முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Procrastination

மனம் பார்க்க விரும்புவதையே கண் பார்க்கிறது. கொட்டை எழுத்தில் வருமான வரி Returns சமர்ப்பிக்கக் கடைசித் தேதி நீட்டிப்பு என்று இந்தச் செய்தித் துணுக்கில் படித்த போது, விபரங்களையும் கொஞ்சம் கவனமாகப் பார்த்திருக்கலாம். அப்படிப் பார்த்திருந்தால் அந்நீட்டிப்பு குஜராத், மஹாராஷ்டிர மாநிலங்களுக்கு மட்டுமே என்ற உண்மை தெரிந்திருக்கும். இப்போது கடைசித் தேதியைத் தவறவிட்டாயிற்று. எல்லாம் ஒரு மெத்தனம் தான் - என்ன ஆனாலும் ஒரு மாதத்திற்காவது இதை நீட்டிப்பார்கள் என்று. வருமான வரியைச் சரியாகக் கட்டியும், உரிய நேரத்திற்கு இதைச் சமர்ப்பிக்காததில் அபராதம் கட்ட வேண்டி வரும் என்று நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அபராதம் இருக்கட்டும். அப்புறம் பார்க்கலாம் என்று ஒரு வேலையை ஒரு காரணமும் இன்றித் தள்ளிப் போடுவதைத் தடுக்க என்ன செய்வது? Procrastination என்ற இதை வெற்றி கொள்வது எப்படி என்று ஒரு புத்தகம் கூட வாங்கி விட்டேன். வழக்கம் போல, இதைப் படிப்பதையும் ஒத்தி வைப்பு செய்தாயிற்று!

எந்த மாறுதலையும் வெளியிலிருந்து திணிக்க முடியாது. மாற்றத்தின் தேவை உள்ளிலிருந்து வர வேண்டும். புத்தகங்கள் படித்தும் யாதொரு பிரயோஜனமுமில்லை என்று தெரிகிறது. இன்று அபராதமாகப் பணம் செலவழிகிறது - இது ஒரு இழப்பாகத் தெரியவில்லை. பின்னொருநாள் வாய்ப்புக்களையும், மனிதர்களையும், நட்பையும், நல்ல உறவுகளையும் அபராதமாக இழக்க நேருமுன் மாற்றம் வருமாக!

கருத்துகள்

dondu(#11168674346665545885) இவ்வாறு கூறியுள்ளார்…
நாளை என்று வைக்கும் காரியங்களை இன்றே செய்க என்னும் தாரக மந்திரத்தை தன் அலுவலகச் சுவரில் எல்லோருக்கும் தெரியும்படி போட்டுக்கொள்ளுமாறு ஒரு வியாபாரிக்கு அவர் நண்பர் அறிவுரை கூறினார்.

சில நாகள் கழித்து நண்பர்கள் இருவரும் சந்தித்தப் போது பலன் ஏதாவது தெரிந்ததா என்று வியாபாரியிடம் அவர் நண்பர் கேட்டார்.

வியாபாரி கூறினார்: "என் காசாளர் 10 லட்ச ரூபாய் இரும்புப் பெட்டியிலிருந்து கிளப்பிக் கொண்டு கம்பி நீட்டினார், என் பெண் காரியதரிசி என்னைப் பற்றி வருமான வரி இலாகாவுக்கு மொட்டைப் பெட்டிஷன் போட்டார், என் மகன் லேடி டைப்பிஸ்டுடன் ஓடிப் போனான்."

அன்புடன்,
டோண்டு ராகவன்
Sud Gopal இவ்வாறு கூறியுள்ளார்…
நான் கூட என்னோட ஒரு நண்பருக்கு இந்த எக்கனாமிக்ஸ் டைம்ஸ் செய்தித் துணுக்கை அனுப்பினேன்.அங்கே என்ன ஆச்சின்னே தெரியலை...

ஆனால் நீங்க ஆகஸ்ட் 31தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள e-filing மூலம் ரிடர்ன்ஸ் பதிவு செய்யலாமில்லையா???

//பின்னொருநாள் வாய்ப்புக்களையும், மனிதர்களையும், நட்பையும், நல்ல உறவுகளையும் அபராதமாக இழக்க நேருமுன் மாற்றம் வருமாக//

திருவாசகமய்யா...
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
டோண்டு, நல்ல கதை சொன்னீர்கள் :-)

சுதர்சன்: விசாரித்ததில், நாம் செலுத்தவேண்டிய வரி பாக்கி எதுவும் இல்லாத நிலைக்கு, அபராதம் தேவையில்லை என்று சொல்லி விட்டார்கள்.
வானம்பாடி இவ்வாறு கூறியுள்ளார்…
//எந்த மாறுதலையும் வெளியிலிருந்து திணிக்க முடியாது. மாற்றத்தின் தேவை உள்ளிலிருந்து வர வேண்டும். //

மிக நல்ல வரிகள்!
dondu(#11168674346665545885) இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களிடம் கூறுவதற்கென்ன. நான் யதேச்சையாகத்தான் 31-ஜூலைக்குள் கண்டிப்பாக ரிடர்ன் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்தேன். நீங்களாவது ஒரு மாதம் நீட்டிப்பு எதிர்பார்த்தீர்கள். என் விஷயமோ அது கூட இல்லை. ஆகஸ்டு 31 தான் கடைசி தேதி என்று ஒரு குருட்டு எண்ணம்.

ஜூலை 29 அன்றுதான் எனக்கு விஷயத்தின் தீவிரம் புரிந்தது. உடனே பேங்குக்கு ஓடி பெற வேண்டிய வருமான சான்றிதழ் எல்லாம் ஒரே விசிட்டில் பெற்றேன். மைலையில் உள்ள சீதாராமன் கடைக்கு சென்று நபி கைடையும், படிவம் 2-D யும் வாங்கினேன். அடுத்த இரண்டு நாட்கள் பேய் மாதிரி உழைத்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி ரிடர்ன் சமர்ப்பித்தேன். என் வீட்டம்மா ஸ்டைலாக தன் ரிடர்னில் கையெழுத்திட்டதுடன் சரி. இப்படித்தான் கடைசி நிமிஷத்தில் குதிப்பதா என்று செல்லமாக ஒரு தட்டு வேறு தட்டிவிட்டு சென்றார்.

அவருடையது nil ரிடர்ன். வருமானவரி அலுவலகத்தில் வாங்க மறுத்து விட்டனர். ஏனெனில் தேவையில்லையாம். இது முன்பே தெரிந்திருந்தால் சில மணி நேர வேலையாவது மிச்சமாயிருந்திருக்கும்.

பரவாயில்லை, all's well that ends well.

அன்புடன்,
டோண்டு ராகவன் .
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன்,

Procrastination குறித்து, பதினெட்டாம் நூற்றாண்டு எழுத்தாளர் சாமுவேல் ஜான்ஸன் கூறியது இதோ:

ஓit is one of the general weaknesses, which, in spite of the instruction of moralists, and the remonstrances of reason, prevail to a greater or less degree in every mind.ஔ

அதனால், நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை ;-)

என்றென்றும் அன்புடன்,
பாலா
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
Sudarshan,

நன்றி.

டோண்டு, நான் பயன்படுத்துவது 2E, சரள். படிவம்-16 இருந்தால் குழந்தை கூட நிரப்பி விடும். நபியைத் துணைக்கு அழைக்கும் அளவு குழப்பங்கள் இல்லை.

பாலா, procrastination பற்றிய இம்மாதிரி கருத்துக்களை நம்பித்தான் இருக்கிறேன் :-)
dondu(#11168674346665545885) இவ்வாறு கூறியுள்ளார்…
"நான் பயன்படுத்துவது 2E, சரள். படிவம்-16 இருந்தால் குழந்தை கூட நிரப்பி விடும்."

நான் கூட அதைத்தான் பாவிக்கிறேன். இருப்பினும் அப்படிவத்தை நிரப்பத் தேவையான அடிப்படைத் தகவல்கள் ஒரு முழு ஆண்டு கணக்கையும் பார்த்தால்தான் கிடைக்கும். நாம் கணக்கு போடுவதற்காக உபயோகப்படுத்திய தாள்களை எல்லாம் சரியாக அடுக்கி வைத்து கொள்ள வேண்டும். அது எல்லாத்துக்கும்தான் இரண்டு நாட்கள். சரளை நிரப்ப 30 நிமிடங்கள். அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

கிச்சா பாறைகள்!

Screenshot from https://www.poetryfoundation.org/poems/42839/i-know-a-man பாண்டியில் படித்துக்கொண்டிருக்கும்போது (இது அந்தக்காலத்திற்கான இடுகுறிச் சொற்றொடர் - உண்மையில் ‘படித்த’ நினைவு இல்லை) ஒரு பின்னந்திப்பொழுதில் தெருத்தெருவாகச் சுற்றித்திரிந்தபோது கிச்சா, இதரர்களுடன் ஒரு கோவிலுக்குள் போன நினைவிருக்கிறது. மறுநாள் ம்யுபி என்ற மைக்ரோகபுராசஸர் இழவுத் தேர்வு இருந்தது பல்கலையில். கோவிலில் ஓ எஸ் தியாகராஜன் கச்சேரி என்று தட்டி வைத்திருந்தார்கள். ஓ எஸ் டி பின்னாட்களில்  கச்சேரி பண்ணுகிறேன் என்ற பெயரில் ஒப்பேத்தல் மன்னராக இருந்தாலும்  (இதைச் சொன்னதற்காக என்னை அடிக்க வராதீர்கள்) அருமையான பாடாந்தரம், வெண்கலக்குரல், களையான கச்சேரிகள், என்று 93ல் என் விருப்பத்திற்குரியவராகவே இருந்தார்.   நான் தட்டியைப்பார்த்துப் பரபரத்தேன். “ஓ எஸ் டி பாடறாரு மச்சான் - என்ன, எங்கன்னு விசாரிப்போம்”. இந்தவிடத்தில் கிச்சா அவனுடைய பாணியில் என்னைத் தடுத்தாட்கொண்டான்.  “ ஓ எஸ் தியாகராஜனையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், நாம  இப்ப ம்யுபி தியாகராஜனை கவனிப்போம்”... (முதுநிலைப் படிப்பில் அந்த அர...