசையும் படைத்த, பல தவறுகளை இழைக்கிற, அவற்றை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கிற சாதாரணன். உந்தன் நட்புப் போர்வைக்குள் நான் வந்த பிறகு என்னுடன் வந்த என் சிறுமைகளை என் முகத்தில் எறிந்து காயப்படுத்தாதே. என் சிறுமைகள் அறிந்தும் நீ நட்பாய் இருப்பதிலேயே அச்சிறுமைகளைக் களையும் ஆசையும் உறுதியும் எனக்கு வாய்க்கிறது. எல்லாச் சிறுமைகளும் போக எனக்குள் எஞ்சி நிற்கும் மனிதத்தை நீ கண்டுகொண்டதன் அத்தாட்சி உன் நட்பு - இதுவே அச்சிறுமைகளைக் களைந்து அங்கே மனிதத்தை நிரப்புவதற்கான எனது பெரிய நம்பிக்கை. நான் இங்கே வருமுன்னரே மனத்தில் பலப்பல குப்பைகளை நிரப்பி வைத்திருக்கிறேன். இவைகளை ஒருநாளில் களைய முடியாது. மனத்துக்கண் நான் மாசிலன் ஆக ரொம்பக்காலம் பிடிக்கும். ஆனால் அதுவரை நீ என்மேல் நம்பிக்கையுடன் இரு, நெறிப்படுத்தும் நட்பே!

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...