Thursday, July 07, 2005

குழந்தை மனசுக்காரன்

'மானத்தைக் காக்கவோர் நாலு
முழத்துணி வாங்கித் தர வேணும்
தானத்துக்கு சில வேட்டிகள் வாங்கித்
தரவும் கடனாண்டே ! '
(கண்ணன் என் ஆண்டான்)

ஹிந்துவில் நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன்னால் தொண்ணூறு வயது நிரம்பிய பெரியவர் ஒருவர் பாரதியுடனான ஒரு பரிச்சியத்தைப் பகிர்ந்து கொண்டார். (சுட்டியைத் தேடித் தோற்றுவிட்டேன் - இதை எழுதியவர் பெயர், மற்றும் விபரங்கள் நினைவில்லை. சம்பவம் மட்டும் மனதிற்பதிந்து விட்டது)

இவரின் சிறுவயதில் திருவல்லிக்கேணியில் பாரதியின் வீட்டை அடுத்த தன் உறவினர் (மாமா என்று நினைவு) வீட்டில் சில காலம் இருந்திருக்கிறார். ஒருநாள் செல்லம்மாள் இவரின் மாமியிடம் ஏதோ கடன் கேட்டு வரும்போது, பாரதி அந்த மாதத்திற்கான செலவிற்கு சம்பளப் பணம் ஒன்றும் தரவில்லையென்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டிருக்கிறார். மாமா உடனே பாரதியிடம் சென்று விசாரிக்கிறார். பாரதி அன்று அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது ரிக்ஷாவில் வந்திருக்கிறார்.

ஒரு திசை திருப்பு: பாரதியார் கதைகள் என்ற திரட்டு கிடைத்தால் கட்டாயம் படியுங்கள். அவர் தினசரி வாழ்க்கையை அறியத்தரும் ஒரு சின்ன ஜன்னல் இது! பல சுவாரசியமான விடயங்கள் உள்ளது. வித்தியாசமான விடயங்கள் கூறிக்கொண்டு வரும் ஒரு குடுகுடுப்பைக்காரன் (புதிய கோணங்கி), ஒரு மார்கழி காலைக் குளிரில் திருச்சாழல் பாடி வரும் பண்டாரம், இப்படி பலதரப் பட்டவரை கூப்பிட்டு வீட்டுத் திண்ணையில் இருத்தி அவர்களிடம் அவர்கள் வாழ்க்கை, இதர விடயங்கள் குறித்துக் கதைப்பது இவருக்கு வழக்கம். இயல்பில் மனித வாஞ்சை மிக்கவராக இருந்தவர் என்று தெரிகிறது. "எளிமை கண்டிரங்குவாய்" என்பது அவர் வாழ்வில் நடைமுறை.

இப்படியாகத்தானே அவர் மேற்படி ரிக்ஷாவில் வரும்போது ரிக்ஷாக்காரருடன் பேசிக்கொண்டு வந்திருக்கிறார். ரிக்ஷாக்காரர் புலம்பிய புலம்பலில் "நம் தேவையை விட அவன் தேவை அதிகம் என்று தோன்றியது" என்று சொல்லி, தன் மாதச் சம்பளம் முழுவதையும் அவரிடம் கொடுத்து விட்டதாகச் சொல்கிறார். மாமா அந்த ரிக்ஷாக்காரரைத் தேடிப் பிடித்து, அவர் செலவு செய்தது போக மீதியை மீட்டுக் கொடுத்தாராம்.

இதைப் படித்தபோது மிகவும் நெகிழ்ந்து போனேன். மேலே குறிப்பிட்ட ஆண்டான் பாடலில், தனக்கு நாலுமுழத்துணி போதுமென்றும், அதற்கே வழியில்லாத நிலை இருந்தாலும் தானம் கொடுக்க வேட்டி வேண்டும் என்று கேட்க என்ன மனது வேண்டும்! மேலும் பாருங்கள்:

'பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்
பிழைத்திட வேண்டுமைய்யே
அண்டை அயலுக்கென்னால் உபகாரங்கள்
ஆகிட வேண்டுமைய்யே!'

பொருள் இல்லார்க்கு (பாவனைகள்) எதுவும் இல்லை. எளிமை இருக்குமிடத்தே தான் மனிதமும் மிளிர்கிறது. தனக்கே ஒன்றும் இல்லாத போது, மற்றவருக்குக் கொடுக்க வேண்டித் தனக்குத் தருமாறு எப்படி ஒருவன் கேட்க முடியும்? வேட்டி இருந்தால், பொருள் இருந்தால் அவனும் அவன் பெண்டு பிள்ளைகளும் வயிராற உண்டு சுகமாக இருக்கலாமே!

தன் வீட்டின் இல்லாமை தெரிந்திருந்தும், வறியவன் ஒருவன் புலம்பக் கேட்டவுடன் தனக்கென்று ஒன்றும் வைக்காமல் எல்லாவற்றையும் தயங்காமல் கொடுத்தவன் பைத்தியக்காரன் இல்லை, குழந்தை மனதுக்காரன்!

8 comments:

சுதர்சன்.கோபால் said...

நல்ல பதிவு.

எங்கேயிருந்து தான் இந்த மாதிரிச் செய்திகள் உங்கள் கண்களுக்கு மட்டும் மாட்டுதோ தெரியலை கண்ணன்.

கலக்குவதைத் தொடரவும்.

Badri said...

நெகிழ்ச்சியான பதிவு. ஒரு சிலர் பாரதி தன் குடும்பத்தை அவ்வளவாகக் கவனிக்காமல் பிறரது - மனிதராயினும் குருவிகளாயினும் - நிலைமை கண்டு இறைஞ்சி தன் கையில் இருப்பதைத் தந்துவிடுவதைக் குறை சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் தன் குடும்பத்தாரையும் பிற மனிதர்களையும் ஒரே படியில் வைத்து ஒரே மாதிரியாகப் பார்த்து யார் தேவை அதிகமாக இருக்கிறதோ அவர்களது தேவையைப் பூர்த்தி செய்வது எளிதான விஷயமில்லை.

அதைச் செய்வதற்கு என்னவொரு மனநிலையும் தைரியமும் வேண்டும்?

Kannan said...

சுதர்சன்,

இது ஹிந்துவில் ஒரு ஞாயிறு அன்று இணைப்புப் பக்கத்தில் ஒரு முழுப் பக்கம் வந்ததாக ஞாபகம். அந்த வகையில் எல்லார் கண்ணுக்கும் இது மாட்டியிருக்கும் :-)

யாராவது இதன் சுட்டியை மீட்டுக் கொடுத்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.


பத்ரி,

//அதைச் செய்வதற்கு என்னவொரு மனநிலையும் தைரியமும் வேண்டும்? //

உண்மை!

enRenRum-anbudan.BALA said...

kannan,

nijamavE kalakkaRIngka, BOSS !
vAZththukkaL, oru arumaiyAna pathiviRku ! Pl. keep it up.

Kannan said...

பாலா,

மிக்க நன்றி!

Chandravathanaa said...

நல்ல பதிவு.

மதி கந்தசாமி (Mathy) said...

yOsikka vaiththathu kannan.

Thanks.

-Mathy

Kannan said...

சந்திரவதனா,

நீங்கள் இங்கே அடிக்கடி வந்து போகிறீர்கள் என்பது குறித்து மகிழ்ச்சி.

மதி,

வாருங்கோ, ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க இந்தப் பக்கம் ...