முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தோற்றோர், நேசிப்போர், வெல்வோர்

 


எவ்வளவு நல்ல உலகம் இது! இங்கே இறப்பது எவ்வளவு இனிமையானது!

வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தோற்ற (ஒரு) கவிஞன் மரணத்தில் வென்றான். அவன் போகிறபோக்கில் சொல்லிப்போனது இது — என்று ஒரு மலையாள மேடைப் பேச்சில் கேட்டேன்.

பேச்சு, தோற்றவர்களைப் பற்றியதானது. அதாவது, வெற்றி/தோல்வி என்று நாம் வகுத்திருக்கும் விதத்திலே ‘தோற்றவர்கள்’. பேச்சாளர் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் விழாவில் இப்படிப் பேசினார். அவர் பேச்சின் சாராம்சம், வெளிச்சத்தின் மறுபுறமும் நாம் நோக்க வேண்டும் என்பதே.

John Ruskin-ன் “Unto the last” என்ற நீண்ட கட்டுரையையே காந்தி சர்வோதயம் என்று மொழிபெயர்த்தார். “மண்ணில் பிறந்த எல்லா உயிரினங்களுக்கும் இந்த உலகிற்கு நல்க ஏதேனும் ஒரு நன்மை இருக்கிறது” என்பதும் உபபாடம்.

இன்று சர்வோதயம் பற்றித் தெரிந்துகொண்டேன்…



வாழ்க்கையின் பேறு பொருளாதாரத் சிறப்பில்தான் இருக்கிறதென்று ஆகிவிட்டது காலமும் சமூகமும். சந்தையும் வர்த்தகமுமே இன்று உலகின் ஆகப்பெரிய சக்தியாயிருக்கிறது. ஒரு சமூகத்தின் சீரழிவையோ, அதன் வேட்க்கையையோ, அது கொண்டாடுவதையோ , அந்தச் சமூகத்தின் கல்வியமைப்பு பிரதிபலிக்கும் (இதுவும் பேச்சாளர் சொன்னதே).

அப்படிப் பொருள்முதல்வாதம் இல்லாத (அப்படியொரு காலம் இருக்குமா என்பது ஐயமே — ஆனாலும் பொருளுக்கு அப்பாற்பட்ட விழுமியங்கள் நிலைத்திருந்த) காலக்கடத்தின் வறிய புலவர்களும் கவிஞர்களும் அதை பெரு பொருட்டாக எண்ணியிருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

வறுமை கொடிதே, ஆனால் அது தவிர்க்கமுடியாத தொல்லையாகவே இருந்திருக்குமோ?




ஓ வி விஜயனின் பழைய நேர்காணல் ஒன்றைக் காண நேர்ந்தது. திருவனந்தபுரம் தொலைக்காட்சி நிலையம் படைத்தது. நேர்காணல் செய்கிறவர் நரேந்திர பிரசாத் — இவரை எனக்கு மலையாளப்பட வில்லனாகத்தான் தெரியும். அவருக்கு ஒரு இலக்கிய / பத்திரிக்கை முகம் இருந்ததென்று தெரியாது. பாரதி சொல்லும் ‘பரதேசியைக்கண்டால் கும்பிடு — யார் எந்த வடிவில் இருப்பார்கள் என்று நமக்குத் தெரியாது” நினைவில் வந்துபோனது. அதேபோல இந்தப் பழைய தொலைக்காட்சிப் படைப்புகள் — சில அருமையான, நினைவில் நிற்கும் அம்மாதிரியானவை இப்போது முற்றிலும் இல்லாமல் போய்விட்டன.

இருக்கட்டும். விஜயனின் காசாக்கின்டெ இதிஹாசம் முதலான நாவல்கள் குறித்தாயிருந்தது நேர்முகம். விஜயன் சொன்ன ஒன்றை பகிர்ந்துகொள்ளவே இது (கொஞ்சம் புரிகின்ற மலையாளமும், அவரே ஆங்கிலத்தில் சொன்னதும் சேர்த்து — இல்லாவிட்டால் இது என் கருத்தாகிவிடும்!):

“நம்முடைய கதைகளில் வரும் நாயக சங்கல்பங்கள் நமக்கு மேற்கத்திய இறக்குமதியாயிருக்கிறது. நம்முடையதான நாயக சங்கல்பம் ஹைந்தவ (இந்துத்துவ) பாரம்பரியத்தைச் சார்ந்தது. மத பரம்பரியத்தைச் சொல்லவில்லை, கலாச்சாரப் பாரம்பரியத்தைச் சொல்கிறேன். நான் சொல்லுவது — the process of a hero — நம்முடையவை மேற்கினின்றும் முற்றிலும் மாறுபட்டது; மார்குவேசின் தென்னமெரிக்கப் பாரம்பரியம் இவையிரண்டினின்றும் வேறுபட்டது. இந்த நாயகனைப் படைக்க முயன்றிருக்கிறேன்”

இதைப்பற்றி யோசித்தபோது, மேற்கத்திய நாயகன் புறவுலகின் சிக்கல்களை எதிர்கொண்டு அவற்றை முறியடித்து வெற்றி காணும் ஒருவனாகவும், நம்முடைய நாயகன் புறவுலகில் அதையே செய்தாலும், அவற்றை வெறும் சின்னங்களாக உபயோகித்து அகத்தெளிவு பெறும் ஒருவனாக, ‘தன்னை’ வெல்கின்றவனாகவும் தெரிகிறான்.

இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள விஜயனின் நாவல்களைப் படிக்கவேண்டும். அதற்குத் தேவையான மலையாளம் இன்னும் வசப்படவில்லை!


முக்கி முக்கி பாத்தும்மாவின் ஆடு முதல் அத்தியாயம் தான் முடிந்திருக்கிறது. எழுத்துக்களில் கவனம் குவிந்ததில் மொழியை வேண்டும்விதம் நுகர முடியவில்லை. மீண்டும் எழுத்தில் தடுக்கிவிழாமல் வாசிக்க வேண்டும்


இது வெறுப்பவர்களுக்கான, வெறுப்பவர்களினாலான, வெறுப்பவர்களினால் இயங்கும் உலகம். வெறுப்பும் காழ்ப்பும் மனிதரின் ஆயுளை நீட்டிக்கின்றன. இப்பாரையும் இதன் உயிரினங்களையும் நேசிப்பவர்களை மரணம் இங்கிருந்து பிடுங்கிக்கொள்கிறது. படைப்பில் ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது போலவும், அதை உடனே சமன் செய்வது போலவும்…

கவிதைக்குழுவில் இருக்கும் ஒரு எழுபது வயதுத் தோழிக்குப் புற்றுநோய். இப்போது முற்றி, ஆஸ்பத்திரியில்… துள்ளலும், வேகமும், நிறைந்தவள். எதையும் எப்போதும் பேச அஞ்சாதவள். வாழ்க்கையை மிகவும் நேசிப்பவள். உடலைச் செயலிழக்கச் செய்வதைவிடவும், நம் ஆற்றலை, உணர்ச்சியை, காதலை, தீவிரத்தை, இச்சாசக்தியை வீழ்த்துவதில் புற்றுநோய் வெற்றி காண்கிறது. அற்பப்பதர். கோழை.

(படங்கள் உபாயம்: நண்பன் மகேஷ் )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

என் தமிழ் எழுத்து மேம்பட...

"கூடியவைரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது" - தமிழ் உரைநடை பற்றி பாரதியார் பாரதியின் உரைநடையில் இருக்கும் எளிமைக்கும், நேரடியான சம்பாஷணை உத்திக்கும் ஒரு அதி வசீகரம் இருக்கத் தான் செய்கிறது. இந்த வித்தையின் எளிய இலக்கணக் குறிப்பாகவே இந்த மேற்கோள் பயன்படும் என்று நினைக்கிறேன் - மட்டுமல்லாமல், இந்த எளிய குறிப்பு தெளிவாக எழுதவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது. என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது. சின்...