Monday, November 28, 2005

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம்.

ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார்க்கத் தலைப்படுகிறோம். பின்னால் "நான் அப்பவே நெனச்சேன் இது ஒண்ணும் சரியில்லையேன்னு" என்று இவர்களைப் பற்றிப் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை எதிர்நோக்கி இருப்போம்.

***

சமுதாயமும் சுற்றங்களும் உருவாக்கித் தரும் ஏதோ பிம்பங்களைத் தனதென்று உருவகித்துக் கொண்டு, அதன் போதையில் சிக்குண்டு, அதை மிகவும் போற்றி வளர்த்த பிறகு, நம் சுவாபாவிகமான சில செயல்கள் அந்தப் பிம்பங்களை உடைக்கும் போது வலி உண்டாகிறது - சொறிந்து கொள்ளும் போது இன்பமளிக்கும் ரணம் இன்னும் வளர்ந்து பின்னால் வேதனை தருவது போல. இந்தப் பிம்பங்கள் நம்மைச் சுற்றியொரு பெரும் சுவரெழுப்புகிறது. இந்தச் சுவர்களை இடித்து வெளிவருவது கடினமானது. பல தருணங்களில் பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிச் செயலைத் தியாகம் பண்ணவேண்டியுள்ளது - இதுவும் சில சமயங்களில் வேதனை தருவது.

"நீங்கள் உருவாக்கிக் கொண்ட என் பிம்பங்களுக்கு நான் ஒரு வகையிலும் பொறுப்பேற்க முடியாது" என்று ஒரு அட்டையைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு உலவ வேண்டுமென்று தோன்றுகிறது.


(நன்றி: ஆதவன் - பிம்பச்சிறை, பிம்பச்சிதைவு உள்ளிட்ட சில வார்த்தைப் பிரயோகங்களுக்காகவும் அவைகளின் பாதிப்பிற்காகவும்)


18 comments:

Eswar said...

I ain't them :)

ROSAVASANTH said...

நல்ல பதிவு. அதை சொல்வதற்காக அல்ல இந்த பின்னூட்டம். ஒரு சந்தேகம்.

துவக்கத்தில் ஆதவன் பெயர் வருகிறதே. பயன்படுத்திய வார்த்தைக்காக அவருக்கு நன்றி சொல்கிறீர்கள், பதிவு உங்களுடையது என்று நினைக்கிறேன்.

Kannan said...

Eswar,

// I ain't them //
Yeah, right!

ரோசா,

ஆதவன் எழுதியது என்று அர்த்தம் வரும் குறிப்பை இப்போது மாற்றிவிட்டேன்.

சுதர்சன் said...

கண்ணன், வழக்கம் போல அருமையான பதிவு. எல்லாவற்றையும், எல்லோரையும் ஏதோ ஒரு வகையில் அடைத்தே தீருவது என்ற வகைப்படுத்தல் நோய்க்கு நம்மில் பெரும்பாலானோர் ஆட்பட்டிருக்கிறோம். இப்போது சிறுபிள்ளைத்தனமாக தோன்றும் இந்த பொதுப்படுத்தல்/வகைப்படுத்தலை நானும் செய்திருக்கிறேன்.

Kannan said...

Sudarshan,

// எல்லோரையும் ஏதோ ஒரு வகையில் அடைத்தே தீருவது என்ற வகைப்படுத்தல் நோய்க்கு நம்மில் பெரும்பாலானோர் ஆட்பட்டிருக்கிறோம். //

இதைத்தான் சொல்லவந்தேன் - நீங்கள் இன்னும் எளிதாகச் சொல்லிவிட்டீர்கள்.

நன்றி.

மணியன் said...

நீங்கள் கூறுவது மிகச் சரி.மற்றவர்கள் நம்மை வகைப்படுத்தலைத் தவிர நாமும் சூழலின் தாக்கத்தால் அந்த வகைப்படுத்தலில் அடங்குகிறோம். சினிமா நடிகர்களுக்கு ஒருவித பிம்பச் சிறை என்றால் மக்களுக்கு தங்கள் பிறப்பினால்,மொழியால், மதத்தால்,தேசத்தால் மற்றும் இன்னபிற வகைபடுத்தலால் பிம்பச்சிறை. அதனை உடைத்துக் காணும் கருத்துக்கள் தெளிவானவை.

Kannan said...

மணியன்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

Suresh babu said...

பதிவை படித்தவுடன் சிறுவயது ஞாபகம் வந்தது.

நீ ரஜினி ஃபேனா? என்று கேட்பார்கள்? இல்லை என்று சொன்னால் உனக்கு எதுக்கு கமலை பிடிக்கும் என்று அடுத்த கேள்வி வரும்.

நாம் எப்போதும் ஏதாவது வகுப்பை சார்த்து தான் அறியப்படுகிறோம்.

Kannan said...

சுரேஷ்,

எல்லாம் இருக்கட்டும். ஆனா ரஜினி ஃபேன் இல்லைன்னு நீங்க சொல்லியிருக்கக் கூடாது.

:-)

enRenRum-anbudan.BALA said...

அன்பில் கண்ணன்,

தேவையான ஒரு பதிவு !!! எதையும்/எவரையும் வகைப்படுத்துதலை வியாதி என்பதை விட நம் வாழ்வின் ஓர் அங்கம் என்றே
கூறலாம் !! மலையாளிகள் என்றால் இப்படி, குறிப்பிட்ட சாதிக்காரர்கள் (அல்லது ஊர்க்காரர்கள்) என்றால் இப்படி, என்று ப்ரொக்ராம்
செய்து கொண்டு வாழ்வதிலிருந்து சிரமப்பட்டால் தான் வெளியே வர முடியும் என்று தோன்றுகிறது.

//நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்ப ட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார்க்கத்
தலைப்படுகிறோம்.பின்னால் "நான் அப்பவே நெனச்சேன் இது ஒண்ணும் சரியில்லையேன்னு" என்று இவர்களைப் பற்றிப்
பேசுவதற்கான சந்தர்ப்பங்களை எதிர்நோக்கி இருப்போம்
//
மிகச் சரி!

சிறிது காலமாக என் வலைப்பதிவு பக்கம் தங்களை காண முடிவதில்லை !!! எனது சமீபத்திய பதிவுகளை படித்தீர்களா ? சமயம்
கிடைக்கும்போது பார்க்கவும். நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

Kannan said...

பாலா,

பின்னூட்டத்திற்கு நன்றி.

இங்கே தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன், படித்துவருகிறேன்.

பிகு: நிஜமாகவே நான் அன்பு இல்(லாக்) கண்ணன் தானா? :-)

enRenRum-anbudan.BALA said...

Kannan,

I refuse to get into "WORD PLAY" with you on this count ;-)

More seriously, "அன்பில்" சரியான வார்த்தைப் பிரோயகமா, இல்லையா ?

என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

பிரோயகமா = பிரயோகமா

Kannan said...

பாலா,

அன்பில் = அன்பு + இல் (லா)

என்று நினைக்கிறேன்.

(என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்)

நீங்கள் கூற விழைந்தது 'அன்பின்' என்றும் 'அன்பில்' ஒரு typo என்றும் நினைத்தேன்.

enRenRum-anbudan.BALA said...

Kannan,
நன்றி !!! I was using the word without thinking :-(

Anonymous said...

உங்கள் புளாகு மிகவும் போர் அடிக்கிறது

Kannan said...

Anonymous,

// உங்கள் புளாகு மிகவும் போர் அடிக்கிறது //
தெரியும் - ஆனால்...

நன்றி.

Suka said...

கண்ணன்..

எதையோ தேடப் போய் இங்கே வந்து முடிந்தது..

பதிவு பழையாதாகினும் பின்னூட்டமிடாமல் செல்ல மனமில்லை..

வெகு அருமையான பதிவு.. பிம்பச் சிறைகளைப் பிழக்க முயல்வோரும் அதனாலேயே தனியொரு அடையாளத்தைப் பெறுவதைத் தவிர்க்க முடிவதில்லை.


வாழ்த்துக்கள்
சுகா