Monday, June 20, 2005

செத்த பாம்பு

நேற்று இரவு பொதிகையில் 'அலசல்' நிகழ்ச்சியில் அசோகமித்திரன் செவ்வி. 'அந்த'க் கேள்வியும் கேட்கப்பட்டது. ஏதோ வழவழாவென்று எதையோ சொல்லிவைத்தார், பாவம்.

நாய்ப் பேச்சிற்குப் பிறகு ஜெயகாந்தன் நிலைமையும் மோசமாகிவிட்டது. ஈழநாதன் ஜெயகாந்தனின் இந்தப் பேச்சை தூசு தட்டி எடுத்திருக்கிறார். ஜெயகாந்தனும் பாவம் தான்.

இலக்கியவாதிகள் இன்று இரு தளங்களில் இயங்குபவர்கள் என்று தோன்றுகிறது. நிஜமான, சுய உணர்வுடன் இயங்கும் ஒரு சகஜ நிலைத் தளம். இன்னொன்று, அவர்களுக்கு வசப்பட்ட ஒரு கலையை, ஒழிந்த நேரத்தில் பயிலவும், அதனால் மனநிறைவும் ஓய்வும் பெறவோ, பின்னர் அதையே வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யவோ இயங்குவது - ஒரு கற்பனைத் தளம்.

அவர்களின் வாழ்க்கை நெறி, சமூக விழுமியங்கள் பற்றிய பார்வைகளை அவர்கள் படைப்புக்களில் அவ்வப்போது முன்வைப்பார்கள். வாசகனுக்கு ஒரு எழுத்தாளனின் இவ்வகை வெளியீடுகள் அந்த எழுத்தாளன் சார்ந்துள்ள நெறிகளை, விழுமியங்களைக் குறித்த ஒரு பார்வையை, காலப்போக்கில் உருவாக்கிக் கொள்ளப் பயன்படுகிறது. இது வாசகன் உருவாக்கிக் கொள்ளுகிற கருத்தேயன்றி எழுத்தாளன் சார்ந்த நெறி குறித்த துல்லியமான கணிப்பன்று. இதனால் நம் ஆதர்ச புருஷர்கள் சகஜ நிலையில் சிலவற்றைச் சொல்லும்போது நாம் உருவாக்கிய பிம்பங்கள் உடையலாம். இதற்கு முழுப்பொறுப்பையும் நாமே தான் ஏற்க வேண்டும்.

இப்படியல்லாமல், பொது இயக்கங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களால் இந்த இரண்டு தளங்களையும் ஒன்றாகக் காண முடிகிறது. இவர்கள் தம் ஆதர்ச நெறிகளைத் தழுவியே எப்போதும் இயங்கத் தலைப்படுதலால் இவர்கள் பேச்சிற்கும் படைப்புகளுக்கும் வாழ்க்கைமுறைகளுக்கும் இடையே எந்த முரணும் ஏற்படுவதில்லை. இதனாலேயே இவர்கள் தீவிரவாதிகளாகவோ, பைத்தியக்காரர்களாகவோ(பாரதி), புரட்சிக்காரர்களாகவோ(சே) அறியப்படுகிறார்கள். இவர்கள் வாழ்வதே பொது வாழ்க்கை.

உன்னதமான, உண்மையான கலைஞனுக்கும் இப்படியான இரண்டு தளங்கள் கிடையாது என்று தோன்றுகிறது. அவனது உலகம் தனித்துவமானது. இவன் தன்னைத் தன் படைப்புக்கள் மூலம் மட்டுமே வெளிக்காட்டுவான். செவ்வியெல்லாம் கிடைக்காது.

இந்தப் பிரிவினரில் யார் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுகொள்ளும் திறன் நமக்கு இருக்கிறது. இதனால் யாரிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதும் நமக்குத்தெரியும். முதல் பிரிவினர் நம்மைப் போன்ற சாதாரணரே. நம்மில் சிலருக்கு படங்கள் வரையும் திறனும், பாடும் திறனும், நாக்கால் மூக்கைத் தொடும் திறனும் இருப்பது போல சிலருக்கு எழுத்தும் இருக்கலாம். நாம் அனுபவங்களில் இருந்தும், வாசிப்பில் இருந்தும், வாழ்க்கையில் இருந்தும் தினம்தினம் கற்றுச் செறிவுகொள்வது போலத் தான் அவர்களும் முயல்கிறார்கள். இவர்கள் படைப்புக்களை மட்டும் ரசிக்காமல் அவர்களது முரண்களை சந்திக்கு இழுத்து அவர்களை வசைபாடுவதும் சாட்டையால் அடிப்பதும் செத்த பாம்பை அடிப்பதற்குச் சமம் தானே?

9 comments:

Thangamani said...

கலையோ அல்லது ஒருவனது அக உலகோ அவனது ஏதோ ஒரு தேவையினாலேயே திறக்கிறது, தேடலின் மூலம் கூர்மை பெறுகிறது. இங்கு அத்தேடலை நான் ஆன்மீக மயமானதென்றே சொல்லுவேன். அது தான் யார் என்றுதான் ஆரம்பிக்க வேண்டுமென்ப்பதில்லை, ஆனால் நிச்சயம் தனக்கும் இந்த உலகுக்கும் இடையில் இருக்கிற உறவின் தளத்திலேயே எல்லா தேடலும் நடக்கிறது. இத்தேடலில் நேர்மையும், வைராக்கியமுமே முக்கியமாகிறது. பெரிதினும் பெரிது கேள் என்று பெரிதை நோக்கியே போய்க்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது; ஆனால் அதையும் 100% சுயதேவையின் பெயரிலேயே செய்யவேண்டும். நடுவில் இதுதான் அது என்று மயங்கி நிற்க எவ்வளவோ சாத்தியங்கள் உண்டு.

நம்மைப் பற்றிய அடையாளங்களாக நாம் எதை கொள்கிறோமோ அதைச் சார்ந்து மனமும், தன் முனைப்பும் உற்பத்தியாகின்றன. அடையாளங்களுக்கும் தேடுகிறவனுக்கும் இடையில் இருக்கிற மிக நுட்பமான வித்தியாசத்தைக் கண்டுகொள்கிற கூர்மையும், வைராக்கியமும் தேவை.. இப்படி அது போய்க்கொண்டே இருக்கிறது. இதில் நடுவில் பாரதியும் சாத்தியமாகிறது, பாலகுமாரனும் சாத்தியமாகிறது..

Kannan said...

முழுதாக கிரகித்துக் கொள்ள மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டியிருந்தது.

நன்றி தங்கமணி

Garunyan said...

தங்கமணிசார் பெரிதாக ஏதோ சொல்லவிழைவதாகவே படுகிறது. அனேகமான எல்ல வலைப்பூக்களிலுந்தான் தட்டுப்படுகிறார். சாருக்குச் சொந்தமாக வலைப்பூவோ, அல்லது வேறேதாவது எழுத்துத்தளமோ உண்டா? அறிய் ஆவல். - காருண்யன்

டிசே தமிழன் said...

கண்ணன், நல்ல பதிவு. நீங்கள் எழுதிய விதம் பிடித்திருந்தது.
//நிச்சயம் தனக்கும் இந்த உலகுக்கும் இடையில் இருக்கிற உறவின் தளத்திலேயே எல்லா தேடலும் நடக்கிறது. இத்தேடலில் நேர்மையும், வைராக்கியமுமே முக்கியமாகிறது//
//இப்படி அது போய்க்கொண்டே இருக்கிறது. இதில் நடுவில் பாரதியும் சாத்தியமாகிறது, பாலகுமாரனும் சாத்தியமாகிறது..//
தங்கமணி எழுதிய பின்னூட்டத்தில் உள்ள கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.

டிசே தமிழன் said...

காருண்யன், தங்கமணியின் தளத்திற்கு இந்த முகவரியில் சென்று பார்க்கலாம்....
http://www.ntmani.blogspot.com/

Kannan said...

டிசே,

நன்றி.

மு. சுந்தரமூர்த்தி said...

கண்ணன்,
எனக்கும் கிட்டத்தட்ட இதே கருத்து தான். முரண்படுவது பிம்ப உற்பத்திக்குக் காரணம் வாசகர்கள் மட்டும் தான் என்பதில். பொதுவாக எழுத்தாளர்களை "படைப்பாளி", எழுத்தை "படைப்பு" என்றெல்லாம் பிரம்மாவின் பீடத்தில் உட்காரவைப்பது, அவர்களும் தங்கள் எழுத்தை "தேடல்", "ஆத்ம திருப்தி" என்று பெரிய வார்த்தைகளைச் சொல்லி பயமுறுத்துவது, போதாதுக்கு அவர்களின் நண்பர்கள் எழுதும் நீண்ட முன்னுரைகளும், புகழுரைகள் போன்றவற்றை வைத்தே வாசகர்கள் எழுத்தாளர்களை தங்களின் இலட்சியப் புருஷர்களாக்கிக் கொள்கிறார்கள். அதில் எழுத்துக்கும் அவர்களுடைய நிஜ வாழ்க்கைக்கும் இடையே உள்ள கோடு அழிக்கப்பட்டுவிடுகிறது. அந்த வகையில் "தீவிர" இலக்கிய வாசகர்களின் மனநிலைக்கும், தீவிர சினிமா ரசிகர்களுக்கும் வித்தியாசம் அதிகமில்லை. புத்தக விளையாட்டின் போது நான் கிண்டலாக எழுதியதற்குக் கூட சிலபேர் உணர்ச்சிவசப்பட்டார்கள். ஜெகா, அமி போன்றவர்கள் நிஜவாழ்க்கை விஷயங்களில் உதிர்க்கும் கருத்துக்களைக் குறித்து கேள்விகேட்டால் எம்.ஜி.ஆர்., ரஜனி ரசிகர்களைப்போல சிலர் உணர்ச்சிவசப்படுகிறார்கள். சினிமா ரசிகர்கள் கொஞ்சம் கரடுமுரடாக இருக்கலாம். இலக்கிய வாசகர்கள் sophisticated ஆகத் தெரியலாம். ஆனாலும் இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லை என்பது என் தாழ்மையான கருத்து. அ-புனைவு எழுதுபவர்களுக்கு இப்படி ரசிகர் மன்றமும் இருக்காது. அமிக்கு நேர்ந்தது போல பிம்ப விபத்தும் நேராது. அரசியல்வாதிகளைப் போல அவர்கள் மீதும் அவ்வப்போதே பூக்களும், புழுதியும் வீசப்பட்டுவிடுவதால் இந்த பிம்பப் பிரச்சினையில்லை.

Kannan said...

சுந்தரமூர்த்தி,

கருத்திற்கு நன்றி.


மற்றபடி,

//இலக்கிய வாசகர்கள் sophisticated ஆகத் தெரியலாம். ஆனாலும் இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லை என்பது என் தாழ்மையான கருத்து//

இந்தக் கருத்தில் தாழ்மையே இல்லை. சொல்லப்போனால் ரசனைகளில் ஏற்றத்தாழ்வு என்பது நம்மால் கற்பிக்கப் படத்தே. ஒருவரின் விருப்பு, மனநிலை மற்றும் ஈர்ப்புத் திறன் சார்ந்தே சில விடயங்கள் அவரைப் போய்ச் சேர்கின்றன - அது அவரது ரசனையாகிறது. பிடி சாமி ரசிகர்களும், மார்க்குவேஸ் ரசிகர்களும் (அவர்கள் ரசிக்கும் விடயத்தின் பரப்பில் வித்தியாசம் இருந்தாலும்,) ரசனை என்ற அம்சத்தில் ஒரே நிலை தானே?

Anonymous said...

kannan,

//உன்னதமான, உண்மையான கலைஞனுக்கும் இப்படியான இரண்டு தளங்கள் கிடையாது என்று தோன்றுகிறது. அவனது உலகம் தனித்துவமானது. இவன் தன்னைத் தன் படைப்புக்கள் மூலம் மட்டுமே வெளிக்காட்டுவான். செவ்வியெல்லாம் கிடைக்காது.//

//முதல் பிரிவினர் நம்மைப் போன்ற சாதாரணரே. நம்மில் சிலருக்கு படங்கள் வரையும் திறனும், பாடும் திறனும், நாக்கால் மூக்கைத் தொடும் திறனும் இருப்பது போல சிலருக்கு எழுத்தும் இருக்கலாம். //

Very well said.

-- Vinobha.