Thursday, August 04, 2005

என் தமிழ் எழுத்து மேம்பட...

"கூடியவைரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது" - தமிழ் உரைநடை பற்றி பாரதியார்

பாரதியின் உரைநடையில் இருக்கும் எளிமைக்கும், நேரடியான சம்பாஷணை உத்திக்கும் ஒரு அதி வசீகரம் இருக்கத் தான் செய்கிறது. இந்த வித்தையின் எளிய இலக்கணக் குறிப்பாகவே இந்த மேற்கோள் பயன்படும் என்று நினைக்கிறேன் - மட்டுமல்லாமல், இந்த எளிய குறிப்பு தெளிவாக எழுதவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது.

என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது.

சின்னச் சின்ன வாக்கியங்கள் தான் அமைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. பெரிய வாக்கியங்களில் உள்ள பிரச்சனை, அதன் தொடக்கத்திற்கும், முடிவுக்கும் இடையே நான் தொலைந்து போய்விடுவது தான். கொஞ்சம் கவனம் தேவை. அதனால், முதலில் வாக்கியக் கட்டுமானத்தில், ஒற்றுப் பிழைகளில் கவனம் செலுத்தலாமென்றிருக்கிறேன்.

தமிழில் எழுதுவதே எனக்கு ஒரு இனிமையான இளைப்பாறல். ஹரியண்ணா சொல்வது போல "You should have a feel for the language". மிகச்சரி!

10 comments:

துளசி கோபால் said...

//என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. //

எனக்கும் இந்த ஆசை இருக்கின்றது. ஆனால் பேச்சுத்தமிழில் இருக்கும் ஒரு அண்மை மற்றவைகளில் இல்லையே?

என்றும் அன்புடன்,
துளசி.

டிசே தமிழன் said...

//என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது.//

கண்ணன், உங்களுக்குள்ள இதே ஆசைதான் எனக்கும் உள்ளது. கைகூடினால மகிழ்ச்சிதான்.

Kannan said...

துளசி,
டிசே,

உங்கள் தமிழ் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.

மதி கந்தசாமி (Mathy) said...

எனக்கும் இதே ஆசை/முயற்சிதான் கண்ணன்.

-மதி

செல்வராஜ் (R.Selvaraj) said...

கண்ணன், உங்கள் ஆசை எனக்கும் உண்டு. நீங்கள் இப்படிச் சொல்லியிருந்தாலும் உங்கள் எழுத்துக்கள் பெரும்பாலும் நன்றாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இப்படி மேலும் மேலும் சிறப்புற எழுத வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதாலேயே கூட இருக்கலாம். சரி, அப்படியே, முடிந்தால் இப்படிச் சிறப்பாக எழுதக் கற்றுக்கொள்வதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்றும் பகிர்ந்து கொள்ளுங்கள். எனக்கும் உதவக் கூடும். அப்படியே procrastinate பண்ணாமல் செய்வீர்களா?:-) :-)

saumya said...

The pieces you choose to write, and your style as well, are quite nice. It takes a lot of effort for me to read Tamil, which I still do, for I quite enjoy your pieces.

Are you still writing on arattaikutchery?

Saumya

Kannan said...

மதி,

உங்கள் நல்ல முயற்சிகள் (எல்லாம்) வெற்றி பெற வாழ்த்துக்கள்.

செல்வா,
பாராட்டுவதும், பிறரை ஊக்குவிப்பதும் உங்கள் இயல்பு என்ற அளவிலேயே இந்தப் பின்னூட்டையும் ஏற்றுக் கொள்கிறேன். நன்றி!

//சரி, அப்படியே, முடிந்தால் இப்படிச் சிறப்பாக எழுதக் கற்றுக்கொள்வதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்றும் பகிர்ந்து கொள்ளுங்கள். எனக்கும் உதவக் கூடும். அப்படியே procrastinate பண்ணாமல் செய்வீர்களா?:-) :-)//
இது நியாயமா?
கற்கும் முயற்சியை procrastinate செய்யாமல் இருக்க இம்மாதிரிப் பின்னூட்டங்கள் நிச்சயம் உதவும்!

Saumya,
Thanks again for the kind words. Want to keep arattaikutchery going too...
//It takes a lot of effort for me to read Tamil, which I still do//
This makes me really happy!

Ramya Nageswaran said...

உங்களுக்கு இருக்கும் அதே ஆசை தான் எனக்கும்! கொஞ்சம் பேராசை என்று கூட சொல்லலாம். பள்ளியில் இருந்த வரை தமிழ் third language. 'வீட்டில் தான் தமிழ் பேசுகிறோமே, பள்ளியில் ஹிந்தி கற்றுக் கொள்!' என்பது அப்பாவின் முடிவு. ஆனால் அவரின் பங்குக்கு வானதி பதிப்பகத்தில் நிறைய தழிழ் புத்தகங்கள் வாங்கி தருவார். நான் தான் அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்ப வருந்துகிறேன்.

தாசரதி/Dhasarathy said...

என்னதான் இருந்தாலும்... மன ஓட்டத்தின் வேகத்தை எழுத்தினில் கொண்டு வருவது மிக மிகக்கடினமாக இருக்கிறது! ஆங்கில மூலம் தமிழ் தட்டச்ச மனதும்/உடலும் ஒத்துழைக்க மறுக்கிறது.... அனைத்துக்கும் இப்போதைய தேவை "பயிற்சி!". முன்னேற வேண்டும்..

Anonymous said...

Feeling lonely? Hook up with Real Singles now for $4.99 to connect, and only $0.99 a min. A true match is only a phone call away. Give it a try 1-800-211-9293.