Monday, June 27, 2005

பிலாக்கணம்

இரண்டு மாதங்களுக்கு முன்னால் அது நிகழ்ந்தது. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் என் மோட்டார் சைக்கிள் யாரோ கழுத்தைத் திருகியது போல நின்றுவிட்டது. கடந்த ஒருவருடமாகவே அவ்வப்பொழுது சின்னதாக பிரச்சனைகள் கொடுத்து வந்தாலும், இப்படி ஒன்றும் செய்ய இயலாத படிக்கு நின்றதில்லை. ஐயாயிரம் ரூபாய் கொடுத்துப் பழுது பார்த்தேன். ஒரு மாதம் ஓடியபின் மீண்டும் கழுத்து நெரிபட்டது போல நின்று விட்டது. இதை இன்னும் பழுது பார்த்து வைத்துக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலும், அது பண விரயமே என்று தோன்றுகிறது.

பத்து வருடங்கள், அறுபதினாயிரம் கிலோமீட்டர்கள்...

மிகவும் நன்றி கெட்டவனாக உணருகிறேன் - இதைப் பிரிவதற்குத் தயாராகிவிட்டேன்.

ஒரு அற்புத விளக்கு கையைவிட்டுப் போவது போலவும், இதனால் இதுவரை கிட்டிய அதிட்டங்களும் இனிமேல் கிட்டாது போலவும் தோன்றுகிறது. எல்லா நல்ல விடயங்களுக்கும் முடிவு உறுதி போலும். இதைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம் பழைய வேகத்தையும் உற்சாகத்தையும், வேட்கையையும் மீட்க முடியும் என்று நம்புகிறேன். எவ்வளவு முயன்றாலும் மீண்டும் கிட்டுமோ இளமை? (எனக்கும் அதற்கும்)

வாழ்க்கையின் கடிவாளமிப்படாத பகுதியின் முடிவை, புதிய, கடினமான அத்தியாயம் ஒன்றின் துவக்கத்தை இது உணர்த்துகிறதோ? நீண்ட நாளைய நட்பின் பிரிதல் போலவே இது எனக்குத் துன்பம் அளிக்கிறது. எத்தகைய நட்பு அது! எத்தனை இன்பங்கள், எத்தனை காதல்கள், எத்தனை உளைச்சல்களை இது தாங்கிச் சென்றிருக்கிறது? 'பழையன கழிதலும் புதியன புகுதலும்வழுவில கால வகையினானே' என்பது நட்புக்கும் பொருந்துமா?

தெளிந்த நீர்ப்பரப்பு போல மனது களங்கமற்றிருந்த பொழுதில் என் வாழ்வில் புகுந்த அது, அப்பரப்பில் பிம்பமாய்ப் படிந்தது. பத்து வருடங்களில் நன்றாய்க் க(ள)லங்கி விட்ட பரப்பில் தெளிவின் அத்தாட்சியாய் நின்ற பிம்பமும் உடைந்து தானே போகும்? இனி ஒரு வாழ்க்கைக் காலம் முழுதும் மனதில் காவிக்கொண்டு நடக்கக் கொஞ்சம் நினைவுகள் மட்டுமே மிஞ்சும்.

4 comments:

செல்வராஜ் (R.Selvaraj) said...

உடல் தானேங்க? ஆன்மா உங்க கூடத் தானே இருக்கும். வேற உடலுக்கு மாற்றிடுங்க. :-)

(கை பூரா மை ஆனாலும் விடாமல் நான் வைத்திருந்த பள்ளி நாள் பேனாவை எல்லாம் நினைவு படுத்துகிறீர்கள்!)

Kannan said...

செல்வா,
வண்டி பேயா மாறி வந்து பழிவாங்காம இருந்தா சரிதான்.
:-)

Anonymous said...

கண்ணன்,

உங்களின் அலட்டல் ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாத இயல்பான நடை ரொம்பவும் இதமாக இருக்கிறது. தமிழில் வலைப்பதிவுகள் துவங்கிய காலத்தில் எழுதியவர்களிடையே (இன்னமும்) இம்மாதிரியான மொழியைப் பார்க்கமுடியும். இப்போதெல்லாம் தமிழ்மனத்தில் அதிரடியாளர்களுக்குத் தான் மவுசு.
அவைகளுக்கிடையில் உங்களின் எழுத்தை சுகமான இளம்காற்றாக உணர்கிறேன்.

--வினோபா.

Kannan said...

வினோ,

உங்கள் பின்னூட்டம் பார்க்க மகிழ்ச்சியாயிருக்கிறது.

தொடர்ந்து இங்கே வருவதற்கும் ஊக்கம் கொடுப்பதற்கும் மிக்க நன்றி!