முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலைப் பாடுதும்

மனதை வெகு நாட்களாக ஆட்கொண்டிருக்கும் ஒரு பாடலைப் பற்றிப் பேசவேண்டும். பேசுவதில் / எழுதுவதில் மிகுந்த மொழியாற்றல் இருப்பவருக்கும் ஒரு பாடல் உருவாக்கும் நெகிழ்ச்சியையும், இணக்கத்தையும் சரியாக விளக்க முடியாது. உணர்ச்சிமிகுதியில் எளிமையான வரிகளையே எழுதமுடியாத நானெல்லாம் எம்மாத்திரம்?

சுவாதித் திருநாள் இராம வர்மா திருவிதாங்கூரை 1800 களின் முற்பகுதியில் ஆண்டவர். கலைகளை, கலைஞர்களை மிகுதியும் ஆதரித்தவர், கலைஞர். பதுமநாபன் மேல் தீராக்காதல் கொண்டு பல பாடல்களை இயற்றியிருக்கிறார்.

நாடகம் (அல்லது) நாட்டியம் (நாட்டியம் என்பது ஆடலும் பாடலும் சேர்த்துக் கதை சொல்லும் ஒரு கலையே) என்ற கலைவடிவத்தின் துணைக்கே இசை பயன்பட்டது. கலையளவில் உயரமான இடத்தில் இருந்த நாட்டியமும் அதை ஆடுபவர்களும் (பெண்களேயாதலால்) நம் சமூகத்தில் இருந்த பெண்பாலினருக்கான பல கட்டுப்பாடுகளின் மத்தியில் கொச்சையான மதிப்பையே பெற்றார்கள். இப்போது கருநாடக இசையின் மேதைகள் என்றறியப்படும் பலரும் தாளம், இலயம் சார்ந்த பாடங்களை நாட்டியக் கலைஞர்களிடமிருந்தே கற்றிருக்கிறார்கள் என்பது பதிவான வரலாறு. அந்த நாட்டியக்காரர்கள் பக்தியையும் கதையாகச் சொன்னார்கள், காதலையும் சொன்னார்கள். போர்களைப் பற்றியும், பேரிடர்கள் பற்றியும் நாட்டியம் மூலம் சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த நாட்டியத்தின் பகுதியான செவ்விசையைக் கற்று அதில் இப்போது உழலும் கலைஞர்களும், அதனை நுகர்வோரும் இவ்விசை பக்திப்பரவசமானது மட்டுமே என்று குறுக்கிவைத்துள்ளார்கள்.

தியாகராஜர், சுவாதித் திருநாள், பாரதியார் என்ற வரிசையின் முன்னோடிகளும் கூடத் தத்தம் காதல்களின் நாயக / நாயகியரை தெய்வமாகவும், நண்பனாகவும், பெற்றோரகவும், உடன்பிறப்புகளாகவும், பிள்ளைகளாகவும், காதலராகவும் உருவகித்துப் பாடியதிலிருந்து ஒன்றைத் தெளிவாக உணர முடிகிறது: இன்றைக்குப் புனிதப்பிம்பம் ஊட்டப்பட்ட பலவும், இரத்தமும் சதையுமான மனித உறவுகளின் அடிப்படையிலேயே அணுகப்பட்டது.

இதனால் மேலும் நாம் ஊகிக்கக் கூடியது, இந்தக் கலை வடிவங்களை வைத்து சாமானிய மனிதரின் வேட்கைகளைப் பாடுவது / காட்டுவது எவ்விதத்திலும் அக்கலைவடிவினை மலினப்படுத்துவதாகாது.

ஜாவளிகளைப் பற்றிச் சொல்லியிருந்தேன். பச்சையான மொழியில் நேரடியாக உணர்ச்சிகளை சாமானியர் பேசுமொழியில் சொல்லும் பாடல்கள் இவை. இதிலே பல இறையைக் காதலாக பாவித்துப் பாடப்பட்டவையே. ஆனால் காதல் என்னும் உணர்ச்சி மனிதனின் வாழ்விலே இயல்பானதும் தவிர்க்க முடியாததும் ஆனவொன்று. இறையைப் பாடுதலால் மட்டுமே காதல் பாடல்கள் புனிதமடைவதில்லை. காதலைச் சொல்லுவதால் புனிதம் கெடுவதுமில்லை. இறையை உயிர்க்காதலனாய் உருவகித்து அவனைக் கட்டித் தழுவ வேண்டும் என்றொரு பெண் பாடினால், அது கேட்போரிடம் உணர்வெழுச்சியை உண்டாக்கினால் இப்பாடலின் புனிதப்பிம்பங்கள் உடைந்து சாதாரணர் நுகரும் உயர்ந்த கலையாகிறது என்றே கொள்ள வேண்டும்.

இது நிற்க.

ஜாவளியைப் போலவே காதலைப் பாடும் ஒரு வடிவம் பதம். ஆனால் இது கவித்துவ மொழியைக் கொண்டது. சுவாதித்திருநாள் பல பதங்களையும் இயற்றியிருக்கிறார். அதில் ஒன்று:

காதலனின் பிரிவால் வாடும் பெண் அவள் தோழியிடம் சொல்லுவதாக அமைந்தது. இதன் அமைப்பு பாரதியின்

“பாலும் கசந்ததடி சகியே படுக்கை நொந்ததடி
கோலக்கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி”

என்ற பாடலை மிகவும் ஒத்திருப்பது வியப்பையே தருகிறது. பாரதியின் பிறப்புக்கு முன்னரே சுவாதித்திருநாள் வாழ்ந்து மறைந்துவிட்டார்.

"இந்தத் தாபம் தரும் அயர்ச்சியை என்னவென்று சொல்வேன் ?
கருவண்டுகள் கூட்டமாக மொய்த்தாற்போன்ற கூந்தல் உள்ள இளம் பெண்ணே, சகியே

தாமரையின் காதலனான சூரியனும் கடலில் அமிழ்ந்துவிட்டான்
மலையிலிருந்து வீசும் குளிர்காற்றுப் பட்டு என் மனமும் உடலும் வாடுகின்றன

என் அன்புக்குரியவளே! உள்ளத்தில் மோகம் வளர்கிறது
தேன்மொழி, என் உடல் தளர்ந்து போகிறது

பொய்கைத் தாமரையில் மொய்க்கும் வண்டுகளின்
ரிங்காரமும் கேட்கச் சகிக்காமல் துன்பத்தையே தருகிறது”


மேலுள்ளது என் மொழிபெயர்ப்பு - இதிலே பெரிதாய் எதுவுமில்லை. இந்தப் பாடலை வேறு தளத்துக்கு எடுத்துச் செல்லுவது மலையாள மொழியில் அமைந்த உயர்ந்த மொழிக் கையாளலே.

முதலில், தோழியை "கருவண்டுகள் கூட்டமாக மொய்த்தாற்போன்ற கூந்தல்” உள்ளவளாக (அளிவேணி) விளிப்பது என்னவொரு பொருளடர்த்தி! அளி என்ற பழந்தமிழ்ச் சொல்லை அழகாகப் பயன் படுத்துகிறான் கவிஞன். கூந்தலழகை வருணிப்பதில் இவ்வளவு அழகான உவமையை நான் கண்டதில்லை. இதைக் கேட்கும்போது கருத்த, சுருண்ட குழல்களை உடைய கேரளத்துப் பெண் மனத்திரையில் வந்து போகிறாள்!

அன்புவார்த்தைகள் அழகைக் கூட்டுகின்றன - களமொழி (தேன்மொழி), ஓமலே (அன்பிற்குரியவளே) போன்ற சொற்கள் தோழிகளின் இணக்கத்தை அழகுறச் சொல்வதாகப் படுகிறது.

‘ஜலஜ பந்துவு மிஹ ஜலதியில் அணையுந்நு'! (தாமரையின் காதலனான சூரியனும் கடலில் அமிழ்ந்துவிட்டான்)
ஜலஜா என்ற சொல் தாமரையைக் குறிப்பது. இது ஒரு காரணப்பெயராகும். நீரில் (ஜல) பிறந்தது (ஜா) என்ற பொருள் வரக்கூடியது. நீரில் பிறந்தது தாமரை. பந்து - உறவினன் (தாமரையின் காதலன் என்றே வைத்துக்கொள்கிறேன்)
சூரியனை இப்படிச் சுற்றிவளைத்துக் குறிப்பது கவித்துவத்துடனேயே சொல்விளையாட்டாக அமைகிறது.

மேலும், இப்பாடல் படிமங்களூடே நம் மனத்தில் காட்சியாய் விரிவது மற்றோரழகு - சூரியன் கடலில் அமிழ்ந்து மாலையில் இளங்காற்று வீசுவதும், அளிவேணியும், வண்டுகளின் ரீங்காரமும்…

பாடல் வரிகள்:
Pallavi
alar Sara parithaapam chol_vathi-
nnaLivENi paNi baalE
Anupallavi
jalajabandhuvumiha jaladhiyilaNayunnu
malayamaaruthamEtu mama manamathitharaam batha
vivaSayaayi sakhi (alaR)

Charanam
vaLarunnoo hr~di mOhamennOmalE
thaLarunnoo mama dEham kaLamozhi
kusumavaaTikayathiluLavaayOraLikulaarava-
mathihakELppathumadhikamaadhinidaanamayi sakhi
(alaR)

இதைப்பற்றிப் பேசும்போது சுவாதித் திருநாள் என்ற மலையாளத் திரைப்படத்தையும் சொல்லியாகவேண்டும். 87ல் வெளிவந்த இத்திரைப்படத்தில் கன்னட நடிகர் அனந்த் நாக் சுவாதித் திருநாளாக நடித்திருந்தார். கலைஞன் தன்னுலகில் இருப்பவனாயிருந்தாலும் சமூகத்தின் மேலும், மற்ற உயிர்கள் மேலும் கரிசனம் கொண்ட எளிதில் கரைந்து விடும் மனதுடையவனாக இருக்கிறான் என்பது என் எண்ணம். அவ்வாறாக உலக நடப்புகளினின்று விலகித் தன்னுலகில் அலையும் ஒருவனுக்கு இருக்கும் ‘தொலைந்து போனது போன்ற’ முகபாவம் உள்ள சுவாதியாக அனந்த் நாகின் தேர்வு அருமையான ஒன்று.

திரைப்படத்தில் சுவாதியின் அத்தை கதாபாத்திரம் ஏற்று நடித்த ஶ்ரீவித்யாவுக்குத் தாம் இயற்றிய ஒரு பாடலைக் காட்டுகிறார் சுவாதி. அப்போது அத்தை சொல்லுகிறார், “உண்ணி, குறச்சு லலித பதங்கள் உபயோகிக்காமாயிருந்நு” (குழந்தாய், சற்றே எளிமையான சொற்களைக் கையாண்டிருக்கலாமே) சுவாதியின் பாடல்கள் எளிய மொழியில் இயற்றப்பட்டவை அல்ல. ஆனால், கவித்துவ ஒழுங்கும், சொல், மற்றும் பொருளடர்த்தியும் கொண்டதாக இருக்கும் இவற்றைக் கேட்கக் கேட்கச் சுவையாக இருப்பதாய் உணர்கிறேன். கன்னடமாயிருப்பினும், மலையாளமாயிருப்பினும், செம்மையான மொழியைக் கேட்கும்போது அதிலே பழந்தமிழ்ச் சொற்கள் பலவற்றைக் கேட்க முடிவது இன்னொரு வகை இன்பம்.

இப்பாடல் சுருட்டி இராகத்தில் அமைந்துள்ளது. இந்த இராகம் கேரளப் புலத்திற்கும், அம்மொழிக்கும் நன்றாய் இயைந்து வருவதாக எனக்கு மட்டுமே தோன்றுகிறதா?

திரைப்படத்திலிருந்தே பாடல்:

பிற்சேர்க்கை: 

        'அலர் சர' என்பதை 'அயர்ச்சி' என்று தவறாகப் பொருள் கொண்டிருக்கிறேன் (அலசத என்ற சொல் அயர்ச்சி / சோம்பல் என்ற பொருள் தருவது). சுவாதியின் பல பதங்களில் காமனைக் குறிக்கும் தொடர்கள் வருவதைப்  பின்னல் தெரிந்துகொண்டேன்.  இப்பாடலின் முதல் வரியின் பொருள் இப்படியிருந்திருக்க வேண்டும்:

          காமன் தரும் தாபத்தை என்னென்பேன்...


         நான் புரிந்துகொண்ட வகையில் மலர் சரம் தொடுக்கும் மன்மதனை இப்படியெல்லாம் குறிக்கிறார்.

         அலர் சர(ன்) 
         அல்லித் தார் சர(ன்) - "அல்லித்தார் சர சமனாகியொரு கணவன்" (தருணி ஞான் என்ற பதம்)
         நீரில்தார் சர(ன்)  - "நீரில் தார் சர சதர்சன் வருமீ மார்க்கம்" (அளிவேணி  என்ற பதம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...