முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நாயிற் கடையாய்...

  ச முகமதலியின் நெருப்புக்குழியில் குருவி  (இயற்கையியல் சார்ந்த இலக்கிய விமரிசனக் கட்டுரைகள் - அங்குசம் வெளியீடு, டிசம்பர் 2012 )  என்ற நூலைப் படித்தேன். பழந்தமிழிலக்கியம் தொட்டுச் சமகாலப் படைப்புகள் வரையில் காட்டுயிர்கள் பற்றிய அறிவியல் பார்வையற்று இருப்பதையும் செய்தி ஊடகங்கள்  காட்டுயிர் பற்றிய செய்திகள் மற்றும் கட்டுரைகளில் காட்டும் அலட்சியம் பற்றியும் எழுதியிருக்கிறார். எளிய உயிர்களாகப் பார்க்கப்படும் பன்றி, கழுதை, நாய் என்பன போன்றவற்றை முன்வைத்து மனிதரை ஏசுவது குறித்துத் தன் ஆட்சேபங்களை, எதிர்ப்புகளைக் கடினமான, உறுதியான குரலில் பதிவு செய்கிறார். எளிய மனிதர் முதல் அரசியல் பிரமுகர்கள், திருவருக்கள், என்று யாரையும் விட்டுவைக்காமல் சேர்த்துச் சாடியிருக்கிறார்.  நாம் இயல்பாகப் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் மிருகங்கள் குறித்த சொலவடைகள் பொதுப்புத்தியில் மிருகங்கள் குறித்த தவறான புரிதல்களுக்கு வழிவகுப்பதாகச் சொல்லும் அவர், இம்மாதிரியானவற்றைத் தேடிக்கண்டுபிடித்து அவற்றிற்கான சரியான அறிவியல் தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார். இப்புத்தகத்தில் (பன்னிரண்டு ஆண்டுகளுக்...
சமீபத்திய இடுகைகள்

வைக்கம் முகம்மது பஷீரும் மீசை மாமாவும்...

  மேட்டுப்பாளையம் ரோட்டில் ஓடிக்கொண்டிருந்த ’ஜீப்’சட்டென்று நிதானமிழந்து, ஒரு குலுங்கல் குலுங்கி, சறுக்கி, ஒருவழியாக சாலையோரத்தில் நின்றது - பங்க்சர். மாமாவின் சாம்பல் சொம்புக்குள்ளே பத்திரமாகவே இருந்தது. மின்சார உலையில் மாமாவை அன்றைக்குக் காலையில்தான் எரியூட்டியது. ஒருமணிநேரத்தில் ஒருபிடி சாம்பல் - மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் அதைக்கலக்கவே இந்தப் பயணம். ’நிமித்தங்களை’ நம்புகிறவர் சித்தப்பா - “இது மாதிரி சமயங்களில் இப்படி ஏதாவது நிமித்தங்கள் காட்டும்” என்றார். மாற்றுச்சக்கரத்தைப் பொருத்தி எல்லோரும் இளநீர் குடித்தோம். திக்காலுக்கொன்றாய் சிதறிக்கிடக்கும் மாமாவின் அக்காள் / தங்கைகளின் மக்கள் நாங்கள். மாமா பிள்ளைகளுடன் சேர்த்தால் ஏறக்குறைய 22 பேர் கொண்ட இரண்டு கிரிக்கெட் அணியினர் தேறுவோம். மாமா யாரையும் விட்டுக்கொடுக்காதவர். எல்லோரும் எல்லாருடனும் எப்போதும் தொடர்பிலிருக்கவேண்டும் என்று விழைபவர். எனக்கும் அந்த விழைவு உண்டு. இந்த 22 பேரும் ஒன்றாய்க் கூடி மகிழவேண்டும் என்று அடிக்கடி திட்டமிடுதலும், எல்லோரும் இயைந்து ஒன்றாய்ச்சேர சமயம் கைகூடுவதில்லையாதலால் அதைக் கைவிடுவதுமாய் இருப்போம். இ...

புனைவு

Photo by Magesh Babu கடைந்த மோரில் வெண்ணெய்யைக்  'கட்டிப்'-       பிடிப்பது போல  யோசித்துச் சேர்த்தது  டம்பளர் பாலில்  கருப்புப் பூச்சியாய்ப்   பிடிக்கப் பிடிக்க  நழுவும்,  கண்ணை  மூடிமூடித் திறந்தாலும்  கிடைப்பதில்லை -  கொஞ்ச நேரம்  அசிரத்தை-பாவனை        செய்தும்,  பிடிக்கப் போனால்  மறுபடி ஓட்டம் உள்ளதை உள்ளபடிச் சொல்லுவது  உள்ளபடியே  மாயக்கண்ணாடி மட்டுந்தான் மற்றபடி, இதையும் சேர்த்து  எல்லாம் பாசாங்கு!

பிரதியாகிய நானும், வாசகியாகிய நீயும்

  சிட் கார்மனின் "It isn't for want" என்ற கவிதை  படித்ததும் மொழிபெயர்க்கத் தூண்டியது.  ஆங்கிலக்கவிதை இங்கே . Photo by Magesh Babu என் மொழிபெயர்ப்பு: எதையும் பேசவோ  உன்னிடம் சொல்லவோ   உனக்கு அறியத்தரவோ  வேண்டும் என்பதனாலல்ல - போக முடியாதபடி    உன்னை நிறுத்தி வைக்கவே -   இங்கு நான் நானாகிறேன்  நீ இருக்கும் வரை - நீ இருக்கும் வரை --- கவியின் / கவிதையின் (இப்படியான) வாசிப்பவருடனான நேரடி உரையாடல் அரிதானது.  ஆங்கிலப் பிரதியில் பலமுறை தோன்றும்  you   தமிழின் வேற்றுமை உருபுகளால் வெவ்வேறு வடிவங்களைக் கொள்கின்றது. ஆனால் அது அவ்வாறு வருவது ஒரு மந்திர உச்சாடனை போல கவிதையின் ஒலியமைப்புக்கு அழகு சேர்க்கிறது. இவ்வளவு ' நீ ' இருக்குமிடத்தில் ' நான் ' ஆங்கிலத்தில் மறைந்தேயிருக்கிறது. தமிழில் 'நான்' இல்லாமல் மொழிபெயர்க்க முடியுமானாலும் அந்த வரி தட்டையாகவே அமையும்.  நான் இங்கே முக்கியமல்ல - நீயே இங்கு நிறைந்திருக்கிறாய். உன்னைச் சுற்றியே எல்லா இயக்கமும்.  'நான்' பிரதி / கவி என்பது ஒரு வாசிப்பு. ஆனால் எவ்வளவு சாத்தியங்களை உள...

பொருளுள் சிக்கிய மொழியை விடுவித்தல்

என் மகள்களுடன் ஒருநாள் விளையாட்டாக (ஆங்கிலத்தில்) பெயரடைகளுக்கும் வினையடைகளுக்குமான வித்தியாசத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். மீனா இவ்விரண்டையும் வேறுபடுத்தத் தெரியவில்லை என்றதால் அந்தப்பேச்சு வந்தது. நான் சொன்னேன்: “வினையடைகள் வினைச்சொல்லை விளக்குவன. ஆனால், வினைச்சொற்கள் என்பன வினைகளின் பெயரைக்குறிப்பதால் அவைகளும் பெயர்ச்சொற்களே. அப்படிப்பார்த்தால், வினைச்சொல் என்றொன்று இல்லவேயில்லை, எல்லாமே பெயர்ச்சொற்கள்தாம். அதன்படி, வினையடைகள் எல்லாம் பெயரடைகளே. இன்னும், பெயர்ச்சொல்லை விவரிக்கும் பெயரடைகளும், அந்த விவரிப்பின் பெயரேயாதலால் அவைகளும் பெயர்ச்சொற்களே! அப்படியாக, மொழி பெயர்சொற்களால் மட்டுமேயானது.” இருவரும் என்மேல் (இன்னும்) கொலைவெறியில் இருக்கிறார்கள். ஆனால் மொழி எப்போதுமே எல்லாவற்றிற்கும் பெயர்சூட்டுவதையே செய்கின்றது. மரம், காற்று, பூக்கள், என்றெழுதுவதெல்லாம் அந்தப் பொருட்களை நினைவுபடுத்தினாலும் மரம் என்று நான் இங்கே எழுதியிருப்பது மரமாகாது. சொற்கள் வெறும் குறியீடுகளே. இல்லாத பொருட்களைச் சொல்லால் இட்டுநிறைப்பது மொழி. என். எஸ். கிருஷ்ணனின், சொற்களின் முதலெழுத்தை மாற்றிப்போட்டுப் பேச...

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

  டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.  இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான். Ejercicio cerebral para las personas mayores. pic.twitter.com/wEMLDTjti0 — Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025 இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு. மூதாட்டிகள்      - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது) மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை   அநிச்சயமான காடுகளில் இருந்து  தெளிவற்ற குறிகளும் சொல்வதில்...

அம்மா இறந்தபோது நிம்மதியாயிற்று

  மலையாளக் கவிஞர் கல்பெட்டா நாராயணனின் பேச்சைக் கேட்பது ஒரு சுகம். பேசும் சொற்களை அன்றைக்குதான் கண்டுபிடித்தது போல கண்கள் மின்ன, சொற்-ஸ்வரங்களை நீட்டிச் சுருக்கி, வாக்கியங்களை அவர் இசைப்பார். உள்ளடக்கம் என்னவாயிருந்தாலும் பேசும் பாங்கே எல்லாவற்றையும் சுவாரஸ்யமானதாக்கிவிடும்.  வயநாடு இலக்கிய விழாவில் அவர் பேசும்போது, தாம் எழுதிய 'ஆசுவாஸம்' என்ற கவிதையைச் சொன்னார். மலையாளத்தில்தான் இன்னும் கவிதை 'பாடுகிறார்கள்'. சில கவிதை 'சொல்லல்கள்' இசையுடன் பாட்டாகவே செய்யப்படுவதுண்டு.  வடமொழிக் கலப்பு இருந்தாலும், தமிழின் 'சென்சிபிலிட்டி'யே மலையாள மொழிக்கும் பொருந்திவருகிறது. இதனாலேயே இக்கவிதைகளை நாம் தமிழக் கவிதைகள் போலவே வாசிக்கலாம், அனுபவிக்கலாம். இனி, 'ஆசுவாஸ'த்தின் (என்) மொழிபெயர்ப்பு: நிம்மதி  - கல்ப்பெட்டா நாராயணன் (மலையாளம்)  அம்மா இறந்தபோது  நிம்மதியாயிற்று.  இனி நான் இராப்பட்டினி கிடக்கலாம்  தொல்லை பண்ண யாரும் இல்லை.  இனி உலர்ந்து காயும்வரை நான் தலைதுவட்ட வேண்டியதில்லை யாரும் முடிக்கற்றையை விலக்கிப் பார்க்கமாட்டார்கள்.  இனி நான் கிணற்றின் ஆள்...