Monday, November 21, 2005

பெங்களூர் டயரி - 3

எனக்கு சந்தோஷ் குருவுடன் பேசுவது என்பது ஒரு உரையாடல் இல்லை. இந்த மாதிரிப் பேச ஒரு ஆள் கிடைத்தானே என்று, நான் வார்த்தைகளை அவர் மீது வாந்தியெடுப்பேன். அவருக்கு நல்ல பொறுமை. இதைப் பின்னால் நானே யோசித்துப் பார்த்தபோது கிளைத்துக் கிளைத்துப் பரந்த பேச்சில் கோர்வையாக ஒரு இழைகூட இருக்காது. கிடைக்கும் இரண்டு மணிநேரத்தில் எல்லாவற்றையும் பேசிவிட வேண்டும் என்ற நோக்கிலோ என்னவோ தாவித் தாவிப் போகும் பேச்சில் எந்த ஒரு விஷயமும் மையச் சரடுக்கு மீள்வதில்லை. எல்லா விஷயங்களும் ஆங்காங்கே தொக்கி நிற்கும்.

***

இப்படியாகப் போனவாரம் ஒரு இழை நவீன ஓவியங்கள், நாடகங்கள், எழுத்து, இவற்றில் குறியீடுகளைப் (symbolism?) புரிந்து கொள்ளுதல் பற்றி நீண்டது. ஒரு விஷயத்தை எந்த முறையாலும் முழுமையாக, நம் திருப்திக்கேற்ப வெளிக்காட்ட முடியாதது எவ்வளவு அவஸ்தையைக் கொடுக்கிறது என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்க முடிகிறது. மொழி extensible இல்லை. அதை ஒரு வெளிக்காட்டு முறையாகப் பயன் படுத்தும் போது எழுத்துகள் தரும் மேலார்ந்த பொருள்களுக்கு அப்பால் ஒன்ற உணர்த்த அந்த basic set ஐ வைத்துக் கொண்டே தகிடுதத்தம் பண்ண வேண்டியிருக்கிறது. சாதாரணமானவற்றைத் தாண்டிச் சிலவற்றைச் சொல்லத் தேவை இருப்பவர்களுக்கும், அம்மாதிரி விஷயங்களைக் கேட்டுக் கொள்ள விழைபவர்களுக்கும், எப்படியோ இந்த protocol synch ஆகிறது. சன்னாசியின் இந்தப் பதிவைப் பார்த்து பிரமிப்பாக இருந்தது. ஆனால் ப்ரத்யேக மொழிக்கான (Private Language) தேவைகள் புரிகிறதே ஒழிய, அம்மொழிகளையும் இன்ன பிற குறியீடுகளையும் கண்டு கொள்ள முடிவதில்லை. எழுத்துக்களைப் பார்த்துப் பார்த்து எனக்கு இன்னும் சலிக்கவில்லை போலும். அதனால தான் எழுதப்பட்டவைகளையே ஒரு விடமுடியாத ஆசையுடன் பார்க்கிறது போல இருக்கிறது. எழுத்துக்களும், உத்திகளும், எதைக் குறிக்கிறதோ அதை நேராகப் படிக்க, உணர, இந்தக் கருவிகளின் பால் உள்ள மோகத்தை இன்னும் தாண்ட முடிவதில்லை. 'வார்தைகளின் வசீகரம்' எனக்கு அவைகளின் உடல்மீதே - ஆவியின் மீது இல்லை!

***

சந்தோஷ் குருவின் சகவாச தோஷத்தில் பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் நான்கு வெங்கட் சாமிநாதன் புத்தகங்களும், ஆதவனின் காகித மலர்களும் வாங்கினேன். பர்ஸை எவ்வளவு காலியாக வைத்திருந்தும், கிரெடிட், டெபிட் என்று என்ன அட்டையாக இருந்தாலும் தேய்த்துக் கொள்வோம் என்று அங்கே சொல்வார்கள் என்று தெரியாமல் போயிற்று. முத்துலிங்கத்தின் ஒரு கட்டுரைத் தொகுப்பும் வாங்கினேன். காவ்யா பதிப்பகம் கடை விரிக்காதது ஆச்சரியமாக இருந்தது. சன்னாசியின் மேற்சொன்ன பதிவைப் படித்ததில் இருந்து நகுலனின் தொகுப்பை வாங்கிவிட வேண்டுமென்று இருந்தேன். காவ்யாவின் வெளியீடுகளை காலச்சுவடு ஸ்டாலில் வைத்திருந்தார்கள். நகுலனின் கவிதைத் தொகுப்பு மட்டுமே இருந்தது - சத்தமில்லாமல் அதை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டேன். கிழக்கு பதிப்பகத்தில் இருந்தவரிடம் "பத்ரி திரும்பிப் போயிட்டாரா" என்று பெரிய 'இவன்' மாதிரி நான் விசாரித்தது எனக்கே அப்புறம் சிரிப்பை வரவழைத்தது.

5 comments:

ஒரு பொடிச்சி said...

//...'வார்தைகளின் வசீகரம்' எனக்கு அவைகளின் உடல்மீதே - ஆவியின் மீது இல்லை!//
அழகா இருக்கு!
--------
ஆவியின்மீதும் வசீகரம் இருக்கிறது.
என்றாலும்
/வார்த்தைகளை வாந்தியெடுக்க/ நண்பர்கள் இருக்கும்போது private language பற்றிய தேவை இருக்காதோ...!
;-)

Kannan said...

பொடிச்சி,

நன்றி!

வாந்தி அதிகமானால் நண்பர்கள் நம்மை வசைபாட அதி-Private Language அவசியமே!
:-)

icarus prakash said...

//பேச ஒரு ஆள் கிடைத்தானே என்று, நான் வார்த்தைகளை அவர் மீது வாந்தியெடுப்பேன்.//

ரைட்... :-)

//சன்னாசியின் இந்தப் பதிவைப் பார்த்து பிரமிப்பாக இருந்தது ......................
................................................ எனக்கு அவைகளின் உடல்மீதே - ஆவியின் மீது இல்லை! //

உங்களுக்குச் சொல்ல வருது... சொல்லிட்டீங்க... எனக்கு வரலை.. அதனால், உங்க பின்னூட்டுப் பொட்டியில வந்து ஆமாஞ்சாமின்னு ஒத்து ஊதறேன்...

Kannan said...

// உங்களுக்குச் சொல்ல வருது... சொல்லிட்டீங்க //

பிரகாஷ்,

ஒண்ணும் புரியலைன்னு தானே சொல்லியிருக்கேன். எனக்கு இதை ரொம்ப நல்லாச் சொல்ல வரும் - பல வருடப் பயிற்சி

:-)

Santhosh Guru said...

//இந்த மாதிரிப் பேச ஒரு ஆள் கிடைத்தானே என்று, நான் வார்த்தைகளை அவர் மீது வாந்தியெடுப்பேன். அவருக்கு நல்ல பொறுமை. //

ஆங்.. நானும் உங்களைப் பத்தி இப்படித்தானே நினைச்சுக்கிட்டு இருந்தேன் :).