முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாரயிறுதியாய்த் தீரும் வாழ்க்கை

திங்கள் முதல் வெள்ளிவரை 
நாள்தொடங்கி முன்னிரவு வரை 
அலுவலக அர்ப்பணிப்பு
காபி டம்ப்ளரைக் கழுவாததில் இருந்து, 
அம்மாவை 'செக்கப்'புக்கு கூட்டிப்போகாதது வரைக்கும் 
இது தான் சாக்கு

வேறெதற்கும் நேரமின்றி 
வேறெதிலும் நாட்டமுமின்றி 
உழலும் பொழுதுகள் 

எல்லாம் இருந்தமைந்த பின்பு 
வாழ்க்கையை விரும்பிய படி வாழவென்று
அலை ஓய்ந்தபின் 
கடலிலே குளிக்கும் ஆசை

மறந்துவிட்ட நண்பனின் 
திருமண அழைப்புக்கு 
மன்னிப்பு மடலேனும் எழுதலாமே 
என்று தோன்றும் போது வருகிறது
அவன் மகளின் முதல் பிறந்தநாளுக்கான அழைப்பு 

இதுவும், 
தாடியில் தென்படும் நரைகளுமே 
ஒன்றும் சாதிக்காத
கால ஓட்டத்தின் 
அத்தாட்சிகள்

தினமும் சுவர்க்கோழி கத்தும் வரை 
டிவி முன் குத்த வைத்து
 'சனி, ஞாயிறு ரெண்டு நாள் தான் கிடைக்குது தூங்க - பாவம்' என்று தூங்கிய நேரம் போக 
வாரயிறுதி வாரயிறுதியாய்த் தீரும் 
வாழ்க்கை

(ஜூலை 2005)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

  டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.  இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான். Ejercicio cerebral para las personas mayores. pic.twitter.com/wEMLDTjti0 — Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025 இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு. மூதாட்டிகள்      - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது) மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை   அநிச்சயமான காடுகளில் இருந்து  தெளிவற்ற குறிகளும் சொல்வதில்...

பிரதியாகிய நானும், வாசகியாகிய நீயும்

  சிட் கார்மனின் "It isn't for want" என்ற கவிதை  படித்ததும் மொழிபெயர்க்கத் தூண்டியது.  ஆங்கிலக்கவிதை இங்கே . Photo by Magesh Babu என் மொழிபெயர்ப்பு: எதையும் பேசவோ  உன்னிடம் சொல்லவோ   உனக்கு அறியத்தரவோ  வேண்டும் என்பதனாலல்ல - போக முடியாதபடி    உன்னை நிறுத்தி வைக்கவே -   இங்கு நான் நானாகிறேன்  நீ இருக்கும் வரை - நீ இருக்கும் வரை --- கவியின் / கவிதையின் (இப்படியான) வாசிப்பவருடனான நேரடி உரையாடல் அரிதானது.  ஆங்கிலப் பிரதியில் பலமுறை தோன்றும்  you   தமிழின் வேற்றுமை உருபுகளால் வெவ்வேறு வடிவங்களைக் கொள்கின்றது. ஆனால் அது அவ்வாறு வருவது ஒரு மந்திர உச்சாடனை போல கவிதையின் ஒலியமைப்புக்கு அழகு சேர்க்கிறது. இவ்வளவு ' நீ ' இருக்குமிடத்தில் ' நான் ' ஆங்கிலத்தில் மறைந்தேயிருக்கிறது. தமிழில் 'நான்' இல்லாமல் மொழிபெயர்க்க முடியுமானாலும் அந்த வரி தட்டையாகவே அமையும்.  நான் இங்கே முக்கியமல்ல - நீயே இங்கு நிறைந்திருக்கிறாய். உன்னைச் சுற்றியே எல்லா இயக்கமும்.  'நான்' பிரதி / கவி என்பது ஒரு வாசிப்பு. ஆனால் எவ்வளவு சாத்தியங்களை உள...

வைக்கம் முகம்மது பஷீரும் மீசை மாமாவும்...

  மேட்டுப்பாளையம் ரோட்டில் ஓடிக்கொண்டிருந்த ’ஜீப்’சட்டென்று நிதானமிழந்து, ஒரு குலுங்கல் குலுங்கி, சறுக்கி, ஒருவழியாக சாலையோரத்தில் நின்றது - பங்க்சர். மாமாவின் சாம்பல் சொம்புக்குள்ளே பத்திரமாகவே இருந்தது. மின்சார உலையில் மாமாவை அன்றைக்குக் காலையில்தான் எரியூட்டியது. ஒருமணிநேரத்தில் ஒருபிடி சாம்பல் - மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் அதைக்கலக்கவே இந்தப் பயணம். ’நிமித்தங்களை’ நம்புகிறவர் சித்தப்பா - “இது மாதிரி சமயங்களில் இப்படி ஏதாவது நிமித்தங்கள் காட்டும்” என்றார். மாற்றுச்சக்கரத்தைப் பொருத்தி எல்லோரும் இளநீர் குடித்தோம். திக்காலுக்கொன்றாய் சிதறிக்கிடக்கும் மாமாவின் அக்காள் / தங்கைகளின் மக்கள் நாங்கள். மாமா பிள்ளைகளுடன் சேர்த்தால் ஏறக்குறைய 22 பேர் கொண்ட இரண்டு கிரிக்கெட் அணியினர் தேறுவோம். மாமா யாரையும் விட்டுக்கொடுக்காதவர். எல்லோரும் எல்லாருடனும் எப்போதும் தொடர்பிலிருக்கவேண்டும் என்று விழைபவர். எனக்கும் அந்த விழைவு உண்டு. இந்த 22 பேரும் ஒன்றாய்க் கூடி மகிழவேண்டும் என்று அடிக்கடி திட்டமிடுதலும், எல்லோரும் இயைந்து ஒன்றாய்ச்சேர சமயம் கைகூடுவதில்லையாதலால் அதைக் கைவிடுவதுமாய் இருப்போம். இ...