முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோபச் சுழற்சி

மனத்திற்கு ஒப்புதலில்லாத நிகழ்வு ஒன்று கண்முன்னே நடக்கிறது. இந்நிகழ்வுகளை வருமுன் காக்க முடியாது - வாழ்க்கையும் அதன் நிகழ்வுகளும் எதிர்பாராத பல தருணங்களின் சேர்க்கை தானே. இந்நிகழ்வு மனத்திற்குச் சோர்வு தருவதுடன் தன் வயமின்றி நடக்கும் இவைகளைக் கட்டுப்படுத்த முடியாதது குறித்த ஒரு இயலாமை குடி கொள்கிறது.

இயலாமை கோபமாக வெளிப்படுகிறது. கோபம் அறிவுக்கு ஒரு கும்மாங்குத்து வைத்து, அதை மயக்கமடையச் செய்கிறது. தாற்காலிகமாய் மனத்தை அறிவு பிரிகிறது.

இந்நிலையில் கோபத்தின் பிடியில் மனத்திற்குப் பித்துப் பிடிக்கிறது. உள்மனத்தின் எல்லாச் சிறுமைகளையும் மீட்டு அது மனத்திரையில் காட்டுகிறது. அறிவின்றி ஏதேதோ அர்த்தமற்ற சூளுரைகளைச் செய்து, மீண்டும் இந்நிலைக்கு ஆளாவதில்லை என்று உறுதி கொள்வது போல் நடிக்கிறது. சிறுமைகள் எண்ணத்தில் வலம் வந்த பிறகு, அதன் காரணமாக எழும் சுய பரிதாபத்தில் மனம் அமிழ்கிறது. எல்லாத் தவறுகளையும் சாட்டின்றி ஒப்புக்கொள்வதுடன் 'இந்தச் சிறுமைகளின் வடிவமே நான்' என்று இறுமாப்புக் கொண்டு உறுதியடைவது போலவும் பாசாங்கு செய்கிறது. இப்படியான ஆட்டத்தில் மனச் சோர்வு உடற்சோர்வையும் உண்டாக்குகிறது.

அறிவு மெல்ல மயக்கம் தெளிந்து மனத்திடம் மீள்கிறது. மனது அமைதி கொண்டு நடந்ததை நிதானமாக எண்ணிப்பார்த்து, அதற்கு ஒரு வலைப் பதிவு வடிவம் தருகிறது. கை தட்டச்சி முடிக்கிறது.

மீண்டும் ஒரு/பல கட்டுப்படுத்த முடியாத நிகழ்வுக்காய்/நிகழ்வுகளுக்காய் காத்திருந்து தொடர்கிறது இருப்பு.

கருத்துகள்

NambikkaiRAMA இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பதிவு! தொடருங்கள்!.
நானும் இப்போது என்பகுதியில் சுயமுன்னேற்ற தொடர் ஒன்று எழுத ஆரம்பித்துள்ளேன்.
இளங்கோ-டிசே இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன், இந்தப்பதிவை வாசித்தளவில் உங்கள் மனதுக்கு கனமான விடயம் ஒன்று நிகழ்ந்திருக்கின்றது என்பது புரிகிறது.
//மனது அமைதி கொண்டு நடந்ததை நிதானமாக எண்ணிப்பார்த்து, அதற்கு ஒரு வலைப் பதிவு வடிவம் தருகிறது.//
நீங்கள் அதிலிருந்து மீண்டு சற்று இயல்புக்கு வந்திருப்பதை வாசிக்கையில் நிம்மதி படர்கிறது.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி positiveRama.
// நானும்... //
(இது சுயமுன்னேற்றக் குறிப்பெல்லாம் இல்லை - ஒரு சுய புலம்பல் தான்)

//இப்போது என்பகுதியில் சுயமுன்னேற்ற தொடர் ஒன்று எழுத ஆரம்பித்துள்ளேன். //
நல்லது. படிக்கிறேன்.

டிசே, கனமானதொன்றும் இல்லையானாலும் பாதிப்பில் கனக்குறைவில்லை. உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றி.
இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
குரங்கே கோபமா?

:-) உங்களச் சொல்லலே :-)
Suresh இவ்வாறு கூறியுள்ளார்…
மன ஓட்டத்தை ஆழ்ந்து உற்று நோக்கி அதை இப்படி எழுத்தாக்குவது அவ்வளவு எளிதான ஒன்றல்ல...அது உங்களுக்கு நன்றாக சாத்தியமாக இருக்கிறது. என் குரு பாலகுமாரனின் நடையை உங்கள் எழுத்துக்களில் காண்கிறேன்.

வாழ்த்துக்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

நெறிப்படுத்தும் நட்பே,

என்னோடு நட்புப் பாராட்டுமுன் தெரிந்து கொள் - அல்ப்பத்தனம், பொறாமை, முன்கோபம், வெளி வேஷம் எல்லாங்கலந்த கலவை நான். என்னை ஒருநேரம் கடையில் நீ வாங்க நேர்ந்தால், இவைகளுக்கும் விலைகொடுத்து வாங்க வேண்டும் - தனியாய்க் கிடைக்கமாட்டேன். நான் சின்ன அறிவும் பெரிய ஆசையும் படைத்த, பல தவறுகளை இழைக்கிற, அவற்றை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கிற சாதாரணன். உந்தன் நட்புப் போர்வைக்குள் நான் வந்த பிறகு என்னுடன் வந்த என் சிறுமைகளை என் முகத்தில் எறிந்து காயப்படுத்தாதே. என் சிறுமைகள் அறிந்தும் நீ நட்பாய் இருப்பதிலேயே அச்சிறுமைகளைக் களையும் ஆசையும் உறுதியும் எனக்கு வாய்க்கிறது. எல்லாச் சிறுமைகளும் போக எனக்குள் எஞ்சி நிற்கும் மனிதத்தை நீ கண்டுகொண்டதன் அத்தாட்சி உன் நட்பு - இதுவே அச்சிறுமைகளைக் களைந்து அங்கே மனிதத்தை நிரப்புவதற்கான எனது பெரிய நம்பிக்கை. நான் இங்கே வருமுன்னரே மனத்தில் பலப்பல குப்பைகளை நிரப்பி வைத்திருக்கிறேன். இவைகளை ஒருநாளில் களைய முடியாது. மனத்துக்கண் நான் மாசிலன் ஆக ரொம்பக்காலம் பிடிக்கும். ஆனால் அதுவரை நீ என்மேல் நம்பிக்கையுடன் இரு, நெறிப்படுத்தும் நட்பே!

என் தமிழ் எழுத்து மேம்பட...

"கூடியவைரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது" - தமிழ் உரைநடை பற்றி பாரதியார் பாரதியின் உரைநடையில் இருக்கும் எளிமைக்கும், நேரடியான சம்பாஷணை உத்திக்கும் ஒரு அதி வசீகரம் இருக்கத் தான் செய்கிறது. இந்த வித்தையின் எளிய இலக்கணக் குறிப்பாகவே இந்த மேற்கோள் பயன்படும் என்று நினைக்கிறேன் - மட்டுமல்லாமல், இந்த எளிய குறிப்பு தெளிவாக எழுதவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது. என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது. சின்...