முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

 டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது. 


இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான்.

இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு.


மூதாட்டிகள் 

    - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது)


மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை  

அநிச்சயமான காடுகளில் இருந்து 

தெளிவற்ற குறிகளும் சொல்வதில்லை.


அவர்கள் அமைதியான சாயங்காலங்களில் 

பூங்காவின் காலியான பெஞ்சுகளில் 

சும்மா உட்க்கார்ந்து 

புறாக்களை அவைகளின் பேர்சொல்லி அழைத்து 

அவைகளுக்குத் தானியங்களை இட்டுக் கொண்டிருப்பார்கள்.


அல்லது, அலைகள்போல மெல்லே நடுங்கியபடி 

அவர்கள் அரசு மருத்துவமனைகளின் 

முடிவற்ற வரிசையில் நின்றிருப்பார்கள்

இல்லை வெளியூர் சென்று 

எப்போதோ மரித்துவிட்ட

மகன்களின்  கடுதாசை எதிர்பார்த்து 

தபால் நிலையங்களில் 

மழைமறந்த மேகக் கூட்டம்போல

நிலைகொள்வார்கள்.

 

அவர்கள் மேலே தூக்கிப்போட்ட ஏதோவொன்று 

பூமிக்குத் திரும்பி வராதது போன்ற 

தொலைந்த பார்வையுடன் 

தூறல் போல கிசுகிசுத்தபடி 

வீதியில் அலைவார்கள்.


கடை விறாந்தைகளில் 

கனவற்ற உறக்கத்தில் அவர்கள் 

டிசம்பர் இரவுகளைப்  போல விறைத்திருப்பார்கள்.


பார்வை மங்கும் அவர்கள் கண்களில் 

இன்னும் ஊஞ்சல்கள் ஆடிக்கொண்டிருக்கின்றன,

அவர்களின் மழுங்கும்  ஞாபகத்தில் இன்னும் 

அல்லிகளும் கிறிஸ்துமசுகளும்  இருக்கின்றன.


அவர்களின் ஒவ்வொரு தோல்ச் சுருக்கமும் 

ஒரு நாட்டுப்புறக் கதை சொல்லும்.

தொங்கிச் சுருங்கிய அவர்களின் 

மார்புகளில் அவர்களை பொருட்படுத்தாத 

இன்னும் மூன்று தலைமுறைகளுக்குச் சேர்த்தும்  

தேவையான பாலுண்டு.  


எல்லா விடியல்களும் அவர்களை 

இருட்டில் இருத்திக் கடந்து செல்லும்.

இறப்புக்கு அஞ்சுவதில்லை அவர்கள்

எப்போதோ இறந்துவிட்டார்கள்.


முதிய பெண்டிர்  முன்னொருகாலத்தில் 

கண்டங்களாக இருந்தார்கள்.

அவர்களுள் அடர்காடுகள் இருந்தன

ஏரிகளும், மலைத்தொடர்களும், எரிமலைகளும், 

இன்னும், ஆத்திரத்தின் உட்கடல்களும்கூட இருந்தன.

புவிவெப்பத்தில் அவை உருகிச் சுருங்கி 

வெறும் வரைபடங்களாகிவிட்டன.

அப்படங்களை நீங்கள் மடித்துக் 

கைவசம் வைத்துக்கொள்ளலாம் 

யாரறிவார், என்றாவது நீங்கள் உங்கள் வீடுசேர 

வழிகாட்ட  அவை உங்களுக்கு உதவலாம்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...