முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...

ஆதவனின் காகித மலர்களில் இருந்து...

அன்புடையீர், வருடப் பிறப்புக்கு முந்தின இரவு கனாட் பிளேஸில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி திரு.அவினாஷ் மாதுர் உங்கள் பத்திரிகையில் எழுதியிருந்த கடிதத்தைப் படித்தேன். பெண்கள் இதுபோல ப்லாத்காரத்துக்கு உள்ளாவதற்கு பெண்களேதான் ஒரு விதத்தில் பொறுப்பாளியென்றும், இன்றைய நவநாகரீகப் பெண்களின் நடையுடை பாவனைகள் பரம யோகிகளைக்கூட நடத்தை தவறத் தூண்டுவனவாக உள்ளனவென்றும் அவர் எழுதியிருந்தார். இது மட்டுமா? பல பெண்கள் இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் ஒரு ரகசியமான இன்பம் பெறுகிறார்களென்பதும், அவர்கள கூச்சல் போடுவதெல்லாம் வெறும் வெளிவேஷந்தான் என்பதும், ஒரு சில சாராரிடையே பலாத்காரமே செய்யப்படாத பெண்களைப் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் இகழ்ச்சியுடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்பதும், துர். மாதுரின் வேறு சில துணிவுகள். அடேயப்பா! துர்.மாதுரின் கரங்களில் நேரடியான பங்கும் அனுபவமும் இருந்திருக்குமோ என்று சந்தேகம் கொள்ள வைக்கின்றன. அல்லது ஒரு வேளை, போன ஜன்மத்தில் அவர் ஒரு பெண்ணாக இருந்திருப்பாரோ என்னவோ? ஆம். அதுவும் சாத்தியம் தான். ஏனென்றால் அவருடைய சில அபிப்பிராயங்கள் ஏறாத்தாழ ஒரு நூற்றாண்டு பின் தங்கியவையாகத் தொனிக்கின...

மா ரமணன், உமா ரமணன்!

இரண்டு உன்னதமான கலைஞர்களை எப்படியோ ஒரே சமயத்தில் பெற்றிருப்பது உலகக் கிரிக்கெட்டிற்குக் கிடைத்த பேறு. இருவரும் சமீபத்தில் அவர்களின் துறைகளில் சாதனை படைத்திருக்கிறார்கள். அணுமுறையாலும், ஆடுவதின் இயல்பாலும், குணாதிசயங்களாலும் வேறுபட்ட இரண்டு தனித்துவமான ஆளுமைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறது மனது. லாராவின் irregularity யாராலும் புரிந்துகொள்ள முடியாததாக இருந்திருக்கிறது. வீழ்ச்சியடைந்ததாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது அற்புதமான ஒரு ஆட்டத்தில் மீண்டு வருவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறார். சிறப்பாய் ஆடிய அநேக ஆட்டங்கள் இவர் அணியை வெற்றி பெற வைத்ததில்லை. இவர் ஆடிய 121 டெஸ்ட்களில் இவர் அணி 56 முறை தோற்றிருக்கிறது. டெண்டுல்கர் ஒரு காலத்தில் குருவி தலையில் பனங்காய் போல இந்தியாவின் மொத்தச் சுமையையும் பலரின் எதிர்பார்புகளையும் தாங்கி இருந்ததில் அவர் ஆட்டம் பாதித்தது. சமீபத்திய உடலுபாதைகளால் அதிக ஓய்வு எடுக்கும்படி வந்ததும், மீண்டு வரும் முதல் ஆட்டத்திலேயே அவர் நன்றாக ஆடவேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் அவர் மனதில் இன்னும் கிலேசத்தை உண்டு செய்திருக்கும். "மார ஜனகன், குமார ஜனகன்.....

பி(ப)டித்த வலைப்பதிவுகள்

ஆரம்பம் இங்கே ஃபீலியஸ் ஃபாக் மாதிரி நான் உலகம் (தமிழ்மணம் :D) சுற்றி வந்து பி(ப)டித்த வலைப்பதிவுகள் பற்றி எழுதும் போது புதன்கிழமை ஆகியிருக்கிறது - எப்படியேனும் ஏதோ ஒரு ஊரில் இது இன்னும் செவ்வாயாக இருக்காதா என்கிற நப்பாசையில்... கடந்த வாரத்தில் நான் படித்த (மிகச் சொற்பமான) பதிவுகளில் இவை பிடித்திருந்தன: நல்லவர்களும் கெட்டவர்களும் பிறரும் இயல்பாய்க்கொஞ்சம் தண்ணீர் கம்போடியா - மண்டை ஓடுகளின் நடுவில் பொன்னான காற்று தாராப்பூர் பன்னிரண்டு இந்தப் பதிவுகளைக் குறித்து இன்னும் எழுத ஆசையிருந்தாலும், நேரமின்மையால் தற்போது முடியவில்லை. *** இந்த நண்பர்களைத் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பில் வரவேற்கிறேன்: 1. வித்யா சுரேஷ் (இப்போது ஆளைக் கொஞ்சம் நாளாய்க் காணவில்லை) கவிதைக்கெனவே பதிவு் துவங்கியிருக்கும் இவரை நகுலனின் இந்த வரிகளை மனதிற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். "கவிதைதான் இலக்கியத்தின் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பொழுது கவிதையில் படிமத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பறைசாற்றுகிறார்கள். ஆனால், படிமம் கூட மனநிலையின் சூக்கும உருவாக, சிந்தாகதியின் பிரதிரூப பிம்பமாகச் செயல்படுவதில்தான் சிற...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

பெங்களூர் டயரி - 3

எனக்கு சந்தோஷ் குருவுடன் பேசுவது என்பது ஒரு உரையாடல் இல்லை. இந்த மாதிரிப் பேச ஒரு ஆள் கிடைத்தானே என்று, நான் வார்த்தைகளை அவர் மீது வாந்தியெடுப்பேன். அவருக்கு நல்ல பொறுமை. இதைப் பின்னால் நானே யோசித்துப் பார்த்தபோது கிளைத்துக் கிளைத்துப் பரந்த பேச்சில் கோர்வையாக ஒரு இழைகூட இருக்காது. கிடைக்கும் இரண்டு மணிநேரத்தில் எல்லாவற்றையும் பேசிவிட வேண்டும் என்ற நோக்கிலோ என்னவோ தாவித் தாவிப் போகும் பேச்சில் எந்த ஒரு விஷயமும் மையச் சரடுக்கு மீள்வதில்லை. எல்லா விஷயங்களும் ஆங்காங்கே தொக்கி நிற்கும். *** இப்படியாகப் போனவாரம் ஒரு இழை நவீன ஓவியங்கள், நாடகங்கள், எழுத்து, இவற்றில் குறியீடுகளைப் (symbolism?) புரிந்து கொள்ளுதல் பற்றி நீண்டது. ஒரு விஷயத்தை எந்த முறையாலும் முழுமையாக, நம் திருப்திக்கேற்ப வெளிக்காட்ட முடியாதது எவ்வளவு அவஸ்தையைக் கொடுக்கிறது என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்க முடிகிறது. மொழி extensible இல்லை. அதை ஒரு வெளிக்காட்டு முறையாகப் பயன் படுத்தும் போது எழுத்துகள் தரும் மேலார்ந்த பொருள்களுக்கு அப்பால் ஒன்ற உணர்த்த அந்த basic set ஐ வைத்துக் கொண்டே தகிடுதத்தம் பண்ண வேண்டியிருக்கிறது. சாதாரணமானவ...

அன்புத்தோழிக்கு...

மகிழ்ச்சியான தருணங்களை அவை நிகழும்போது நான் அனுபவிப்பதில்லை. கிடைக்கும்பொழுது ஆனமட்டும் புல்லை விழுங்கிவிட்டுப் பின்னால் அசைபோடும் மாடு போலச் சில தருணங்களைச் சுவைக்காமல் விழுங்கிப் பின்னால் ஒரு தனியான பொழுதில் எல்லாவற்றையும் மீட்டு நினைவுகளைச் சுவைப்பதில் மகிழ்ச்சி. அப்படியே நேசத்தோடு கழித்த நல்ல பொழுதுகளையும் விழுங்கிவிடுகிறேன். இதை நினைவிலிருந்து மீட்டெடுப்பதில் துளியும் மகிழ்ச்சியில்லை இப்போது. நீ புறப்பட்டுப் போனபின் சுவாசக் காற்றுப் பிரிந்த வெறும் கூடு போல உன்னுடன் புழங்கிய இடமெல்லாம் உயிரற்றுக் கிடக்கிறது. முன்னாளில் பேசிய கடும் வார்த்தைகளை விடுத்து வாஞ்சையுடன் இன்னும் அன்பைப் பரிமாறியிருக்கலாம் - இனி அதற்கான வாய்ப்பு என்று கிடைக்குமோ...சிறுபிள்ளைத்தனமான கோபங்களை விடுத்து நம்மிடையே பேசிக்கொள்ளாத அந்தப் பொழுதுகளை அன்பான வெற்றுப் பேச்சாலேனும் நிரப்பியிருக்கலாம். இந்த வாய்ப்பையெல்லாம் தவறவிட்டுவிட்டு, கையசைத்து வழியனுப்பும் ஒரு மணிநேரப் பொழுதில் எவ்வளவுதான் நாம் செய்துவிட முடியும்? பிரிவையும் விட இந்தத் தவறவிட்ட சந்தர்ப்பங்கள் மேலும் துயரைத் தருகின்றன. காலம் நின்றுவிட்டதாய்த் தோன்றி...

வெள்ளெருக்கு

வயிற்றுப் பிழைப்பு தான் மனிதனின் எல்லாச் செயல்களையும் ஊக்குவிக்கிறது என்று நான் நினைப்பேன். ஒருவேளை மனிதனுக்குப் பசி என்ற ஒன்று இல்லாவிட்டால் வாழ்க்கையில் எதன் நிமித்தம் அவன் பாடுபடுவான்? ஒரு வகையில் மனிதனின் எல்லாச் செயல்களையும் நியாயப்படுத்தும் ஒரே தேவை வயிற்றுத் தேவையே. அந்தத் தேவை இல்லாதிருப்பின் மனிதன் பாடு திண்டாட்டம் தான் போலும். நான் ஒரு நேர்த்தியான உலகில் வாழ்பவன். சுக ஜீவனம். தேவைகளைப் பல மடங்கு பெருக்கிக் கொண்டுள்ளேன். இந்தத் தேவைகளின் அடுக்கில் கீழே, எல்லோருக்குமான அடிப்படைத் தேவை எனக்கும் உள்ளது. இந்த அடுக்கில் ஒவ்வொரு தேவையும் கீழிருக்கும் ஒன்றைச் சார்ந்தது. ஆனால் அடிப்படைத் தேவைகளைப் பற்றிய நேரடியான பயம் எனக்கில்லை. அடிப்படைத் தேவைகளுக்கான தினசரிப் போராட்ட்ம் பலர் வாழ்வில் நடக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் நடப்பது என்ன? *** சமூகத்தில் பிற்படுத்தப் பட்டவர் தினசரி வாழ்க்கையின் பதிவுகள் இருக்கிறதா? அவை அவர்களின் பழக்கவழக்கங்களை, மகிழ்ச்சியை, அவலங்களை, குடும்ப அமைப்பை ஒரு நம்பகத் தன்மையுடன் தருகிறதா? இதைப் பதிவு செய்பவர் வெளியே நின்றுகொண்டு ஒரு பார்வையாளர் கோணத்தில் செய்கிறாரா...

Bus stop

ஒரு பேருந்து நிறுத்தத்தில் காலியிடமுள்ள பேருந்திற்காய்ப் பல நிமிடம் காத்திருக்கிறேன். பல பேருந்துகளை வேண்டுமென்றே தவறவிடுகிறேன். இப்படி எங்கும் செல்லாமல், வரும் பேருந்துகளிலும் ஏறாமல் நேரம் ஓடுகிறது. இங்கே சில நேரம் நின்றுவிட்டால் ஒரு தொல்லை - இவ்வளவு நேரம் செலவு செய்த பிறகு காலியான பேருந்தில் போகவில்லையானால் காத்திருந்து நேரம் கடத்தியதில் அர்த்தமில்லை, அதனால் கடைசிப் பேருந்தானாலும் கூட்டமிருந்தால் ஏறுவதில்லை. ஒன்றும் பயனின்றி நடந்தே செல்ல முடிவு செய்கிறேன். நேரத்தோடு போகுமிடம் போய்ச்சேரும் நிர்பந்தம் எனக்கில்லை. கூட்டமிகுதியான பேருந்தில் ஏறமாட்டேன் என்ற பிடிவாதமே ஓங்குகிறது. ஒருவேளை பேருந்துகளில் ஏறுவதில்லை என்ற தீர்மானம் முதலிலேயே இருந்திருந்தால் பல நிமிடங்களை நிறுத்தத்தில் விரயம் செய்யாமல் நடக்கத் துவங்கியிருக்கலாம். ஆனால் காலியான பேருந்து ஒன்று வரும் என்கிற நப்பாசை விடுவதில்லை. இப்படி நடந்து போகும்போது ஒரு காலியான பேருந்து என்னைத் தாண்டிச் சென்றால் தப்பான முடிவெடுத்தலுக்கு மனது என்னைக் குற்றம் சொல்லி ஏளனம் செய்கிறது. நேரத்தோடு போகும் நிர்பந்தம் இல்லையானாலும், ஒன்றும் செய்யாமல் நேரவ...

விட்டு விடுதலையாகி...

...நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போலே! தனிமனித சுதந்திரத்தின், உரிமையின் உண்மையான தேவையை உணர்ந்தவர்கள் பெண் விடுதலையின் இன்றியமையாமையையும் அறிவார்கள். ஒடுக்குமுறை என்பது உடல்வினை சார்ந்தது அல்ல - அது மனம் சார்ந்தது. அதற்கு எதிரான போராட்டம் ஒரு கருத்தாக்கத்திற்கு எதிரான போராட்டம். பெண்விடுதலை என்பது காலங்காலமாய் நம் சமூகத்தில் ஊறியிருக்கும் பெண்ணியல்புக் கருத்தாக்கங்களில் இருந்து நாம் ஒவ்வொருவரும் விடுதலையடைவதே! பெண்களுக்கென்று எழுதப்படாத வாழ்க்கை விதிமுறைகளை, கருத்தாக்கங்களை கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் அவர்கள் மீது திணிக்கிறோம். தனிமனித உரிமை மற்றும் சுதந்திரம் குறித்து நரம்பு புடைக்கப் பேசும்போது, அச்சுதந்திரம் மற்றும் உரிமைகள் பெண்களையும் உள்ளடக்கியது என்பதை மறந்துவிடுகிறோம். பிறப்பால் உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்பதும் இப்படி வலிந்து திணிக்கப்பட்ட/படுகின்ற ஒரு சமூகக் கருத்தாக்கமே. கவனமாகப் பார்த்தால் இந்த இரண்டு ஒடுக்குமுறைகளுக்கும் வேராக ஒரு பொதுவான கருத்து வன்முறை தெரிகிறது. ஒரு சமயம் தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறையை தனிமனித சுதந்திரத்திற்கு எதிராகப் பார்ப்பவர்கள், வேற...

நெறிப்படுத்தும் நட்பே,

என்னோடு நட்புப் பாராட்டுமுன் தெரிந்து கொள் - அல்ப்பத்தனம், பொறாமை, முன்கோபம், வெளி வேஷம் எல்லாங்கலந்த கலவை நான். என்னை ஒருநேரம் கடையில் நீ வாங்க நேர்ந்தால், இவைகளுக்கும் விலைகொடுத்து வாங்க வேண்டும் - தனியாய்க் கிடைக்கமாட்டேன். நான் சின்ன அறிவும் பெரிய ஆசையும் படைத்த, பல தவறுகளை இழைக்கிற, அவற்றை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கிற சாதாரணன். உந்தன் நட்புப் போர்வைக்குள் நான் வந்த பிறகு என்னுடன் வந்த என் சிறுமைகளை என் முகத்தில் எறிந்து காயப்படுத்தாதே. என் சிறுமைகள் அறிந்தும் நீ நட்பாய் இருப்பதிலேயே அச்சிறுமைகளைக் களையும் ஆசையும் உறுதியும் எனக்கு வாய்க்கிறது. எல்லாச் சிறுமைகளும் போக எனக்குள் எஞ்சி நிற்கும் மனிதத்தை நீ கண்டுகொண்டதன் அத்தாட்சி உன் நட்பு - இதுவே அச்சிறுமைகளைக் களைந்து அங்கே மனிதத்தை நிரப்புவதற்கான எனது பெரிய நம்பிக்கை. நான் இங்கே வருமுன்னரே மனத்தில் பலப்பல குப்பைகளை நிரப்பி வைத்திருக்கிறேன். இவைகளை ஒருநாளில் களைய முடியாது. மனத்துக்கண் நான் மாசிலன் ஆக ரொம்பக்காலம் பிடிக்கும். ஆனால் அதுவரை நீ என்மேல் நம்பிக்கையுடன் இரு, நெறிப்படுத்தும் நட்பே!

பெங்களூர் டயரி - 2

கடைசியில் நானும் ஒரு அகலப்பாட்டை (Broadband) இணைப்புக்கு மனுப்போட்டுவிட்டேன். ட்ராயின் (TRAI) விதிமுறைப்படி குறைந்தபட்சமாக 256 Kbps திறன் உள்ள இணைப்பே அகலப்பாட்டை இணைப்பு. ஆனால் இந்தச் சேவை வழங்கிகள் 48 Kbps திறனையே அகலப்பாட்டை என்று கூவி விற்கிறார்கள். இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கு டயல்-அப் (Dial-up) முறையில் முக்கி முக்கி 10 Kbpsஇற்கும் குறைவான திறனை அனுபவித்தவர்களுக்கு 48 கொடுத்தாலே ராஜபாட்டை. பாரத் சஞ்சார் நிகமின் (BSNL) இணைப்புத்திறன் பற்றிப் பரவலாக நல்ல கருத்தே நிலவுகிறது. இப்போது மாதம் இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு 256 Kbps என்ற திட்டம் வந்தபின்னால் தினமும் மூவாயிரம் மனுக்கள் அகலப்பாட்டை இணைப்புக்காய் இவர்கள் பெறுகிறார்கள். மொபைல் (Mobile) தொலைபேசி நிறுவனங்களில் இருந்து அகலாஇணைப்புச் (Fixed line) சேவை வழங்கிகளுக்குக் கடும் போட்டி நிலவுகிறது. இம்மாதிரி தரை (Land Line) இணைப்புக்களை மொபைல் இணைப்புக்கள் என்றோ எண்ணிக்கையில் மிஞ்சி விட்டன. அதுவும் அடிப்படையான தொலைபேசும் சேவைகள் மட்டுமல்லாமல், குறுஞ்செய்திகள், படக்குறுஞ்செய்திகள் (SMS, MMS) என்று பற்பல சேவைகள்களை மொபைல் இணைப்பு வழங்கு...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

கோபச் சுழற்சி

மனத்திற்கு ஒப்புதலில்லாத நிகழ்வு ஒன்று கண்முன்னே நடக்கிறது. இந்நிகழ்வுகளை வருமுன் காக்க முடியாது - வாழ்க்கையும் அதன் நிகழ்வுகளும் எதிர்பாராத பல தருணங்களின் சேர்க்கை தானே. இந்நிகழ்வு மனத்திற்குச் சோர்வு தருவதுடன் தன் வயமின்றி நடக்கும் இவைகளைக் கட்டுப்படுத்த முடியாதது குறித்த ஒரு இயலாமை குடி கொள்கிறது. இயலாமை கோபமாக வெளிப்படுகிறது. கோபம் அறிவுக்கு ஒரு கும்மாங்குத்து வைத்து, அதை மயக்கமடையச் செய்கிறது. தாற்காலிகமாய் மனத்தை அறிவு பிரிகிறது. இந்நிலையில் கோபத்தின் பிடியில் மனத்திற்குப் பித்துப் பிடிக்கிறது. உள்மனத்தின் எல்லாச் சிறுமைகளையும் மீட்டு அது மனத்திரையில் காட்டுகிறது. அறிவின்றி ஏதேதோ அர்த்தமற்ற சூளுரைகளைச் செய்து, மீண்டும் இந்நிலைக்கு ஆளாவதில்லை என்று உறுதி கொள்வது போல் நடிக்கிறது. சிறுமைகள் எண்ணத்தில் வலம் வந்த பிறகு, அதன் காரணமாக எழும் சுய பரிதாபத்தில் மனம் அமிழ்கிறது. எல்லாத் தவறுகளையும் சாட்டின்றி ஒப்புக்கொள்வதுடன் 'இந்தச் சிறுமைகளின் வடிவமே நான்' என்று இறுமாப்புக் கொண்டு உறுதியடைவது போலவும் பாசாங்கு செய்கிறது. இப்படியான ஆட்டத்தில் மனச் சோர்வு உடற்சோர்வையும் உண்டாக்குகிறத...

என் தமிழ் எழுத்து மேம்பட...

"கூடியவைரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது" - தமிழ் உரைநடை பற்றி பாரதியார் பாரதியின் உரைநடையில் இருக்கும் எளிமைக்கும், நேரடியான சம்பாஷணை உத்திக்கும் ஒரு அதி வசீகரம் இருக்கத் தான் செய்கிறது. இந்த வித்தையின் எளிய இலக்கணக் குறிப்பாகவே இந்த மேற்கோள் பயன்படும் என்று நினைக்கிறேன் - மட்டுமல்லாமல், இந்த எளிய குறிப்பு தெளிவாக எழுதவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது. என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது. சின்...

Procrastination

மனம் பார்க்க விரும்புவதையே கண் பார்க்கிறது. கொட்டை எழுத்தில் வருமான வரி Returns சமர்ப்பிக்கக் கடைசித் தேதி நீட்டிப்பு என்று இந்தச் செய்தித் துணுக்கில் படித்த போது, விபரங்களையும் கொஞ்சம் கவனமாகப் பார்த்திருக்கலாம். அப்படிப் பார்த்திருந்தால் அந்நீட்டிப்பு குஜராத், மஹாராஷ்டிர மாநிலங்களுக்கு மட்டுமே என்ற உண்மை தெரிந்திருக்கும். இப்போது கடைசித் தேதியைத் தவறவிட்டாயிற்று. எல்லாம் ஒரு மெத்தனம் தான் - என்ன ஆனாலும் ஒரு மாதத்திற்காவது இதை நீட்டிப்பார்கள் என்று. வருமான வரியைச் சரியாகக் கட்டியும், உரிய நேரத்திற்கு இதைச் சமர்ப்பிக்காததில் அபராதம் கட்ட வேண்டி வரும் என்று நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அபராதம் இருக்கட்டும். அப்புறம் பார்க்கலாம் என்று ஒரு வேலையை ஒரு காரணமும் இன்றித் தள்ளிப் போடுவதைத் தடுக்க என்ன செய்வது? Procrastination என்ற இதை வெற்றி கொள்வது எப்படி என்று ஒரு புத்தகம் கூட வாங்கி விட்டேன். வழக்கம் போல, இதைப் படிப்பதையும் ஒத்தி வைப்பு செய்தாயிற்று! எந்த மாறுதலையும் வெளியிலிருந்து திணிக்க முடியாது. மாற்றத்தின் தேவை உள்ளிலிருந்து வர வேண்டும். புத்தகங்கள் படித்தும் யாதொரு பிரயோஜனமுமில்...

ஒரு வாழ்க்கைக் குறிப்பு

திங்கள் முதல் வெள்ளிவரை நாள்தொடங்கி முன்னிரவு வரை அலுவலக அர்ப்பணிப்பு. காபி டம்ப்ளரைக் கழுவாததில் இருந்து, அம்மாவை 'செக்கப்'புக்கு கூட்டிப்போகாதது வரைக்கும் இது தான் சாக்கு. வேறெதற்கும் நேரமின்றி வேறெதிலும் நாட்டமுமின்றி உழலும் பொழுதுகள் .இன்று பேசுவதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும் சம்பாஷணைகளை பின்னொருநாள் நடத்த நேரும்போது உறுப்பினர் குறையலாம். அன்பை, கவலையை, உரிமையை, பரிவை வீட்டில் இப்போது நிகழும் சின்ன ஊடாடல்களுக்குள் புகுத்துவது கடினம்; சொல்லாதவை தேங்கி கனக்கும் மனம். எல்லாம் இருந்தமைந்த பின்பு வாழ்க்கையை விரும்பிய படி வாழவென்று, அலை ஓய்ந்தபின் கடலிலே குளிக்கும் ஆசை. மறந்துவிட்ட நண்பனின் திருமண அழைப்புக்கு மன்னிப்பு மடலேனும் எழுதலாமே என்று தோன்றும் போது வருகிறது அவன் மகளின் முதல் பிறந்தநாளுக்கான அழைப்பு. இதுவும், தாடியில் தென்படும் நரைகளுமே ஒன்றும் சாதிக்காத கால ஓட்டத்தின் அத்தாட்சிகள். தினமும் சுவர்க்கோழி கத்தும் வரை டிவி முன் குத்த வைத்து, 'சனி, ஞாயிறு ரெண்டு நாள் தான் கிடைக்குது தூங்க - பாவம்' என்று தூங்கிய நேரம் போக வாரயிறுதி வாரயிறுயாய்த் தீரும் வாழ்க்கை.

குழந்தை மனசுக்காரன்

'மானத்தைக் காக்கவோர் நாலு முழத்துணி வாங்கித் தர வேணும் தானத்துக்கு சில வேட்டிகள் வாங்கித் தரவும் கடனாண்டே ! ' (கண்ணன் என் ஆண்டான்) ஹிந்துவில் நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன்னால் தொண்ணூறு வயது நிரம்பிய பெரியவர் ஒருவர் பாரதியுடனான ஒரு பரிச்சியத்தைப் பகிர்ந்து கொண்டார். (சுட்டியைத் தேடித் தோற்றுவிட்டேன் - இதை எழுதியவர் பெயர், மற்றும் விபரங்கள் நினைவில்லை. சம்பவம் மட்டும் மனதிற்பதிந்து விட்டது) இவரின் சிறுவயதில் திருவல்லிக்கேணியில் பாரதியின் வீட்டை அடுத்த தன் உறவினர் (மாமா என்று நினைவு) வீட்டில் சில காலம் இருந்திருக்கிறார். ஒருநாள் செல்லம்மாள் இவரின் மாமியிடம் ஏதோ கடன் கேட்டு வரும்போது, பாரதி அந்த மாதத்திற்கான செலவிற்கு சம்பளப் பணம் ஒன்றும் தரவில்லையென்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டிருக்கிறார். மாமா உடனே பாரதியிடம் சென்று விசாரிக்கிறார். பாரதி அன்று அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது ரிக்ஷாவில் வந்திருக்கிறார். ஒரு திசை திருப்பு: பாரதியார் கதைகள் என்ற திரட்டு கிடைத்தால் கட்டாயம் படியுங்கள். அவர் தினசரி வாழ்க்கையை அறியத்தரும் ஒரு சின்ன ஜன்னல் இது! பல சுவாரசியமான விடயங்கள் உள...

பிலாக்கணம்

இரண்டு மாதங்களுக்கு முன்னால் அது நிகழ்ந்தது. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் என் மோட்டார் சைக்கிள் யாரோ கழுத்தைத் திருகியது போல நின்றுவிட்டது. கடந்த ஒருவருடமாகவே அவ்வப்பொழுது சின்னதாக பிரச்சனைகள் கொடுத்து வந்தாலும், இப்படி ஒன்றும் செய்ய இயலாத படிக்கு நின்றதில்லை. ஐயாயிரம் ரூபாய் கொடுத்துப் பழுது பார்த்தேன். ஒரு மாதம் ஓடியபின் மீண்டும் கழுத்து நெரிபட்டது போல நின்று விட்டது. இதை இன்னும் பழுது பார்த்து வைத்துக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலும், அது பண விரயமே என்று தோன்றுகிறது. பத்து வருடங்கள், அறுபதினாயிரம் கிலோமீட்டர்கள்... மிகவும் நன்றி கெட்டவனாக உணருகிறேன் - இதைப் பிரிவதற்குத் தயாராகிவிட்டேன். ஒரு அற்புத விளக்கு கையைவிட்டுப் போவது போலவும், இதனால் இதுவரை கிட்டிய அதிட்டங்களும் இனிமேல் கிட்டாது போலவும் தோன்றுகிறது. எல்லா நல்ல விடயங்களுக்கும் முடிவு உறுதி போலும். இதைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம் பழைய வேகத்தையும் உற்சாகத்தையும், வேட்கையையும் மீட்க முடியும் என்று நம்புகிறேன். எவ்வளவு முயன்றாலும் மீண்டும் கிட்டுமோ இளமை? (எனக்கும் அதற்கும்) வாழ்க்கையின் கடிவாளமிப்படாத பகுதியின் முடிவை...

செத்த பாம்பு

நேற்று இரவு பொதிகையில் 'அலசல்' நிகழ்ச்சியில் அசோகமித்திரன் செவ்வி. 'அந்த'க் கேள்வியும் கேட்கப்பட்டது. ஏதோ வழவழாவென்று எதையோ சொல்லிவைத்தார், பாவம். நாய்ப் பேச்சிற்குப் பிறகு ஜெயகாந்தன் நிலைமையும் மோசமாகிவிட்டது. ஈழநாதன் ஜெயகாந்தனின் இந்தப் பேச்சை தூசு தட்டி எடுத்திருக்கிறார். ஜெயகாந்தனும் பாவம் தான். இலக்கியவாதிகள் இன்று இரு தளங்களில் இயங்குபவர்கள் என்று தோன்றுகிறது. நிஜமான, சுய உணர்வுடன் இயங்கும் ஒரு சகஜ நிலைத் தளம். இன்னொன்று, அவர்களுக்கு வசப்பட்ட ஒரு கலையை, ஒழிந்த நேரத்தில் பயிலவும், அதனால் மனநிறைவும் ஓய்வும் பெறவோ, பின்னர் அதையே வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யவோ இயங்குவது - ஒரு கற்பனைத் தளம். அவர்களின் வாழ்க்கை நெறி, சமூக விழுமியங்கள் பற்றிய பார்வைகளை அவர்கள் படைப்புக்களில் அவ்வப்போது முன்வைப்பார்கள். வாசகனுக்கு ஒரு எழுத்தாளனின் இவ்வகை வெளியீடுகள் அந்த எழுத்தாளன் சார்ந்துள்ள நெறிகளை, விழுமியங்களைக் குறித்த ஒரு பார்வையை, காலப்போக்கில் உருவாக்கிக் கொள்ளப் பயன்படுகிறது. இது வாசகன் உருவாக்கிக் கொள்ளுகிற கருத்தேயன்றி எழுத்தாளன் சார்ந்த நெறி குறித்த துல்லியமான கணிப்பன்று. ...