Wednesday, February 10, 2016

நேற்றை கனவு

யாரோ ஒரு பையன். அவனுக்கு நான் பூகோளப் பாடம் சொல்லிக்கொடுத்தில் நிறைய மதிப்பெண்கள் வாங்கிவிட்டான். எனக்குக் காட்டுவதற்காக அவன் 'ரிப்போர்ட்'டை என்னிடம் கொடுத்தான்.

மீனாவின் கிறுக்கலுக்காக நான் அவளுக்குக் கொடுத்த 80 பக்க நோட்டு மாதிரி இருந்தது. பக்கங்களைப் புரட்டுகிறேன் - இவன் எவ்வளவுதான் வாங்கியருப்பானென்று பார்ப்பதற்காக. என்னவோ குறிப்புகள், கிறுக்கல்கள் என்று பக்கங்கள் தீர, மதிப்பெண் பட்டியல் வரவேயில்லை.

அப்போது யோசித்தேன்:

"இதுவே கனவு. இதிலே நாம் 'நினைத்த' மதிப்பெண் இருப்பதாக வரவேண்டுமெனில் கனவினின்றும் வெளிவர வேண்டும். அதனால் அந்தப்பக்கம் எனக்குக் கிட்டப்போவதில்லை. மேலும் உயரத்திலிருந்து விழுதல் போல இந்தத் தீராப் பக்கங்ககளைப் புரட்டுதல் என்பது கனவினின்றும் மனம் விழித்துக்கொள்ளச் செய்யும் ஓர் உத்தி"

உடனே கண்விழித்து எழுந்துவிட்டேன்.

Wednesday, July 01, 2015

மருந்து

பெங்களூர் ஜெயநகர் மூன்றாம் பிளாக்கின் சாலைச் சந்திப்பில் (இங்கே எல்லாமே 'சர்க்கல்' தான்) நாகார்ஜுனாவுக்கும் மூலைப் பெட்டிக்கடைக்கும் நடுவே இருந்தது மஞ்சுநாதா (என்று நினைக்கிறேன்) ஃபார்மசி. பழைய பெயர்ப்பலகை. கடையினுள்ளே அப்போத்திக்கரிகள் காலத்து மேசை, கண்ணாடி/மரக்கூண்டுகளுக்குள் மருந்துகள் என்ற அமைப்பு. மேசையின் அருகிலே இருக்கையில் அறுபதை நெருங்கும் வயதுடையவர் என்று நாம் ஊகிக்கக்கூடிய பெரியவர். மெலிந்த தேகம், அதிக உயரமில்லை, வெளுத்த தலை முடி, சின்னதாக கிராப் வைத்திருப்பார். கையில் விரித்து வைத்த ப்ரஜாவாணி பத்திரிகையை படித்த வண்ணம் இருப்பார்.

ஒரு முறை அவசரமாக மாத்திரை வாங்க வேண்டியிருந்ததில் மருந்தகம் நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன். இந்தக் கடை தென்பட்டது - வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறதே என்று கடையில் மருந்தின் பெயரைச் சொல்லிக்கேட்டேன். பத்திரிக்கையினின்றும் தலையை எடுத்து சிரித்துக் கொண்டே சொன்னார் "இங்கே கிடைக்காது (அருகில் உள்ள பெரிய) மருந்தகத்தில் கிடைக்கும்". அப்போதிருந்த அவசரத்தில் ஓடிவிட்டேன். ஆனால் அங்கே ஒரு மருந்தகம் இருப்பதை மனம் குறித்துவைத்துக் கொண்டது.

அப்புறம் மருந்து வாங்க வேண்டுமானால் அதே கடைக்குச் செல்ல ஆரம்பித்தேன். அடுத்த முறை போனபோது கடைக்காரர் வயதையொத்த ஒருவர் கடைக்குவெளியே மடக்கு நாற்காலி போட்டு உட்கார்நதிருந்தார். கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தார். மருந்தைச் சொல்லிக் கேட்டதற்கு இம்முறை வெளியே உட்கார்ந்திருந்த நண்பரே மருந்து அங்கு கிடைக்காதென்று சொல்லி அருகில் இருந்த பெரிய மருந்தகத்திற்கு வழிகாட்டினார்.

வியப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. அப்புறம் மருந்து வாங்க நேர்ந்தால் அந்தக்கடைக்கு முதலில் சென்று கேட்பதும் (இருக்காது என்று தெரிந்தும்) அப்புறம் வேறுகடையில் மருந்து வாங்குவதும் வழக்கமாயிருந்தது. அங்கே வசித்தவரையில் அந்தக்கடையில் எதுவும் வாங்கியதில்லை - எதைக் கேட்டாலும் புன்னகையுடன் இல்லையென்ற பதிலே வரும். இருந்தும் அங்கே மீண்டும் மீண்டும் செல்ல விருப்பம் இருந்தது.

மிகவும் விரைவாக எதையோ நோக்கி எல்லோரும் ஓடிக்கொண்டிருக்க, அந்தக் கடையும் அங்கு சேரும் கடைக்காரரின் நண்பர் கூட்டமும் நவீன பெங்களூர் காட்சிக்கு முரணாகத் தோன்றியது. அருகிலிருந்த நாகார்ஜுனாவில் கூட சாரைசாரையாக மக்கள் வந்து அவசர கதியில் தின்று போய்க்கொண்டிருந்தனர். பெட்டிக்கடையிலும் டீ, சிகரட்டு என்று மனிதர்கள் வந்துபோய்க்கொண்டிருக்க, நடுவில் அந்த மருந்துக்கடை அமைதியாக ஆளரவமின்றி இயங்கிக்கொண்டிருந்தது.

மருந்துக்கடை பெரியவர் பற்றி எதுவும் தெரியாதானாலும் இப்படியாக அனுமானித்தேன்:
சாப்பாடு, இருப்பிடம், எளிய வாழ்க்கைக்கான வருமானத்தை அவர் சேமித்திருக்க வேண்டும். தினமும் கடையைத் திறந்து வைத்திருப்பது, ப்ரஜாவாணி படிப்பது, நண்பர்களுடன் அளவளாவிக்கொண்டு தேநீர் குடிப்பது என்பன தவிர்க்கமுடியாத பழக்கங்களாகி விட்டிருக்கவேண்டும். திரும்பி வராத பழையநாட்களின் வசந்தத்தையும், இளமைக் காலத்தின் உயிர்ப்பையும், நிறைவான, நிதானமான, வேட்கைகளற்ற வாழ்க்கையின் பழைய சுவடுகளையும்  இந்தப் பழைய மேசையும், மருந்து வாசம் கமழும் மரக்கூண்டுகளும், கடைக்கதவின் மரப்பட்டிகளும், மேசைமேல் பதித்த கண்ணாடிமூலம் தெரியும் பழைய ஒற்றை ரூபாய் நோட்டும் பெரியவருக்கு நினைவூட்டுவதாக இருக்கக்கூடும்.

இவரைப் பார்க்கப் பொறாமை மேலோங்கும் - எனக்கான பழைய மருந்துக்கடைக் கல்லா, மேசை நாற்காலி என்கிற விழைவும். கண்ணாப்புக் கட்டிய குதிரைபோல வாழ்க்கையின் எளிய மகிழ்ச்சிகளை மறந்து எதையோ நோக்கி ஓடுகிறோம். சன நெரிசலில், அவசரங்களுக்கு மத்தியில், ஒரு நிமிடம் நின்று நிதானித்துத் தேடினால் இந்த மருந்தகம் போன்ற எளிமை மிளிரும் ஒன்று கண்ணுக்குப் புலப்படலாம். அதைக் கண்டுகொண்ட பின்னர் வாழ்நாட்களில் உணரப்போகும் அமைதியை, மகிழ்ச்சியை பெரியவரின் சிரிக்கும் கண்கள் எப்போதும் உணர்த்தும்.

நான் அந்தப் பெரியவர் வாழ்க்கையையே காதலிக்கிறேன். நீங்கள் கேட்கும் மருந்து இங்கு கிடைக்காது; ஆனால் பூரண குணம் கிட்டும் வாய்ப்பு இருக்கிறது.

Tuesday, March 31, 2015

அழகாயிருப்பது

உலகின் புகழ்பெற்ற படைப்பாளிகள் சிலரின் தினசரி ஒழுங்குகளை இங்கே கொடுத்திருக்கிறார்கள். நானும் இம்மாதிரி ஏதாவதொன்று ஆக ஆசைப்படுவதால் ஆர்வத்துடன் படித்தேன். இதிலே எல்லாவற்றையும் விட என் கவனத்தைக் கவர்ந்தது விக்டர் ஹியுகோவின், தினசரி முடிதிருத்துபவரிடம் போகும் வழக்கம்.

கடந்த இரண்டாண்டுகளில் முடி வெட்டிக்கொள்ளப் போனால் ஒன்று, இரண்டு என்று மண்டையைக் காட்டி இலக்கம் சொல்வது பழகியிருந்தது. இயந்திரத்தில் அந்த இலக்கத்துக்கேற்ற வில்லையைப் போட்டு மழித்தால் பத்து நிமிடங்களில் வேலை முடியும். உபரியாகப் பல வசதிகளும்: இரண்டு மாதங்களுக்கு முடிவெட்டிக்கொள்ள வேண்டியதில்லை;  தூங்கியெழுந்தவுடன் பரட்டைத் தலையை ஒழுங்கு செய்ய நேரம் எடுத்துக் கொள்ளாமல் காற்சட்டையை இழுத்து மாட்டிக்கொண்டு உடனே பால் வாங்கவோ, மகளைப் பள்ளிக்கூடத்தில் விடவோ ஓடலாம்; பயணங்களில் சீப்பு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியதில்லை; கண்ணாடி பார்க்க வேண்டாம்; இரவுப்பயணங்களில் தூக்கத்துக்கு நடுவே தலையைக் கோதி சரிசெய்ய வேண்டாம்; இப்படிப் பல...

இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் வீட்டிலே இதற்கு பலத்த எதிர்ப்பு உண்டு. ("ஏன் இப்படிக் கரண்டீட்டு வர்ற? பாக்க சகிக்கல", தொடங்கிய கண்டனங்கள்)

ஆனால்  முடியை எனக்குத் தேவையான அளவு 'வெட்ட' வைப்பது இன்னும் கடினமாக இருந்தது. "இதுக்கு மேல வெட்னா நட்டுகிட்டு நின்னுக்கும்" என்று தொடங்கும் அறிவுரைகள். எப்படிச் சொல்லிக்கொடுத்து வெட்டச் சொன்னாலும் எனக்கு மகிழ்ச்சி தரும் வகையில் யாரும் முடியைக் 'குறைத்த'தில்லை. பக்கவாட்டில் குறைத்து உச்சந்தலையில் தேன்கூடு மாதிரி முடியிருக்கும்படிச் செய்துவிடுவார்கள். வீட்டுக்கு வந்தால் "இதுக்கா இவ்வளவு நேரம்? ஒரு வாரத்துல மறுபடியும் காடு மாதிரி வளரப்போகுது" என்று பின்னூட்டம் கிடைக்கும். 

இம்முறை முடிவெட்டிக்கொள்ளும்போது    'கரண்ட' வேண்டாம் என்று ஆனமட்டும் முடியை வெட்டிக் குறைக்கச் சொன்னேன். இந்தி மட்டுமே தெரிந்த இளைஞன் ஒருவன் வெட்டிவிட்டான். அவனுக்குப் பலமுறை சொல்லியும் அரைமணி நேரம் தலையின் மேற்பகுதியில் நுனிமுடியையே வெட்டியிருந்தான். கோபம் வந்தாலும் திடீரென்று விக்டர் ஹியுகோவின் நினைவு வந்தது.  அவர் தினமும் முடியைத் திருத்திக் கொண்டு தன் தலைமயிரையும் முகத்தையும் என்றும் சீராக வைத்திருக்க விழைபவர் என்று புரிந்துகொண்டேன்.  'முடி இறக்கும் இடம்' என்றோ 'இங்கே மொட்டையடிக்கப்படும்' என்றோ இல்லாமல் (அன்றைக்கு) ரஜினி, கமல் படங்களைப் போட்டு 'முடி திருத்தும் நிலையம்' என்றும் 'ஆண்கள் அழகு நிலையம்' என்றும் தட்டி வைத்திருப்பதன் பொருள் எனக்கு காலம் கடந்து விளங்கியது.

தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற விழைவு ஆரோக்கிய மனநிலையின் அறிகுறி என்று எங்கோ படித்திருக்கிறேன். நடிகர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்களிடம் ஊடாடும்போது ஒருபோலவே தம்மைக் காட்டிக் கொள்கிறார்கள். பரட்டை / மொட்டைத் தலையும், நான்குநாள் தாடி / எச்சில் ஒழுகும் வாயோடு யாரும் காட்சிதருவதில்லை. இவர்கள் மட்டுமல்லாமல் பலருக்கும் இந்தப் பழக்கமும் ஒழுங்கும் இருக்கின்றன.

இதையும் நினைத்துப் பார்த்து நேர்த்தியாக என்னை எப்போதும் காட்டிக்கொள்ளும் விழைவு எனக்கில்லையோ என்று யோசித்தேன். இருக்கிறது, ஆனால் விக்டர் ஹியுகோ போலவல்லாமல் நான் இதற்குக் குறைந்தபட்ச முயற்சியும் எடுப்பதில்லை.

அது ஏனென்று யோசிக்கையில் முதலில் நினைவுக்கு வருவது கலைமணி. சிறுவயதில் என்னை முடிவெட்டிக்கொள்ள இங்குதான் அனுப்புவார்கள். எப்போது போனாலும் (அம்மா கேட்டுக்கொண்டபடி) பயங்கர 'சம்மர் கட்' (வானிலை எப்படியிருந்தாலும்) அடித்து உரித்த கோழி மாதிரி என்னை ஆக்கிவிடுவதில் கலைமணியின் பெயரில் இருக்கும் 'கலை'யைப் பற்றி வெகுநாட்கள் நான் யோசிக்கவில்லை. (அவர் பிற்காலத்தில் கலைமணி சலூனை மூடிவிட்டு இறைச்சிக்கடை நடத்தினார் என்று தெரிந்ததும் அவரை நினைத்து மகிழ்ச்சி கொண்டேன்)

முடி வெட்டுவதன் நோக்கம் கொடுக்கும் காசுக்கு அதிகபட்ச சேவையைப் பெறுவது; குறைந்தது ஒரு மாதத்துக்கேனும் மறுபடி வெட்டவேண்டிய தேவையில்லாமல் இருப்பது. இதுவே என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். பதின் வயதுகளிலும், இருபதுகளிலும் மிகவும் மெலிந்த உடல்வாகு கொண்டிருந்ததில் தாழ்வு மனப்பான்மையிருந்தது. என் வயதொத்தவர்கள் உடுத்திய உடைகள் பலவும் எனக்குப் பொருந்தா. மடித்துவிட்ட முழுக்கைச் சட்டையை காற்சட்டைக்கு வெளியே இழுத்துவிட்டு உடுத்தியபடிதான் ஐந்தாண்டுக் கல்லூரிப் படிப்பு கழிந்தது. அழகுபடுத்திக்கொள்வதில் அக்கறையற்றவனாக என்னைக் காட்டிக் கொள்ள முயன்று அதுவே பழக்கமும் ஆகிவிட்டது. ஒரு வேளை இதனால்தான் முடி 'குறைக்காத்தில்' எனக்குக் கோபம் வருகிறதோ என்று எண்ணிக்கொண்டேன்.

விக்டர் ஹியுகோவின் இளமைக்காலம் எப்படியிருந்திருக்கும் என்று தெரியாது. ஆனால் முடிவெட்டிக்கொண்ட பின்னால் வீட்டிற்கு வந்து உடனே குளிக்கவேண்டும் என்பது உட்பட சலூனுக்குப் போவதற்கு நிபந்தனைகளோ கட்டாயமோ இருக்கவில்லை என்பது எனக்குப் பெருவியப்பு.

முடி வெட்டி முடிந்ததற்கான அறிகுறியாய் என்னைத் தூசுதட்டி ஒரு கண்ணாடியை எனக்குப் பின்புறமாக வைத்துக் காட்டினான். புதிதாய் என்னைப் பார்த்துக் கொண்டேன். அளவாக முடியை வெட்டியதில் தலை அடக்கமாகவே தெரிந்தது. இனி (மீதமிருக்கும்) முடியை ஒழுங்கு மாறாமல் திருத்திகொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். பரட்டைத் தலையோடு என்னைப் பார்க்க நேர்ந்தால் ஏனென்று கேளுங்கள்.

Tuesday, March 10, 2015

தமிழில் கிரந்தம் தவிர்ப்பது பற்றி...

தமிழ் எழுதுவதில் இயன்றவரை கிரந்தம் தவிர்க்கலாம் என்று முடிவெடுத்திருந்தேன். இது தமிழ் வெறியினாலோ பிறமொழிக் காழ்ப்பினாலோ உந்தப்பட்டதல்ல. தற்போது புழக்கத்தில் இருக்கும் தமிழ் மொழி தமிழல்லாத மொழிகளின் பல சொற்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இது பல்லாண்டுகளாக இயல்பாக, பையப்பைய நடந்தது - யாரும் திட்டமிட்டுச் செய்யவில்லை என்பது தெரிந்ததே. இம்மொழியின் தொன்மையையோ, செம்மைத் தன்மையையோ, பிற பெருமைகளையோ முதன்மைப்படுத்தாமல், ஒரு தனித்தன்மை வாய்ந்த, (பிறமொழிகளைப்போலவே) நம் தாய்மொழி என்கிற அளவில், நாம் மறந்துவிட்ட தமிழ்ச்சொற்களை ஞாபகப் படுத்திக்கொள்ள வேண்டும், அவற்றை நம் புறக்கணிப்பினின்றும் மீட்கவேண்டும் என்பதே என் குறிக்கோள்.

கிரந்தத்தை ஒழித்தலே நம் கடன் என்று எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்த முனைவதில் எனக்குச் சில மனத்தடைகள் உண்டு. அவற்றில் முதன்மையானது பெயர்களைத் தமிழ்ப்படுத்துவது. நாம் நம் பெயர்களைப் பெருமையோடு தாங்குபவர்கள்; தமிழ்ப் பெயர்களையும் பிற பெயர்களையும் பெயருக்குச் சொந்தக்காரர் எழுதுவது போலேயே எழுதவேண்டும் - அது கிரந்தம் கலந்ததானாலும்.  எழுத்துப்பிழைகளையும் ( இருப்பதாக நாம் கருதினாலும்) இலக்கணமீறல்களையும் நாம் பொருட்படுத்தலாகாது. ரவியை இரவி என்று விளிக்க இரவி தன் பெயரை அவ்வாறு அறிவித்திருக்க வேண்டும். இதை மீறி பெயர்களில் கிரந்தம் தவிர்ப்பதென்பது அப்பெயர்களைச் சிதைப்பதும் பெயர் தாங்கியவர்களை அவமதிப்பதும் ஆகும். மொத்தத்தில் பெயர்களுக்கு மொழி கிடையாது என்பது என் துணிபு. மகேஷை மகேசு என்றும், ராஜேஷை இராசேசு என்றும் ஜெயமொகனை செயமோகன் என்றும் விளித்ததற்கு இங்கே மன்னிப்புக் கோருகிறேன்.

அடுத்ததாக, பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போதும் கிரந்தக் கலப்பு இருக்கலாம் என்பது என் நிலைப்பாடு. இம்மாதிரி (கிரந்த) எழுத்துச் சேர்க்கைகள் பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது ஏற்படும் ஒலிப் பற்றாக்குறையைப் போக்கவே என்பதை நினைவில் கொள்ளலாம். ( தமிழரல்லாதோர் சிலர் இவ்வொலிப் பற்றாக்குறையை தமிழின் குறைபாடாகச் சொல்லுவர். தமிழிலேயே பேச, எழுத, தமிழெழுத்துகள் போதுமானவை). இதைச்சொல்லும்போது சிங்கப்பூர் தெம்பனீஸ் கிழக்குச் சமூக மன்றத்தில் "கேப்பி தீபாவளி" என்று வைத்திருந்த தட்டி நினைவுக்கு வருகிறது. பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தும்போது அதற்கு இணையான தமிழ்சசொல் இல்லாத / தெரியாத நிலையில் மட்டுமே உகந்தது என்று நம்புகிறேன். இப்படியொரு நிலை வாய்க்கும்பொழுது  நல்ல கலைச்சொல்லகராதியை நாடலாம்.

மற்றபடி கிரந்தம் கலக்காத பிறமொழிச் சொற்கள் தமிழிலே ஏராளமாகப் புழங்குகின்றன. அவற்றை ஒதுக்கி அதற்கான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவது (கண்மூடித்தனமான) கிரந்த எதிர்ப்பைக் காட்டிலும் தமிழுக்கு வளம் சேர்க்கும் எனபதும் எனக்கு ஏற்பட்ட தெளிவு.

லாகவம், இலகுவாக, மரணம், பூமி, நதி, ஆகாயம், சிங்கம், சாவதானம், அனாவசியம், அவசியம், அனாயாசம், ஆயாசம், சந்தேகம், பலம், நட்சத்திரம், ராசி, நாடகம், அகம், அவையம், நீதி/அநீதி, அநேகம், நகல், அசல், யதார்த்தம், வீதம், வீரம், மாதம், மதம், வருடம், இச்சை, அனிச்சை, தன்னிச்சை, வாக்கு, வாதம், அர்த்தம், சாமர்தியம், சமர்த்தம், சாவகாசம், சகவாசம்

என்ற சொற்கள் உடன் நினைவுக்கு வருவன. இப்பணியில் இணையத்தில் சில குழுக்கள் இணைந்து செயற்படுகின்றன என்றறிவேன். அவர்களுக்கு என் அன்பும் பாராட்டுகளும். முடிந்தவரையில் அவர்களுடன் இணைந்து என்னாலானதைச் செய்யவும் ஆசை.

கிரந்தக் கலப்பு மற்றும் அதன் புறக்கணிப்பு குறித்து இப்படியொரு தெளிவை அடைந்திருக்கிறேன்.