Tuesday, January 03, 2006

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா?

ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு.

இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டிலும், செய்யாமல் விட்டால் என்ன வந்துவிடுமோ என்கிற பயத்தில் உந்தப்படும்போது, கடைபிடிக்கப்படும்போது, பொதுவில் தம்மீதும் பிறர்மீதும் நம்பிக்கையிழந்த தன்மையையே குறிக்கிறது என்று நினைக்கிறேன். அன்புவார்த்தைகளை ஒரு சடங்காய் நீ சொல்லக் கேட்பது பெரும் அவலம்! எந்த நிர்பந்தமும் இல்லாத இயற்கையான வெளிப்பாடே நான் விரும்புவது. உணர்வுகள் வார்தைகளை நம்பியில்லை - நாம் இப்போது வெறும் வார்த்தைகளை நம்பியிருப்பதிலே இந்தத் தொல்லை துவங்கியுள்ளது. ஆனால் சில நேரம் மௌனத்தையும் நாம் புரிந்து கொள்ளுதல் நன்று - வார்த்தைகளைக் காட்டிலும் உயிருள்ளவை அவை என்று இப்போதெல்லாம் எனக்குத் தோன்றுகிறது.

9 comments:

சத்தியா said...

சில நேரம் மௌனத்தையும் நாம் புரிந்து கொள்ளுதல் நன்று - வார்த்தைகளைக் காட்டிலும் உயிருள்ளவை அவை என்று இப்போதெல்லாம் எனக்குத் தோன்றுகிறது.

சரியாகத்தான் சொல்லி இருக்கிறீங்கள்.

ஒரு பொடிச்சி said...

நல்ல உரையாடல்..
ஆமா சம்பிரதாயமான சில வார்த்தைகள் (சடங்குகள் போல) பொழுதுகளில் தேவையாவே இருக்கின்றன.

ஆனா
மௌனம் = தனிமை(யால்) என்றால் - தனிமைக்கு உயிரில்லை (Or அது உயிருள்ள பிணம்!).
உரையாடல்கள் சாத்தியமான இடத்தில்தான், மௌனம் ஆழமாக புரிந்துகொள்ளப்படவேண்டியது என நினைக்கிறேன்.
தொலை தூரங்களிலோ, நிறுவனப்பட்ட குடும்பம் போன்ற அமைப்பிலோ நபருகளுக்கிடையில் ஏற்படுகிற மௌனம் glorify பண்ண முடியாதது.

Kannan said...

நன்றி சத்தியா.


பொடிச்சி,
//உரையாடல்கள் சாத்தியமான இடத்தில்தான், மௌனம் ஆழமாக புரிந்துகொள்ளப்படவேண்டியது என நினைக்கிறேன்.
தொலை தூரங்களிலோ, நிறுவனப்பட்ட குடும்பம் போன்ற அமைப்பிலோ நபருகளுக்கிடையில் ஏற்படுகிற மௌனம் glorify பண்ண முடியாதது.//

அருமை. இன்னும் தெளிந்தேன், நன்றி.

சுதர்சன் said...

//மௌனத்தையும் நாம் புரிந்து கொள்ளுதல் நன்று - வார்த்தைகளைக் காட்டிலும் உயிருள்ளவை அவை //

அருமை. ஆனால் எதிரிலுள்ளவருக்கு அது புரியாமல் போவதுதான் பிரச்னையே. :)

Kannan said...

நன்றி சுதர்சன்.

Suka said...

நன்று கண்ணன்.. வார்த்தைகள் வரையறுக்கப்பட்டவை.. அவற்றால் ஒரு போதும் உணர்வுகளைத் துல்லியமாய்க் காட்ட முடியாது.. எழுத்தை விட .. ஓவியங்களும் ..அவற்றைவிட நாடகங்களும் உயிரோட்டமாய் ஓரளவுக்கு துல்லியமாய் உணர்வை வெளிப்படுத்துவதே இதற்கு சாட்சி.

உங்களின் கருத்தே நான் இங்கே http://sukas.blogspot.com/2005/12/blog-post.html எழுதியதின் கருத்தும். ஆனால் சிலரை வேறு மாதிரியாகப் பாதித்து விட்டதாக உணருகிறேன்.

சுகா

Kannan said...

நன்றி சுகா.

leanordjackson1145549207 said...

I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. So please Click Here To Read My Blog

http://pennystockinvestment.blogspot.com

மாயவரத்தான்... said...

About ur blog in today's dinamalar...

http://www.dinamalar.com/2006Mar04/flash.asp

In Thenkoodu webportal...

http://www.thenkoodu.com