படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் |
பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனிடம், இரண்டு விரல்களைக் கத்தரிபோல் வைத்துக்கொண்டு “ட்வென்டி ருபீஸ்”, எனவும், ப.த.தடியன் முகம் கோபத்தில் விகாரமடையும் நேரம் தெய்வாதீனமாக பச்சை விளக்கெரிய, நான் வண்டியை வீலிங் பண்ணாத குறையாய் கிளப்பிக்கொண்டு விரையும்போது யோசித்தேன், என்னையும் நம்பி இவன் சிறுவயதிலிருந்தே அக்கம்பக்கத்தாரிடம் “எங்கண்ணன் வந்துட்டான்டா, இப்ப வாங்கடா பாக்கலாம்” என்று “இருகை வேழத்து, திண்டோள் தடக்கை”யன்களை சண்டைக்கு இழுக்கும்போது போது நான் பயத்தில் நடுநடுங்குவதை, என் மனம் பதைபதைப்பதை இந்தப் பாதகன் அறிவானோ என்னவோ, தோள்களின் மேலே என்னைவிட நிலையான தலையை உடையவன் என்று பெயர் வாங்கிய இந்த மண்டையன், அன்றொரு நாள் நாங்கள் வாண்டுகளாக இருந்த சமயம், வெயிலில் விளையாடக் கூடாதென்ற வீட்டுத்தடையில் இருந்த ஒரு பகற்பொழுதில் கட்டிலின் கீழே கவிழ்த்திருந்த செம்புக்குடமொன்றை எடுத்து நான் தாள ஜாலங்களுடன் கடம் வாசித்ததை என் வீட்டில் இருப்போர் பாராட்ட, இவன் அதே கட்டிலின் கீழே இருந்த பித்தளைத் தவலையை எடுத்துக்கொண்டு தானும் வாசிக்க முயன்றாலும், கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியாலும், அப்புறம் என் செம்புக்குடத்தின் நாதம் வராததாலும், சீக்கிரம் உற்சாகமிழந்து, சற்றே வாய் அகன்ற பித்தளை குடத்தை வைத்துக்கொண்டு என்னை மிஞ்ச என்ன செய்யலாம் என்று இவன் ஆராய்ந்ததில், அதைத் தலையின் மேல் கிரீடம் போல அணிந்துகொள்ளலாம் என்று கண்டுபிடித்து அவ்வாறு நிலைக்கண்ணாடியின் முன்னால் நின்று அழகு பார்த்த போது, அட, நமக்கு அந்தக்குடம் கிடைத்திருக்கலாம் என்று நானே ஆசைப்பட, அவனோ தன் கிரீடத்தை உலகுக்குக் காட்டவென வெளிக்கிட்டு வரசித்தி விநாயகர் கோயில் வாசலில், செட்டிப்பாளையம் ரோட்டில் போகும் மாட்டுவண்டிகளை, மாடு சாணம் போட்டால் எடுக்கவேண்டி நோட்டம் விட்டவாறு, கூடியிருந்த அக்கம்பக்கத்தாரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்த பாட்டியிடம், "பாட்டி, பாரு ராஜா மாதிரிக்கிரீடம்!" என்று காட்டப்போய், குடத்தை வைத்து விளையாடுபவனைத் திட்டச் சரியான வசவுகளைத் தன் சொற்களஞ்சியத்தில் பாட்டி தேடிக்கொண்டிருக்கும்போதே, விபரீதமாய்த் தலையிலிருந்த குடம் நழுவிக் கழுத்தில் அமர்ந்து தலையை விழுங்கிவிடவும், பாட்டியும் அருகிலிருந்தவர்களும் குடத்தை இவன் தலையிலிருந்து எடுக்க முடியாமல் திண்டாடவே, அங்கே சிறு கும்பல் சேர்ந்து, ஆளுக்காள் குடத்தை (அல்லது) இவன் தலையை வெளியே எடுக்க யோசனை சொன்னதை வைத்து, ஒராள் இவன் தோள்களை இறுக்கிப்பிடிக்க மற்றோராள் குடத்தை இழுக்கவென நடந்த முயற்சியில், பிரிக்க முடியாதது தலையும் குடமும் என்று தருமிக்கு சொன்ன கணக்காய் குடம் 'கிச்'சென்று பொருந்தியிருக்க, அடுத்த வித்தகர் சொன்ன உபாயத்தைக் கைக்கொண்டு குடத்தை அப்படியும் இப்படியுமாக ஆட்டி எடுக்கப்போய், ஆர நவமணி மாலைகளாட, கங்கை இளம்பிறை செஞ்சடையாட, என்று குடத்துடன் தலையும் சேர்ந்தாட, இவன் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு கல்லுப்பிள்ளையார் மாதிரி நிற்கவே, வெள்ளலூர் ரோட்டு முனையில் புதிதாய் பட்டறை போட்டிருந்த கொல்லர் தன் ஆயுதங்களுடன் குடத்தை வெட்டி எடுக்க முன்வந்தபோது, பாட்டி "ஐயோ, என் தவலை போச்சு" என்று வாய்விட்டலறிய தருணத்தில், மேற்சொன்ன வித்தகர்-1ம், வித்தகர்-2ம், தத்தம் உத்திகளை ஒன்றிணைத்துப் புதிய உத்தியைக் கையாண்டதில் குடம் ஒருவழியாக வெளிவந்ததும், அதை முதலில் பத்திரப்படுத்திக்கொண்ட பாட்டியின் கலைச்சொற்களஞ்சியம் திறந்து சோனாமாரியாகப் பொழியத் துவங்கியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், இந்த விபத்திலிருந்து ஆபத்தின்றித் தப்பியது பித்தளைக்குடம் தான் என்பதால் இவன் இப்படி "ட்வெண்டி ரூபீஸ்" மாதிரித் தலையில் ஏதாவது குடத்தைக் கவிழ்த்துக்கொள்ளும்போதே இப்போதெல்லாம் நான் உஷாராகிக் குடத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
---
Bohumil Hrabal என்கிற செக் (Czhec) எழுத்தாளரின் புத்தக அறிமுகம் இணையத்தில் கிடைத்தது. அவரைப்பற்றித் தேடியதில் வினோதமாக அவர் ஒரே நீள்வாக்கியத்தில் அமைந்த நாவலை எழுதியுள்ளார் என்று தெரிந்தது (அம்மாதிரி இரண்டை எழுதியுள்ளார்). அதிலொன்று Dancing Lessons For The Advanced In Age - 1964ல் இவர் சோதனை முயற்சியாக எழுதியது. இதைப் படித்துக்கொண்டிருக்கிறேன். 130 பக்கங்கள். இதை ஒரே வாக்கியமாக இருக்கும் வகையில் நிறுத்தக்குறி இல்லாமல் எழுதியிருக்கிறாரே தவிர தொடர்புச் சொற்கள் இல்லாமலேயே நிறைய வாக்கியங்களைக் கோர்த்திருக்கிறார். கதைசொல்லி தன் வாழ்க்கை வரலாற்றைச் சில பெண்களுக்கு (படு வேடிக்கையான மொழியில்) சொல்வதாய் அமைந்திருக்கும் கதையில் வாக்கியங்கள் சில இடங்களில் கோர்வையாகவும், முற்றிலும் வேறு தகவல்களை சொல்லும் இடங்களில் கோர்வையின்றி, தொடர்புச்சொற்களின்றி, வெறும் காற்புள்ளிகளைக் கொண்டு கோர்க்கப்பட்டிருக்கிறது. இந்த இடங்களில் காற்புள்ளியை நாம் நிறுத்தக்குறியாகவும் வாசித்துக்கொள்ளலாம். புத்தகத்தை நீங்கள் இங்கே படிக்கலாம்.
இதன் தாக்கத்தில் முயன்றதுதான் மேலேயிருப்பது. இதைத் தமிழில் இதற்கு முன்னால் ஆயிரம்பேர் முயன்றிருப்பார்கள். இதுதான் என்னுடைய 'டக்கு'.
கருத்துகள்
நலம். நலமறிய ஆவல். நன்றி.
என்றென்றும் அன்புடன்
பாலா
Balaji_ammu.blogspot.com
இந்தப் பின்னூட்ட உரையாடல் என்னை தொண்ணூறுகளின் இறுதிக்குக் கொண்டுசென்றுவிட்டது :)
இன்னும் தவிர்க்க முடியாத அரிப்பைச் சொறிந்து கொள்ளவே இங்கே எதையேனும் தட்டி வைக்கிறேன்.