முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோபாலி...

தமிழ் எழுத்தாளர்களில், இசையை அறிந்து, அதை எழுத்தோடு கலந்து (சில சமயம் நாம் ரசிப்பது இசையா தமிழா என்று இனம் கண்டுபிடிக்க முடியாமல் போவது உண்டு), அல்லது இசையைக் கதைக் களனாகக் கொண்டு, அல்லது சொல்வது எதுவானாலும், இசை சம்பந்தமான ஒரு காட்சியை இணைப்பது என்று செய்பவர் பலர். நான் படித்ததில் கல்கி, தி.ஜா போன்றோர் இதை மிகவும் அனுபவித்துச் செய்வதாக எனக்குத் தோன்றுவதுண்டு.

இந்த அனுபவத்தைக் கொடுப்பவர்களில் தி.ஜானகிராமனைத் தான் நான் முதன்மையாகக் குறிப்பிடுவேன். அவரின் சில வரிகளைக் கூர்ந்து படித்தால் ஒரு தம்புரா ஒலியின் ரம்மியம் நம்மைச் சூழ்வது போல் இருக்கும். அவர் வருணிக்கும் தஞ்சை, கும்பகோணமும், காவிரியும், சங்கீத மணமும், கதைமாந்தரும் (அந்த வசீகரமான, வலிமையான பெண் கதாபாத்திரங்களும்) என்னை வேறு உலகிற்கு இட்டுச் செல்லும். அந்த மாதிரியான அனுபவம் ஒன்று எனக்கு மரப்பசு படிக்கும்போது ஏற்பட்டது. பாம்பின் கால் பாம்பறியும் என்பப்போல, தி. ஜா என்ற கலைஞன் கோபாலி என்ற கலைஞனின் உள்ளத்து உணர்ச்சிகளை உணர்ந்து, அந்தப் பாத்திரமேற்று, உள்திறந்து காட்டுவபோல் எனக்குப் பட்டது. "ஆகா", என்று தன்னை மறந்து ஒரு வார்த்தை வாயில் வருகிறது. Without further ado, the passages from மரப்பசு.

கோபாலி பற்றி அம்மணி சொல்வது...
"...தள்ளி உட்கார்ந்து நிமிர்ந்து பார்த்தேன். அந்த அசட்டு அணைப்பு அணைத்த உடம்பும் கண்ணும் இல்லை. மேடை மேடையாகத்தெரிந்தது. கண்முன் இருப்பவர்களை அழித்துவிட்டு அது பாடுகிற லயிப்பு, சிம்மம் மாதிரி சபையை ஆள்கிற தோரணை - சபையைப் பார்க்காமல், தன் உள்ளே பார்த்துக் கொண்டு, சபையை ஆட்டி வைக்கிற தன்னறியாமை. ஒரு தடவை கச்சேரியில் பின்னால் யாரோ பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு, இரண்டு மூன்று தடவை திரும்பிப் பார்த்தது அது - சுட்டெரிக்கிற ரௌத்ரம் கண்ணில். சற்று அடங்கிய குசுகுசுப்பு மீண்டும் பேச்சாக உயர்ந்ததும், திரும்பி "நான் இன்னிக்குப் பாடட்டுமா, வாண்டாமா?"என்று ஒரு கேள்வியாக வெடித்து, பாதிப்பாட்டை அவசர அவசரமாகப் பாடி முடித்து, "பவமான"என்று மங்களம் பாடி முடித்துவிட்டது. கச்சேரி தொடங்கி அரைமணி கூட ஆகவில்லை.கண்டுவைப் பார்த்து அஞ்சலியுடன் "பெரியவா பொறுத்துக்கணும் பின்னாலெ ரொம்பப் பெரிய வாயா ஆயிடுத்து, முடிச்சுட்டேன். எனக்கும் வருத்தம் தான்"என்று மன்னிப்புக் கோரிவிட்டு, மறுநாள் காலையில் அதே பக்க வாத்யத்துடன் கண்டுவின் வீட்டுக் கூடத்தில் பூஜை அலமாரிக்கு முன் உட்கார்ந்து பாடத் தொடங்கி, உச்சிவேளை வரையில் பாடி தன்னையே கரைத்துக் கொண்டுவிட்டது..."

இனி கோபாலியே இதுபற்றிச் சொல்வது...
"...நன்னா ஞாபகமிருக்கு எனக்கு. யாரோ பின்னாலெ பேசிண்டிருந்தான்னு கோபம் வந்ததுன்னா கச்சேரியை முடிக்கலாமோ? மகா அபச்சாரம்.ராத்திரி ஒரு மணியாச்சு, ரண்டு மணியாச்சு தூக்கம் வல்லெ. பகவானுக்காகப் பாடறபோது இது என்ன அகம்பாவம்?யார் கேட்டா என்ன, கேக்காட்டா என்ன? ராத்திரி ரண்டு மணி இருக்கும் எழுந்துண்டு கண்டுவாத்திலே போய்க் கதவை இடிச்சேன். எழுந்து ஜன்னல் வழியா 'யாரு'ன்னார். நான் தான்னேன். பரபரன்னு வந்து கதவைத் திறந்தார். கால்லெ விழுந்து நமஸ்காரம் பண்ணினேன். காலமே கச்சேரி பண்ணப் போறேன் பெரியவா அனுமதி கொடுக்கணும்னு நின்னேன். இதுக்காகவான்னு உபசாரமா ஏதோ சொல்ல ஆரமிச்சார். சரி தூக்கத்தைக் கெடுத்துட்டேன், நாளை பேசிக்கலாம்னு வந்துட்டேன். மறுநாள் விடியகாலமே குளிச்சு என்னை ஒழிடா கிருஷ்ணான்னு வேண்டிண்டு வந்து பாட உட்கார்ந்துண்டேன். அன்னிக்கு தேவகாந்தாரி பாடி மோகனம் பாடி - எவன் பாட முடியும்? நான் பாடலெ, அதுக்குச் சொல்றேன்.ராகங்கள்ளாம் அதுகளாப் பாடிண்டுது. என்னைப் போட்டு மிதிச்சுண்டு அதுகளாப் பாடிண்டுது. இல்லாட்டா எந்தப் பய அப்படிப் பாட முடியும்? இவன்தான் பாட முடியுமா? கூடம், ரேழி, கொல்லைக்கட்டு, சமையல்கட்டு, முத்தம் - எல்லாம் தலையாத் தெரிஞ்சுது.கண்ணைக் கண்ணை மூடிக்க வேண்டியிருந்தது ...மத்தியானம் ஒரு மணி ஆச்சு களைப்பு சளைப்பு இல்லே - "ஆஹா ஆஹான்னு கூடம் முழுவதும் பித்துப் பிடிச்சு அரடித்து. அன்னிக்கு அந்த தேவகாந்தரி பாடினப்புறம் பிடில் வாசிச்சுதே கோபு- வாசிக்கணுமே - பிழிஞ்சு பிழிஞ்சு அழுதது.'கோபாலி, சாட்சாத் கோபாலண்டா நீ. நான் வாசிக்க மாட்டேன். என்னை ஔமானப் படுத்தாதே'ன்னு ஜரிகை அங்கவஸ்திரத்தாலே கண்ணைத் துடச்சுண்டது.அதுக்கு என்னைச் சொல்றதாக எண்ணம். அது சொன்னதுதான் நிஜம்.கோபாலன் தான் பாடினான் - "

"ஆ! அசத்தறியேடா மச்சி" என்று வாய்விட்டரற்றினேன். இதைப் படிக்கும்போதெல்லாம், ரேழி முழுக்கத் தெரிந்த தலைகளில் ஒன்று என்னுடையதாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து மருகுவேன். இந்தப் பகுதியை முதலில் படித்தவுடன் ஏதோவொரு வினோத உணர்ச்சி மிகுதியால் ஆட்கொள்ளப் பட்டேன். ஒவ்வொரு முறையும் ஆட்கொள்ளப்படுகிறேன். 'உண்மையான கலைஞன் தன்னை வெளிப்படுத்துவது இப்படித்தானோ?' என்று கோபாலியையும், இந்தப் பகுதியை ஒரு tranceல் இருந்தது போல எழுதிய தி ஜா வையும் பார்த்து நினைத்துக் கொள்ளுகிறேன்.

உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா?

கருத்துகள்

Santhosh Guru இவ்வாறு கூறியுள்ளார்…
முழுமையான காண்டெக்ஸ்டில் படிக்காததாலோ என்னவோ, எனக்கு இந்த பத்திகள் கொஞ்சம் weird உணர்வினை அளிக்கிறது. சரியாக சொன்னால் முழுமையாக புரியவில்லை. இந்த நாவலைப் படித்தால் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை உணரமுடியும் என எண்ணுகிறேன்.

தி.ஜா எழுத்துக்கள் மீது (மோகமுள் தவிர அம்மா வந்தாள் மற்றும் மரப்பசு) சில காலமாக ஒரு புதுவிதமான ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அவருடைய ரசிகர்கள் அவருடைய எழுத்து பற்றி பேசும் போது, அந்த அனுபவத்தினை பகிர நினைக்கும் போது, (அவருடைய எந்த எழுத்துக்களையும் படிக்காத எனக்கு) அக்கார அடிசலின் சுவையினை வார்த்தையில் சொல்வது போல எனக்கு சம்பந்தமில்லாமல் தோன்றும்.

அதைப் போலவே தி.ஜா பற்றிய வெங்கட் சாமிநாதனின் ஒரு கட்டுரை படித்த பின்பு, அவருடைய ஜப்பான் பயண நூலான உதயசூரியன் மேலும் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது.

ஆர்வமெல்லாம் நிறையாத்தான் இருக்கு. கூடவே சோம்பேறித்தனமும் அதிகமாக இருக்கு, நேரமும் குறைவாக இருக்கு. ம்ம்ம்ம்.. :))
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் கருணாகரமூர்த்தி,

உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

நல்ல எழுத்து என்பதைப் பலரும் அவரவர் அளவுகோல்களை வைத்துப் பார்த்துக் கொள்வர். ஒருவரின் ரசனை, மற்றொருவரினின்றும் வேறுபட்டு இருப்பதில் வியப்பில்லை; தவறும் இல்லை தானே.

மற்றபடி, திஜா வின் படைப்புக்களை இந்தக் கோணத்தில் இருந்து ரசிப்பதில் நான் தனியில்லை என்பது மகிழ்ச்சியாயிருக்கிறது.

நீங்கள் கொடுத்த சுட்டிகளை இப்போது என்னால் பார்க்க/கேட்க முடியாது. பிறிதொரு சமயம் முயற்சிக்கிறேன்.

சுவாதித் திருநாள் ஒரு அருமையான திரைப்படம். இசை முக்கியத்துவம் உள்ளதாயினும், சுவாதித் திருநாள் என்ற கலைஞனை வேறொரு நிலையில் அறிந்து கொண்டது போல இருந்தது. அனந்த் நாக் அருமையாகச் செய்திருந்தார் - நினைவூட்டியதற்கு நன்றி.
Thangamani இவ்வாறு கூறியுள்ளார்…
எப்படி இந்தப் பதிவைத் தவறவிட்டேன்.

தி.ஜா என உயிருக்கு நெருக்கமான எழுத்தாளர். இந்த பத்திகளை நானும் இரசித்துள்ளேன். இசை அவரது எழுத்து. அதுவே இசையைப்பற்றி பேசும் போது களிகொள்ளும், உருகும், தீர்க்கமாய் நிலைக்கும், தவழும், முகிழ்களின் மேலெல்லாம் தாண்டி பறக்கும், ஆறாய் நகரும்.

எனக்கு பாரம்பரிய இசையறிவு கிடையாது. எனது இரசனையின் அளவுகளையும் அறியேன். ஆனால் இது எனக்கு தி.ஜாவையும் இசையையும் ரசிக்க தடையாய் இருக்கவில்லை. மோகமுள்தான் அவரது இசைபற்றிய அற்புதமான காட்சிகளைக் கொண்டிருந்தது என்பது என் கருத்து.

பதிவுக்கு மிக்க நன்றி
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
//எனக்கு பாரம்பரிய இசையறிவு கிடையாது. எனது இரசனையின் அளவுகளையும் அறியேன். ஆனால் இது எனக்கு தி.ஜாவையும் இசையையும் ரசிக்க தடையாய் இருக்கவில்லை//

:-)


தங்கமணி,

யாருக்குமே இது ஒரு தடையாக இருக்க முடியாது என்று தான் நினைக்கிறேன்.

இன்னும், நுட்பமான ரசனைகளை உடையவர்களைப் பார்த்தால் எனக்கு ஏனோ மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையிலும் ஒரு meta ரசிகனாக இவர் இசை எழுத்துக்களை ரசிப்பேன்.

நன்றி!
மாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
தி.ஜா.வே நன்றாக வீணை வாசிப்பார்.அவ்ர் வாசித்து நான் கேட்டிருக்கிறேன். அவர் ஏமனி யின் ரசிகர். எம்.டி.ராமநாதனின் அபிமானி.

அவருக்கு இலக்கியத்தை விட சங்கீதம் மனதுக்கு நெருக்கமானது.அவ்ருக்குள்ளேயே அது ஒரு இழையாக ஒடிக் கொண்டிருந்தது என்பது என் எண்ணம்.

சிதம்பர சுப்ரமணியத்தின் இதயநாதம் படித்திருக்கிறீர்களா?
மாலன்
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி மாலன்.

//அவர் ஏமனி யின் ரசிகர். எம்.டி.ராமநாதனின் அபிமானி//

மோகமுள் கதையில் வரும் ஒரு காட்சி எம்.டி.ஆரின் வாழ்க்கைச் சம்பவம் என்று உயிர்மையில் சுகுமாரனும் எழுதியிருந்தார்.

//சிதம்பர சுப்ரமணியத்தின் இதயநாதம் படித்திருக்கிறீர்களா?//

இல்லை, ஆனால் படிக்கப் போகிறேன் :-)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...