முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நா ஸொல்ல வர்றது என்னன்னா...

வார்த்தைகள் நைந்து நார்போலாகிவிட்டது தெரிந்ததே. இதன் காரணமாகவே இவைகளை உபயோகப்படுத்தும் போது மிகவும் கவனமாக இருத்தல் அவசியமாகிறது. உணர்த்த விரும்புதையெல்லாம் சொல்லில் அடக்கிவிடுவது எளிதானதாகத் தோன்றவில்லை.

இப்படி முயற்சி செய்து வார்த்தைகளைத் திக்கித் திணறிச் சேர்க்கிறேன். இதிலே ஒவ்வொன்றிலும் என் உழைப்புத் தெரியும். இவ்வார்த்தைக் கோர்வையில் ஒவ்வொரு வார்த்தை மட்டுமன்று, அதனிடையே இடும் மௌனக் கார்வைகளும், விசும்பல்களும், செருமல்களும் கூட எனக்குப் பொன் போன்றவை. அவைகளின் மூலம் நான் ஊடாடுகிறேன். எனக்கு இந்த ஊடாடல் அவசியம். இந்தச் செருமல்களை, விசும்பல்களை வெற்றை இட்டு நிரப்பும் நோக்கிலன்றி, என்னை உணர்த்தும் நோக்கிலே கவனமாகச் சேர்த்திருக்கிறேன். வார்தைகளால் சொல்லமுடியாததை இப்படிச் சொல்லவேண்டியுள்ளது. இவைகளையெல்லாம் கொண்டு நான் உணர்த்த வருவதை நீ புரிந்துகொள்ளுதல் மிகவும் அவசியம். இந்த அவசியம் பொருட்டே, எனது கவனமும், உழைப்பும், வலியும்.

நீயோ, நான் இறுதியாக என்ன சொல்ல வருகிறேன் என்று அறிய விரும்புகிறாய். இது எனக்கு மிகுந்த அயர்ச்சியைத் தருகிறது.

என் வார்த்தைகளும், வார்தைகள் அல்லாதவையும் உணர்த்த முடியாததை ஒரேயொரு இறுதியான ஒற்றை வரியில் சொல்ல முடியும் என்று உனக்குத் தோன்றுகிறதா?

ஆயின், வார்த்தைகளை விரயம் செய்யாமலிருப்பது எப்படி என்று நீ எனக்குக் கற்றுத் தர வேண்டும்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன்,

'அருமையாக இருக்கிறது' என்று வழமையான, கீறல் விழுந்த, தட்டையான வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. :(

இடுகை முழுவதும் அப்படியே மனதில் இறங்கிவிட்டது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ப்ளொக்கர் பீட்டாவுக்கு மாறிட்டீங்க போலிருக்கு. தமிழ்மணம் பதிவர் toolbar இடுவதற்கு உதவும் சுட்டி

http://blog.thamizmanam.com/archives/51

இந்த இடுகையை, புத்தகவாசத்துக்காக இங்க வந்தப்ப பார்த்தேன். இல்லைன்னா, அந்த வாசிப்பு அனுபவம் கிடைக்காமப்போயிருக்கும். :(
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
மதி,

உங்களுக்கு இந்த இடுகை பிடித்திருப்பதில் மகிழ்ச்சி.

அப்புறம், நீங்கள் கொடுத்த சுட்டியைப் பார்த்து வேண்டிய மாற்றங்களைச் செய்துவிடுகிறேன்.

புத்தகவாசத்தில் என் இடுகைகளை இட்டமைக்கும் நன்றி :-)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

  டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.  இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான். Ejercicio cerebral para las personas mayores. pic.twitter.com/wEMLDTjti0 — Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025 இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு. மூதாட்டிகள்      - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது) மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை   அநிச்சயமான காடுகளில் இருந்து  தெளிவற்ற குறிகளும் சொல்வதில்...

பொருளுள் சிக்கிய மொழியை விடுவித்தல்

என் மகள்களுடன் ஒருநாள் விளையாட்டாக (ஆங்கிலத்தில்) பெயரடைகளுக்கும் வினையடைகளுக்குமான வித்தியாசத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். மீனா இவ்விரண்டையும் வேறுபடுத்தத் தெரியவில்லை என்றதால் அந்தப்பேச்சு வந்தது. நான் சொன்னேன்: “வினையடைகள் வினைச்சொல்லை விளக்குவன. ஆனால், வினைச்சொற்கள் என்பன வினைகளின் பெயரைக்குறிப்பதால் அவைகளும் பெயர்ச்சொற்களே. அப்படிப்பார்த்தால், வினைச்சொல் என்றொன்று இல்லவேயில்லை, எல்லாமே பெயர்ச்சொற்கள்தாம். அதன்படி, வினையடைகள் எல்லாம் பெயரடைகளே. இன்னும், பெயர்ச்சொல்லை விவரிக்கும் பெயரடைகளும், அந்த விவரிப்பின் பெயரேயாதலால் அவைகளும் பெயர்ச்சொற்களே! அப்படியாக, மொழி பெயர்சொற்களால் மட்டுமேயானது.” இருவரும் என்மேல் (இன்னும்) கொலைவெறியில் இருக்கிறார்கள். ஆனால் மொழி எப்போதுமே எல்லாவற்றிற்கும் பெயர்சூட்டுவதையே செய்கின்றது. மரம், காற்று, பூக்கள், என்றெழுதுவதெல்லாம் அந்தப் பொருட்களை நினைவுபடுத்தினாலும் மரம் என்று நான் இங்கே எழுதியிருப்பது மரமாகாது. சொற்கள் வெறும் குறியீடுகளே. இல்லாத பொருட்களைச் சொல்லால் இட்டுநிறைப்பது மொழி. என். எஸ். கிருஷ்ணனின், சொற்களின் முதலெழுத்தை மாற்றிப்போட்டுப் பேச...