Friday, November 04, 2005

வெள்ளெருக்கு

வயிற்றுப் பிழைப்பு தான் மனிதனின் எல்லாச் செயல்களையும் ஊக்குவிக்கிறது என்று நான் நினைப்பேன். ஒருவேளை மனிதனுக்குப் பசி என்ற ஒன்று இல்லாவிட்டால் வாழ்க்கையில் எதன் நிமித்தம் அவன் பாடுபடுவான்? ஒரு வகையில் மனிதனின் எல்லாச் செயல்களையும் நியாயப்படுத்தும் ஒரே தேவை வயிற்றுத் தேவையே. அந்தத் தேவை இல்லாதிருப்பின் மனிதன் பாடு திண்டாட்டம் தான் போலும்.

நான் ஒரு நேர்த்தியான உலகில் வாழ்பவன். சுக ஜீவனம். தேவைகளைப் பல மடங்கு பெருக்கிக் கொண்டுள்ளேன். இந்தத் தேவைகளின் அடுக்கில் கீழே, எல்லோருக்குமான அடிப்படைத் தேவை எனக்கும் உள்ளது. இந்த அடுக்கில் ஒவ்வொரு தேவையும் கீழிருக்கும் ஒன்றைச் சார்ந்தது. ஆனால் அடிப்படைத் தேவைகளைப் பற்றிய நேரடியான பயம் எனக்கில்லை. அடிப்படைத் தேவைகளுக்கான தினசரிப் போராட்ட்ம் பலர் வாழ்வில் நடக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் நடப்பது என்ன?

***

சமூகத்தில் பிற்படுத்தப் பட்டவர் தினசரி வாழ்க்கையின் பதிவுகள் இருக்கிறதா? அவை அவர்களின் பழக்கவழக்கங்களை, மகிழ்ச்சியை, அவலங்களை, குடும்ப அமைப்பை ஒரு நம்பகத் தன்மையுடன் தருகிறதா? இதைப் பதிவு செய்பவர் வெளியே நின்றுகொண்டு ஒரு பார்வையாளர் கோணத்தில் செய்கிறாரா? இதையெல்லாம் படித்தபிறகு அந்த சந்தோஷங்களுக்காய் நாமும் இணைந்து மகிழ முடிகிறதா? அவர்கள் துக்கங்களின் பேரில் நமக்கும் மனதிற் துயரம் பிறக்கிறதா? சகமனிதர் என்ற முறையில் அணுக்கம் ஏற்படுகிறதா?

***

கண்மணி குணசேகரன் எழுத்தை இப்போது தான் முதன்முதலாகப் படிக்கிறேன். இவரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு இது. எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. ஒவ்வொரு கதையும் ஒரு தனி அனுபவம். படித்து உள்வாங்கிச் சிறிது நேரம் அதன் பாதிப்பில் அமிழ்ந்துவிடச் செய்வது ஒவ்வொன்றும். இந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை இவரது கதைக்களம் சமூகத்தில் பிற்படுத்தப் பட்டவர்களின் வாழ்க்கை; இவர் மொழி, அம்மனிதர்களின் கோபங்களும், சந்தோஷங்களும் உள்ளடக்கிய வெளிக்காட்டல்கள்;இவர் தொடும் பிரச்சனைகள் அன்றாடங்காய்ச்சிகளின் தினசரி வாழ்க்கைப் போராட்டங்கள்.

வறுமைக்கோட்டிற்கு அருகிலேயே வாழும் மனிதர்களின் தினசரி அவலங்கள், சந்தோஷங்கள், பழக்கவழக்கங்கள் பற்றி எனக்கு யாதொரு கவலையும் இருந்ததில்லை. இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவையையும் நான் உணர்ந்திருக்கவில்லை. ஆனால் இத்தொகுப்பைப் படிக்கப் படிக்க இம்மனிதர்களின் அவலங்கள், சந்தோஷங்களோடு என்னை இணைத்துக் கொள்ள முடிந்தது - இவற்றினாலேயே இவர்களில் ஒருவனாய் என்னை இனங்காண முடிந்தது! தம் தொகுப்பில் வரும் கதைகளின் கதைமாந்தர்கள் மூலம் மௌனமாக, ஆனால் அழுத்தமாக இவர்களின் இருப்பைப் பிரகடனப்படுத்துகிறார் குணசேகரன்; இவர்கள் வாழ்க்கையை நாம் ஒரு சாளரத்தின் மூலம் பார்க்க உதவுகிறார்; வாழ்க்கையும் அதன் அவலங்களும் மனிதர்களைப் பொதுமைப் படுத்துவதை உணர்த்துகிறார். கல்லுடைக்கும் (ஜல்லியடிக்கும்) வேலைக்குப் போகும் இருவருக்கிடையே காதல் மலர்ந்து, பெற்றோரை எதிர்த்து மணம் செய்துகொள்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு பிரசவ வேதனை எடுக்கும்போது அவளை நேரத்தில் மருத்துவமனை கொண்டு சேர்க்க முடியாமல், நெரிசலான பேருந்தில் யாரோ "பிளேடு இருந்தா கொடுங்க" என்று அலற, கண்டக்டர் அதைக் கொடுக்க, பேருந்தில் இருக்கும் பெண்கள் அரண் அமைத்து உதவ, குழந்தையை ஈன்றெடுக்கிறாள் பெண்! கண்டக்டர் சொல்கிறார் "நா இதுவரையிலெ டூட்டி பாத்ததுல இது நாலாவது பிரசவம். அனுபவந்தான். அவசரத்துக்கு ஒதவுட்டும்னு பையிலெ ஒரு பிளேடு எப்பவும் போட்டு வச்சிருப்பன்". தண்ணீரை விட்டு இரத்தக் கறைகளைக் கழுவிய பின் பேருந்து புறப்பட்டுப் போகிறது. தொடர்கிறது வாழ்க்கை!

ஒரு குறிப்பிட்ட பிரிவினரில் தாய்மாமன் (அவன் மணமானவனாக இருந்தாலும்) ஒப்பின்றி முறைப்பெண்ணுக்கு கல்யாணம் நடக்காது. அப்படியே நடந்தாலும், தாய்மாமனுக்கு உரிய மரியாதை கொடுத்துச் சீர் செய்யவேண்டும். அது திருப்தி தராவிட்டால் மணவறையிலிருந்து பெண்ணை மாமன் இழுத்துக் கொண்டு போகமுடியும். சிட்டை வேறு இடத்தில் மணமுடிக்க மாமன் சின்னக்காத்தான் ஒப்புக்கொள்கிறான். மணமுடித்து முதலிரவுக்காய் நல்ல நேரம் பார்த்து காத்திருக்கும்போது குடித்துவிட்டு வந்து விருந்தில் பன்றியின் ஈரலும் ரத்தமும் சுண்டி இலையில் வைக்கவில்லை என்றும், சீர்ப்பணத்தில் ஒரு நூறு ரூபாய் நோட்டு செல்லாதது என்றும் பெண்ணை இழுத்துப் போக எத்தனிக்கிறான். ஊர்க்காரர்கள் கூடி சமாதானம் செய்து, இரவோடிரவாக மீண்டும் பன்றியடித்துச் சமைத்து விருந்து கொடுக்கிறார்கள். விடியும் நேரம் சிட்டைப் பாசத்தோடு மாப்பிள்ளை இருக்கும் அறைக்குப் போகச் சொல்கிறான் மாமன். சிட்டு ஒன்றும் பேசாமல் சாணியைக் கரைத்துக் கொண்டுவந்து வாசல் தெளிக்க ஆரம்பிக்கிறாள். அதன் துளிகள் எல்லோர் மேலும் கொஞ்சம் படுகிறது.

சின்ன வானம் பார்த்த பூமியில் கொஞ்சமாய்ப் பயிரிட்டு அதை பக்கத்து ஊரிலிருந்து அவிழ்த்துவிடும் மாடுகள் மேயாமல் காவல் காக்கின்றனர் ஒரு ஊரினர். காவலையும் மீறி மாடுகள் தோட்டத்திற் புகுந்து பயத்தஞ்செடிகளையும், பாகற்கொடிகளையும், முருங்கை நாற்றுகளையும் துவம்சம் செய்கின்றன. ஊரில் மாடுகளைப் பிடித்துக் கட்டி வைத்தால் யாரேனும் தேடுக் கொண்டுவரும்போது அவிழ்த்துக் கொண்டு போவார்கள். சில மாடுகளைத் தேடி யாரும் வருவதில்லை. வெள்ளையனுக்கு இப்படியாக மாடு வளர்க்க இஷ்டமில்லை. அவன் சகாக்கள் ஒரு திட்டம் போடுகிறார்கள் - ஊருக்குள் மேய வரும் மாடுகளை வெட்டுவதற்கு கொண்டு போய்விடுவதென. இப்படியாக இரண்டு மாடுகளை இரவோடிரவாக இழுத்துச் செல்லும்போது வெள்ளையன் சினை மாட்டை ஒன்றும் செய்யவேண்டாமென்றும், மனிதர்கள் செய்யும் அக்குறும்புகளுக்கு வாயில்லாச் சீவன்களை வதைத்தல் பாவம் என்றெல்லாம் சொல்லிப் போராடி, மாடுகளை விடுவிக்கிறான். இல்லாதவனிடம் மிளிரும் மனிதம் நமக்கு நாம் சார்ந்த உலகின் மீது எவ்வளவு நம்பிக்கை வரச் செய்கிறது!

பல நவீனங்கள் புழக்கத்திற்கு வந்ததில் தொழில் நலிவடைந்த கொல்லன் அடுத்தவேளை உணவிற்கும் வழியில்லாமல் தவிக்கிறான். அப்போது அதிசயமாக இரண்டொரு வேலைகள் அவனுக்குக் கிடைக்கின்றன. ஆனால் உலை பற்றவைக்கக் கரி இல்லை! அடுப்புக் கரியாவது எங்கேயாவது கிடைக்குமா என்று அலைகிறான். கடைசியாக, ஊரடங்கியிருக்கும் நடு இரவில் சுடுகாட்டிற்குச் சென்று பிணம் எரிந்த சிதையில் இருந்து கரி எடுத்து வந்து வேலையை முடிக்கிறான். அதை எடுக்கச் செல்லும்போது அவனுக்குப் பேய்கள், பிணங்கள் பற்றிய பயமில்லை. பசிக்கே அவன் பெரிதும் பயப்படுவான்! இப்படியாக பலதரப்பட்டவர்களின்

வாழ்க்கையில் ஒரு தருணத்தை உடன் வாழ்ந்து அவதானித்த ஒரு வாசிப்பு அனுபவம் தரும் கதைகள் இவை! நல்ல மொழியாளுமையும் சோர்வில்லாத நடையும், இந்நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் உயிர்ப்பித்து நம்முன்னே நடமாட விடுதலால் என்னைப் பெரிதும் கவர்ந்து விட்டார் கண்மணி குணசேகரன்.

தமிழினி இத்தொகுப்பை நேர்த்தியாக வடிவமைத்துள்ளது. இதைப் படித்துவிட்டு கண்மணி குணசேகரனின் முந்தைய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் வாங்கிப் படிக்கவேண்டும் என்று தீர்மானம் செய்திருக்கிறேன்.

வெள்ளெருக்கு - கண்மணி குணசேகரன் - தமிழினி, டிசம்பர் 2004

2 comments:

hameed abdullah said...

NALLAP PUTTHAKANGALAIP PADIPPATHU SUVAIYAANA ANUBAVAM....ATHAIYUMVIDA NALLAP PUTTHAKANGAL KURITTHU MATRAVAR PADITTHUPAARATTUVATHAIP PADIPPATHU.....VAZTTHUKKAL

Kannan said...

ஹமீத்,

உங்களின் சுவையான அனுபவம் குறித்து மகிழ்ச்சி, நன்றி.