முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புனைவு

Photo by Magesh Babu


கடைந்த மோரில்
வெண்ணெய்யைக் 
'கட்டிப்'-
      பிடிப்பது போல 
யோசித்துச் சேர்த்தது 

டம்பளர் பாலில் 
கருப்புப் பூச்சியாய்ப்  
பிடிக்கப் பிடிக்க 

நழுவும், 

கண்ணை 
மூடிமூடித் திறந்தாலும் 
கிடைப்பதில்லை - 

கொஞ்ச நேரம் 
அசிரத்தை-பாவனை
       செய்தும், 
பிடிக்கப் போனால் 
மறுபடி ஓட்டம்

உள்ளதை உள்ளபடிச் சொல்லுவது 
உள்ளபடியே 
மாயக்கண்ணாடி மட்டுந்தான்

மற்றபடி,
இதையும் சேர்த்து 

எல்லாம் பாசாங்கு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் தமிழ் எழுத்து மேம்பட...

"கூடியவைரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது" - தமிழ் உரைநடை பற்றி பாரதியார் பாரதியின் உரைநடையில் இருக்கும் எளிமைக்கும், நேரடியான சம்பாஷணை உத்திக்கும் ஒரு அதி வசீகரம் இருக்கத் தான் செய்கிறது. இந்த வித்தையின் எளிய இலக்கணக் குறிப்பாகவே இந்த மேற்கோள் பயன்படும் என்று நினைக்கிறேன் - மட்டுமல்லாமல், இந்த எளிய குறிப்பு தெளிவாக எழுதவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது. என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது. சின்...

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...