முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெறிப்படுத்தும் நட்பே,

என்னோடு நட்புப் பாராட்டுமுன் தெரிந்து கொள் - அல்ப்பத்தனம், பொறாமை, முன்கோபம், வெளி வேஷம் எல்லாங்கலந்த கலவை நான். என்னை ஒருநேரம் கடையில் நீ வாங்க நேர்ந்தால், இவைகளுக்கும் விலைகொடுத்து வாங்க வேண்டும் - தனியாய்க் கிடைக்கமாட்டேன். நான் சின்ன அறிவும் பெரிய ஆசையும் படைத்த, பல தவறுகளை இழைக்கிற, அவற்றை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கிற சாதாரணன். உந்தன் நட்புப் போர்வைக்குள் நான் வந்த பிறகு என்னுடன் வந்த என் சிறுமைகளை என் முகத்தில் எறிந்து காயப்படுத்தாதே. என் சிறுமைகள் அறிந்தும் நீ நட்பாய் இருப்பதிலேயே அச்சிறுமைகளைக் களையும் ஆசையும் உறுதியும் எனக்கு வாய்க்கிறது. எல்லாச் சிறுமைகளும் போக எனக்குள் எஞ்சி நிற்கும் மனிதத்தை நீ கண்டுகொண்டதன் அத்தாட்சி உன் நட்பு - இதுவே அச்சிறுமைகளைக் களைந்து அங்கே மனிதத்தை நிரப்புவதற்கான எனது பெரிய நம்பிக்கை. நான் இங்கே வருமுன்னரே மனத்தில் பலப்பல குப்பைகளை நிரப்பி வைத்திருக்கிறேன். இவைகளை ஒருநாளில் களைய முடியாது. மனத்துக்கண் நான் மாசிலன் ஆக ரொம்பக்காலம் பிடிக்கும். ஆனால் அதுவரை நீ என்மேல் நம்பிக்கையுடன் இரு, நெறிப்படுத்தும் நட்பே!

கருத்துகள்

Suresh இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன்,

அருமையான பதிவு...

சக மனிதனை அவனது குறைகளோடு ஏற்றுக்கொண்டு எல்லோரும் நட்பு பாராட்டினால் இந்த உலகத்தில் பிரச்சினைகளே இருக்காது. பிரச்சினை என்னவென்றால் பெரும்பாலானோருக்கு அவரவரது குறைகள் என்னவென்றே தெரியாது அப்படியே தெரிந்தாலும் அதை ஒப்புக்கொள்ளும் தைரியமும் இல்லை.

அப்படி நமது குறைகளை ஏற்றுக்கொண்டு நட்பு பாராட்டாதவர்களிடம் கூட அதை அவர்களின் இயல்பாக ஏற்றுக்கொண்டு நாம் நட்பு பாராட்டிவிடுவது அதனினும் நன்று.
வானம்பாடி இவ்வாறு கூறியுள்ளார்…
அற்புதமான கருத்து கண்ணன்.
தாணு இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கருத்து. ஓரளவு கவிதை போலவே உள்ளதை, கவிதை நடையிலேயே எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
( நல்ல நட்பு குறைகளையும் சுட்டிக் காட்டும்!!!)
மதி கந்தசாமி (Mathy Kandasamy) இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையாக இருக்கிறது கண்ணன்.

தாணு- எனக்கென்னமோ இப்படி எழுதியிருப்பது பிடித்திருக்கிறது. எல்லாவற்றையும் கவிதையில் சொல்லவேண்டும் என்று இல்லைதானே?

-மதி
Thangamani இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு கண்ணன்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
சுரேஷ், சுதர்சன், தாணு, மதி மற்றும் தங்கமணி: உங்கள் பின்னூட்டங்கள் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. உங்களுக்கு நன்றி.
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
'கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான்' என்பது போல அழகாகக் கூறியிருக்கிறீர்கள் :)
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி பாலா...
Pavithra Srinivasan இவ்வாறு கூறியுள்ளார்…
Hello Mr. Kannan,

I'm a fan of your blog-posts - of your post about ThiJaa, in particular. :-) Your latest post is so very thought- provoking. Bravo!

[I'm writing in english, because there's some problem with my Tamil fonts set-up)
Could you please give me your email id?
நளாயினி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆகா நல்லதொரு சுய விமர்சனம். பாராட்டுக்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் கவிதை

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர